கல்வியில் மன அழுத்தம்: தற்கொலையை நாடாமல் மாணவர்களை காக்க 5 வழிகள்

கல்வியில் மன அழுத்தம் படத்தின் காப்புரிமை Getty Images

(மும்பையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஆர்த்தி ஷ்ரோஃப், மாணவர்கள் ஏன் தற்கொலையை நாடுகிறார்கள்? அதிலிருந்து அவர்களை மீட்க என்ன வழி என்று இந்த கட்டுரையில் விவரிக்கிறார். இவர் தொடர்ந்து இது குறித்து இந்திய ஊடகங்களில் எழுதியும், பேசியும் வருகிறார்.)

சமீபத்தில், தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 60 நாட்களில் 50 மாணவர்கள் தங்கள் உயிரை தற்கொலை மூலம் மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் மருத்துவம் மற்றும் பொறியல் படிக்கும் மாணவர்கள்.

வளமான எதிர்காலத்திற்காக தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற அழுத்தம் மாணவர்களுக்கு தொடர்ந்து தரப்படுகிறது. ஆனால், இந்த அழுத்தம் மாணவர்கள் இறக்க காரணமாக அமைகிறது.

மன உளைச்சலின் ஆரம்பக்கட்டத்தை எப்படி கண்டறிவது?

உறக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், பசியின்மை, உற்சாகமின்மை - இவைதான் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள். எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்று இருப்பது, தன் மீதே கழிவிரக்கம் கொள்வது, தன்னையே வெறுப்பது ஆகியவை எண்ணங்களிலும் நடவடிக்கைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

கல்வி சம்பந்தமான மன உளைச்சலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த 5 வழிகளை இங்கே பட்டியலிடுகிறோம்.

1. ஆரோக்கியமான உத்திகள்:

விளையாடுதல், படித்தல், எழுதுதல், வரைதல், இசைத்தல், சமைத்தல் போன்ற படைப்பாக்கம் மிகுந்த விஷயங்கள் மாணவர்களிடையே நிலவும் மன அழுத்தத்தை குறைக்கும் என்று பல ஆய்வுகள் கூறி உள்ளன. அதுபோல, தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் தியானத்தில் ஈடுபடுவது, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் உரையாடுவது ஆகியவை மன அழுத்தத்தை எதிர்கொள்ள சிறந்த வழிகள்.

படத்தின் காப்புரிமை Getty Images

2. எதிர்மறை உத்திகளை தவிர்க்க வேண்டும்:

மன அழுத்தத்தை எதிர்கொள்ள போதை மருந்துகள் உட்கொள்வது, மது அருந்துவது, தன்னைதானே தாக்கிக் கொள்வது, அதிகமாக கைபேசி பயன்படுத்துவது மாணவர்களின் பழக்க வழக்கங்களை சிதைக்கின்றன.

3. உரையாடல் :

மாணவர்கள் தம் சக மாணவர்களுடன் உரையாட வேண்டும். அவர்களிடம்தான், தம் பிரச்னைகள் மற்றும் சவால்களை பகிர்ந்துக் கொள்ள முடியும். இது `தான்` தனியன் அல்ல என்ற உணர்வை ஏற்படுத்தும்.

கல்வி நிலையங்களும், திறன் மிகுந்த சமூக பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோரைக் கொண்ட உதவிக் குழுக்களௌ ஏற்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் ஏற்படுத்தப்படும் இது போன்ற குழுக்கள், நிறுவனத்திற்கு எதிரான விரோத உணர்வை குறைக்கிறது.

தம்மை தவறாக எண்ணிவிடுவார்கள், திட்டுவார்கள் போன்ற விஷயங்களினால்தான் பல மாணவர்கள் தம் பெற்றோர்களிடம் பிரச்சனைகளை பகிர்ந்துக் கொள்வது இல்லை. இந்த பிம்பத்தை பெற்றோர்கள் உடைக்க வேண்டும். பெற்றோர்கள் தம் பிள்ளைகளுடனான உரையாடலை வெறும் படிப்பு, தேர்வு முடிவு என்று சுருக்கிக் கொள்ள கூடாது.

4. மாற்று விருப்பங்கள்:

மாணவர்கள் எப்போதும் தொழில் வாழ்க்கை குறித்து மாற்று விருப்பங்களையும் கொண்டிருக்க வேண்டும்.

பெரும்பாலும் மாணவர்கள் ஒற்றை லட்சியத்தை கொண்டிருக்கிறார்கள். கல்வி, கல்லூரி, நுழைவுத் தேர்வு மட்டும்தான் அவர்கள் லட்சியங்களாக இருக்கின்றன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய தூய்மை இந்தியா ரோபோக்கள்

இது போன்ற ஒற்றை லட்சியங்களால், 'கருப்பு - வெள்ளை' அல்லது 'எல்லாம் அல்லது ஒன்றுமில்லை' என்று நம் மாணவர்கள் சிந்திக்கிறார்கள். பலர் மாற்று வாய்ப்புகளை யோசிப்பதே இல்லை. தங்களுக்கு கிடைக்கும் தெரிவுகளையும் அவர்கள் சுருக்கிக் கொள்கிறார்கள். இவை, தங்களுக்கு சாதகமாக சூழ்நிலை இல்லாதபோது, அவர்களுக்குள் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

5. உங்களது பலம்:

உங்களுடைய பலத்தை நீங்களே அங்கீகரியுங்கள்; பாராட்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய பலவீனங்கள் மீது மட்டும் நீங்கள் கவனம் குவிப்பது எதிர்மறை சிந்தனைக்கு வழிவகுக்கும். மாணவர்கள் பெரும்பாலும் தம் பலவீனங்களிலேயே வாழ்கிறார்கள். தங்களது தனித்திறமைகளை அவர்கள் கவனிக்க தவறிவிடுகிறார்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்