ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர், மருது கணேஷ்

ஆர் கே நகரில் திமுக வேட்பாளராக மருது கணேஷ் போட்டி படத்தின் காப்புரிமை Marudhu Ganesh/Facebook

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்ட ஆர் கே நகர் சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 21ம் தேதி நடக்கவுள்ள இடைத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிட உள்ளார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அவர் வென்ற ஆர் கே நகர் தொகுதி காலியாகியது.

2017 டிசம்பர் 31ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், டிசம்பர் 21ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருந்த சமயத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி இடைத் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

இந்த முறை, நவம்பர் 27ம் தேதி தொடங்கும் மனு தாக்கல், டிசம்பர் 4ம் தேதி முடிவுறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தற்போது, அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே, கடந்த முறை திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷே இப்போதும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (நவம்பர் 25ம் தேதி) அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின், மருது கணேஷ் ஆர் கே நகரில் போட்டியிடுவார் என்று அறிவித்தார். அவர் மேலும் காங்கிரஸ் மட்டுமல்லாது பிற தோழமை கட்சிகளும் திமுகவிற்கு ஆதரவு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

''தேர்தல் நியாயமாக நடைபெறாது என்ற காரணத்தால் தான் நாங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். இந்த நிலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜனநாயக முறைப்படி இந்த இடைத்தேர்தலை நாங்கள் எதிர்கொள்வோம். நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம், தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியை பெறும்,'' என ஸ்டாலின் தெரிவித்தார்.

தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புக்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல்தலைவர் முக ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த மருது கணேஷ், ஆர் கே நகர் இடைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கடந்த முறை அதிமுகவில் டிடிவி தினகரன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒரு பிரிவாகவும், ஓ பன்னீர்செல்வம் அணியினர் ஒரு பிரிவாகவும் போட்டியிடுவதாக இருந்தது. தற்போதைய சூழலில் ஓ பி எஸ்-இ பி எஸ் ஒரே அணியாகவுள்ளனர். இரட்டை இல்லை சின்னத்தை அவர்களின் அணிக்கு அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டி டிவி தினகரன் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் இல்லாத நிலையில் இத் தேர்தலை அது எப்படி எதிர்கொள்ளும் என்பதும் கவனத்துக்கு உரியதாகி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்