ராஜஸ்தான் சிறுமிகளுக்கு 10 வயதிற்குள் திருமணம்: நிலைமை மாறியது எப்படி?

எஜுகேட் கேர்ல்ஸ் அமைப்பின் தன்னார்வலரின் வற்புறுத்தலால் பாஹ்வந்தியின் பெற்றோர் அவரை பள்ளிக்கூடத்திற்கு மீண்டும் செல்ல அனுமதித்தார்கள்.
Image caption எஜுகேட் கேர்ல்ஸ் அமைப்பின் தன்னார்வலரின் வற்புறுத்தலால் பாஹ்வந்தியின் பெற்றோர் அவரை பள்ளிக்கூடத்திற்கு மீண்டும் செல்ல அனுமதித்தார்கள்.

ராஜஸ்தானை சேர்ந்த ஒரு சிறுமி பள்ளிக்கு செல்வதற்குமுன் எவ்வளவு வேலை செய்யவேண்டும் என்பதை நேரடியாக பார்க்காமல் புரிந்துக்கொள்ள முடியாது.

சிலருக்கு பள்ளிக்கு செல்வதைவிட வேலைகளே முன்னுரிமையாக இருக்கிறது. ஆனால், பள்ளிக்கு செல்வது மட்டுமே அவர்களின் வாழ்வில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மூன்று மில்லியனுக்கும் அதிகமான சிறுமிகளை ஊக்குவிக்கிறார் ஒரு இந்திய கல்வியாளர்.

பாஹ்வந்தி லஸ்ஸி ராமின் தினசரி வேலைகள் காலை உணவு தயாரிப்பதுடன் தொடங்குகிறது. தகிக்கும் சூடு விரல்நுனிகளில் படாமல் நேர்த்தியாக ரொட்டியை திருப்பிப் போடுகிறார்.

பிறகு கோழிகளுக்கு தீவனம் அளித்துவிட்டு, பாத்திரங்களை சுத்தம் செய்கிறார். அடுத்த வேலையை அவளுடைய அப்பா நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறார்.

"ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவேண்டும்" என்று கூறும் அவர், "அவை காத்திருக்காது" என்கிறார்.

இறுதியாக வேலைகளை முடித்த அவள், சீப்பால் முடியை சீர்படுத்தி, அங்குள்ள பள்ளிச் சிறுமிகள் அணியும் வழக்கப்படி துப்பட்டாவை "V" வடிவில் முன்புறம் போட்டுக்கொள்கிறார். பையை மாட்டிக்கொண்டு, 4கி.மீ (2.4 மைல்கள்) தொலைவில் இருக்கும் பள்ளிக்கு கிளம்புகிறார்.

"பள்ளிக்கூடம் மிகத் தொலைவில் இருப்பதால் எங்கள் கிராமத்தில் உள்ள பல சிறுமிகள் செல்வதில்லை" என்கிறார் அவர்.

15 வயதிற்குட்பட்டவர்களுக்கான பள்ளி எங்கள் கிராமத்திலேயே இருந்தால், மேலும் பல சிறுமிகள் படிப்பார்கள்" என்று அவர் கூறுகிறார்.

"நெடுஞ்சாலையை கடந்து பள்ளிக்கு செல்லவேண்டும். குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் அதிகமாக காணப்படும் நெடுஞ்சாலையை கடந்து செல்ல சிறுமிகள் பயப்படுகிறார்கள்."

காணாமல்போகும் பள்ளிமாணவிகள்

'எஜுகேட் கேர்ல்ஸ்' தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர்கள் கிராமங்களுக்கு வீடுதோறும் சென்று, பள்ளிக்கு செல்லாத சிறுமிகளை ஆடையாளம் காண்கிறார்கள். சிறுமிகளை பள்ளிக்கு அனுப்புவதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களின் குடும்பத்தினரிடம் பேசுகிறார்கள், அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்காக அந்த சமூகத்தினருடன் இணைந்து திட்டத்தை உருவாக்கிறார்கள்.

Image caption எஜுகேட் கேர்ல்ஸ் குழுவின் உறுப்பினரான மீனா, ராஜஸ்தானில் வீடுவீடாக சென்று, பெண்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேண்டும் என்று வற்புறுத்துகிறார்.

பள்ளிகளில் கழிவறைகள் இருப்பதை உறுதி செய்யும் தன்னார்வலர்கள். சிறுமிகளுக்கு பாடங்களையும் கற்றுத்தருகின்றனர். ஆங்கிலம், கணிதம், ஹிந்தி ஆகியவற்றை கற்பிக்கின்றனர்.

அவர்கள் இதுவரை மில்லியன்கணக்கான குழந்தைகளுக்கு உதவியிருக்கிறார்கள், 150,000 பெண்கள் பள்ளிகளில் சேர்வதற்கு காரணமாய் இருக்கிறார்கள்.

சிறிய வயதிலேயே திருமணம் செய்யப்பட்ட நான்கு பெண்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு அழைத்து செல்கிறார் 'எஜுகேட் கேர்ல்ஸ்' அமைப்பின் மீனா பாடி.

இப்போது குடும்பத்தில் ஐந்தாவதாக மற்றொரு சிறுமிக்கும் 14 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டிருக்கிறார்.

"ஒரு பெண்ணுக்கு கல்வியால் எந்தவொரு பயனும் இல்லை என இங்குள்ள பெற்றோர்கள் நினைக்கிறார்கள்" என்கிறார் மீனா.

"வேலைக்கோ, விவசாயத்தை கவனிக்கவோ பெற்றோர்கள் செல்லும்போது, வீட்டு வேலைகளைச் செய்வது, கால்நடைகளை கவனிப்பது, சிறிய குழந்தைகளை கவனிப்பது போன்ற வேலைகளை செய்ய சிறுமிகள் வீட்டில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரு பெண்ணின் நேரத்தை கல்வி வீணடிப்பதாக கருதுகிறார்கள்."

கல்வியின் காரணமாக வாழ்க்கையில் தான் விரும்பும் அனைத்தையும் செய்யமுடியும் என்று 'எஜுகேட் கேர்ல்ஸ்'இன் நிறுவகர் சஃபீனா ஹுசைன் நம்புகிறார்.

இந்தியாவில் 10-14 வயதிற்குட்பட்ட மூன்று மில்லியன் பெண்கள் பள்ளிக்கு செல்வதில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தை மணமகள்கள்

கல்வியைப் பெறுவதில் இருந்து பெண்களை பின்வாங்கவைக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று சிறுவயது திருமணம் ஆகும்.

"ராஜஸ்தானில், 50-60% பெண்களுக்கு 18 வயதிற்குள்ளே திருமணம் நடக்கிறது. 10-15% சிறுமிகளுக்கு 10 வயதிற்குள் திருமணம் நடக்கிறது" என்கிறார் சஃபீனா.

Image caption 14 வயதில் திருமணம் நடந்த பிறகு, பள்ளிக்கு செல்வதற்கு கணவர் வீட்டினால் தடுக்கப்பட்ட நீலம் தற்போது கல்வி சாம்பியன்.

வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவில்தான் குழந்தை மணமகள்கள் அதிகமாக இருப்பதாக கூறுகிறது யுனிசெஃப். தற்போதைய இந்தியப் பெண்களில் கிட்டத்தட்ட பாதிபேருக்கு சட்டபூர்வ திருமண வயதான 18க்கு முன்பே திருமணமாகிவிட்டது.

சிறுமிகளின் கட்டாயத் திருமணத்திற்கு சாட்சியாக இருக்கிறார் நீலம் வைஷ்ணவ். தனது சகோதரியின் மைத்துனருக்கு 14 வயதில் திருமணம் செய்விக்கப்பட்ட இவர், எஜுகேட் கேர்ல்ஸ் அமைப்பின் உறுப்பினர்.

பள்ளிக்கூடத்திற்கு செல்ல அனுபதிக்கப்படுவார் என்ற வாக்குறுதியுடன், பாரம்பரிய வழக்கத்தின்படி திருமணத்திற்கு பின் கணவரின் குடும்பத்திற்கு சென்றார் நீலம். கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மறுத்தபோது, திருமணத்தை முறித்துக்கொள்ளும் முடிவெடுத்தார் நீலம்.

"விவாகரத்து செய்ய முடிவு செய்தபோது நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டேன், கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தொந்தரவு செய்தார்கள், பட்டப்பெயர்கள் வைத்தார்கள், இப்போதும் அது தொடர்கிறது. நடத்தை கெட்டவள் என்று குற்றம் சாட்டிய கணவர் வீட்டார், வெட்கம்கெட்டவள் என்றும் சாடினார்கள்".

சிறந்த சொத்துக்கள்

இதற்கிடையில் பள்ளியில் பாஹ்வந்தி எதிர்காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்: "படிப்பை முடித்தபிறகு பெண்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியராக விரும்புகிறேன், ஏனென்றால் நாம் படித்திருந்தால் தைரியம் வரும்" என்கிறார் அவர்.

"நான் என் சொந்த காலில் நிற்க முடிந்து, ஒரு வேலையும் கிடைத்தால், என் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்யமுடியும்."

இந்த வார்த்தைகள் சங்கீதமாக மனநிறைவைத் தருகிறது சஃபீனாவுக்கு. குடும்பத்தின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து போன்ற முக்கியமானவற்றை கவனித்துக்கொள்ளும் பெண்கள் கல்வி கற்பதால் இந்தியாவின் பல அழுத்தம் தரும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறார் சஃபீனா.

ஒரு ஆண்டு கூடுதலாக கல்வி பயிலும் ஒரு தாயினால், 5% முதல் 1% குழந்தை இறப்புகள் வரை குறைவதோடு, அவரது வாழ்நாளில் 20% வருவாய் அதிகரிப்பதாக யுனெஸ்கோ கூறுகிறது.

"நீங்கள் எந்தவொரு வளர்ச்சியை எடுத்துக் கொண்டாலும், அதை பெண்களுக்கு கல்வி வழங்குவதன் மூலம் மேம்படுத்த முடியும், எனவே உண்மையில் பெண்கள் நமது மிகப் பெரிய சொத்து" என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :