மும்பை தாக்குதல்: கசாப் கிராமத்துக்கு சென்ற நிருபர்களுக்கு என்ன நடந்தது?

மும்பை தாக்குதல்: நிருபர்களை விரட்டிய கசாப் கிராமத்தினர்

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக, 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார். அதனை தொடர்ந்து அஜ்மல் கசாப்பின் கிராமத்தில் நிலவிய சூழலை தெரிந்துக் கொள்ள அங்குச் சென்ற பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி தனது அனுபவத்தை இந்த கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார்.

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாள், கசாப் தூக்கிலிடப்பட்ட செய்தியுடன் விடிந்தது. இந்தியாவின் நிதி தலைநகர் என அழைக்கப்படும் மும்பையில் 160 பேரை பலிவாங்கிய அந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர்களில் கசாப்பும் ஒருவர்.

தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகளில் உயிர் பிழைத்த ஒரே நபர் அஜ்மல். மற்ற ஒன்பது பேரையும் பாதுகாப்பு படையினர் கொன்றுவிட்டனர்.

தானியங்கி துப்பாக்கி ஒன்றை ஏந்திய அஜ்மலின் புகைப்படம், மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த தாக்குதலின்போது பிரபலமான ஒரு புகைப்படம்.

முதலில் அஜ்மல் கசாப்பின் அடையாளம் மர்மமாக இருந்தது. பின் கசாப் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான லக்‌ஷர் இ தயிபாவைச் சேர்ந்தவர் என இந்தியா கூறியது. சில மாதங்களுக்கு பிறகு அஜ்மல் கசாப் தனது நாட்டைச் சேர்ந்தவர்தான் என பாகிஸ்தான் உறுதி செய்தது.

பின்னர், பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள ஃபர்டிகோட் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் அஜ்மல் கசாப் என உள்ளூர் செய்தி ஊடகங்கள் கண்டறிந்தன.

ஒரு பத்திரிக்கையாளராக அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட பிறகு அவரின் கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மனநிலையை தெரிந்து கொள்ள எனக்கு தோன்றியது.

கசாப்பின் குடும்பம் குறித்தும், அவரது வாழ்க்கை குறித்தும் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டிருந்தனர் என்பதை தெரிந்த எனக்கு பதற்றமாகவும் இருந்தது.

என்னுடன் எனது கேமராமேனும், அந்த பகுதியை நன்கு அறிந்த உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவரும் வந்தனர்.

ஒரு குறுகிய சந்திற்கு நேராக சாலையில் எங்கள் வாகனத்தை நிறுத்தினோம். "இதுதான் அந்த இடம், உங்கள் தைரியத்தை வரவழைத்து நீங்கள் செல்லுங்கள்" என்று தெரிவித்தார் உடன் வந்த உள்ளூர் பத்திரிக்கையாளர். நான் எனது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சாலையில் நடந்துச் சென்றேன்.

எனது கேமராமேனும், அந்த உள்ளூர் பத்திரிக்கையாளரும் என்னை பின் தொடர்ந்து நடந்து வந்தனர்.

அங்கு ஒருசில வீடுகளும், சிறு சிறு மளிகைக் கடைகளும் இருந்தன; மேலும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பாதையை கடந்து போனவர் ஒருவரிடம் அஜ்மல் கசாப்பின் வீடு எது என்று கேட்டோம்; அவர் என்னை பார்த்து எனக்கு தெரியாது என்று கோபமாக சொல்லிவிட்டு நடந்து சென்றுவிட்டார். எனக்கு சிறிது பயம் தோன்றியது. ஆனாலும், நான் எனது கேமராமேன் மற்றும் பத்திரிக்கையாளருடன் தொடர்ந்து நடந்து சென்றேன்.

மேலும் ஒருவர் நடந்து வந்தார், நான் அவரிடம் அதே கேள்வியை கேட்டேன். அவர் என்னை நோக்கி கோபமான ஒரு பார்வையை பார்த்துவிட்டு தனது முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டார்.

தொடர்ந்து நடந்து செல்வதா வேண்டாமா என்றும், அப்படிச் சென்றால் வரவிருக்கும் ஆபத்து குறித்தும் நான் யோசித்தேன். பின் சிறிது தொலைவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அவர்களிடம் அதே கேள்வியை கேட்டேன்.

அவர்கள் அனைவரும் ஒரு பச்சை நிற இரும்பு கதவு கொண்ட வீட்டைச் சுட்டிக்காட்டினர்.

அந்த சிறுவர்கள் என்னை அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அந்த கதவு சிறிது திறந்திருந்தது குழந்தைகள் எங்களை உள்ளே அழைத்துச் சென்றனர். உள்ளே நுழைந்தவுடன் ஒரு தாழ்வாரத்தை கண்டோம்.

ஒரு மூலையில் இரண்டு எருமைமாடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. மேலும். தரையில் சில மரத்துண்டுகள் கிடந்தன. அந்த வீட்டில் யாரோ இருப்பது போல்தான் தோன்றியது.

நான் கதவை இரண்டு மூன்று முறை தட்டி உள்ளே யாரேனும் உள்ளனரா என்று கேட்டேன் ஆனால், அங்கு முழுமையான ஒரு நிசப்தம் நிலவியது.

"கேமராவில் இருக்கும் படத்தை அழிக்க வேண்டும்.."

அதே சமயத்தில் எனது கேமராமேன், வீட்டை படமெடுத்துக் கொண்டிருந்தார் அப்போது சிலர் வந்து அவரை தோள்பட்டையை இழுத்து உடனடியாக போகும்படி கூறினர்.

மேலும், நான் தெருவில் நின்றுக் கொண்டிருந்த சில ஆண்களிடம் கசாப்பின் குடும்பம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர்.

பாகிஸ்தானிற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று நடத்தப்பட்ட சர்வதேச சதி அது என்றும், அப்படி ஒரு மனிதர் அங்கு வாழவில்லை என்றும் அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார்.

எங்களை மிரட்டும் பாங்குடன் நின்றுக் கொண்டிருந்த மனிதர்களின் எண்ணிக்கை சட்டென அதிகரித்தது போல் தெரிந்தது எனவே, அந்த இடத்தைவிட்டு உடனடியாக போகவேண்டும் என்று முடிவெடுத்தோம்.

விரைவாக காரை நோக்கி நடந்தோம் அப்போது அங்கு சிலர் எங்களை தடுத்து நிறுத்தினர்.

அதில் ஒருவர், எங்கள் கேமராவில் இருக்கும் படத்தை அழித்தால்தான் அங்கிருந்து போக முடியும் என கூறினார். அவர்களுடன் போலிஸாரும் இருந்தனர்.

இங்கு யார் படமெடுக்க வந்தாலும் அதை எங்களிடம்தான் கொடுக்க நேரிடும் என அவர் தெரிவித்தார்.

நான் அவருடன் பேசிக் கொண்டு இருக்கும் போதே கூடியிருந்தவர்கள் எங்களின் கேமராவை ஆராய ஆரம்பித்தனர். எங்களது கேமராமேன் அவர்களை ஏமாற்றி வீடியோவை அழிக்காமல் காப்பாற்றிவிட்டார்.

எங்களுக்கு ஏதோ அதிர்ஷ்டமும் இருந்தது. நாங்கள் அங்கிருந்து திரும்ப முடியாது என கூட்டத்தின் தலைவர் கூறிய சமயத்தில், அங்கு வந்த ஒருவர் அந்த பகுதியில் வேறொரு ஊடகம் வந்திருப்பதாக தெரிவித்தார்.

அதில் அவரின் கவனம் சிதறியவுடன், நாங்கள் எங்களின் காரை நோக்கி ஓடி வந்து சட்டென அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

நான் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது பிற பத்திரிக்கையாளர்களிடமிருந்து எனக்கு பல அழைப்புகள் வந்தன. ஏனென்றால், எங்களுக்கு பிறகு அவர்கள் அந்த கிராமத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

கிராமவாசிகள் என்று கூறப்பட்டவர்களால் சில நிருபர்கள் தாக்கப்பட்டனர், கேமராக்கள் உடைக்கப்பட்டன.

அஜ்மல் கசாப்பின் குடும்பம் வேறு எங்கோ சென்றுவிட்டதாகவும், தற்போது வேறு யாரோ அங்கு வாழ்ந்துக் கொண்டிருப்பதாகவும் உள்ளூர் பத்திரிக்கையாளர் தெரிவித்தார்.

அச்சமூட்டிய அந்த அனுபவத்தால் மீண்டும் ஒருபோதும் ஃபரித்கோட்டிற்கு செல்ல நான் விரும்பவேவில்லை.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்