இவான்காவுக்கு அழைப்பு: "மேடம் கொஞ்சம் தமிழ்நாட்டுக்கு வந்துட்டு போங்க"

சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்காவின் வருகையையொட்டி பளபளப்பாக மாறியுள்ளது ஐதராபாத்.

படத்தின் காப்புரிமை Getty Images

"சர்வதேச கண்ணோட்டத்துடன் அணுகும்போது இது வழக்கமான நடைமுறைதானா? விவிஐபிக்கள் வருகையால்தான் மக்களுக்கு விடிவு காலம் பிறக்குமா?" என்று வாதம்-விவாதம் பகுதியில் பிபிசி தமிழின் சமூக வலைத்தள நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"பளபளப்பா மாத்திடாங்களா, வழக்கமா போர்வைய போட்டு தானே மூடுவாங்க, அதானே நம்ம டிஜிட்டல் இந்தியா இதென்ன புதுசா. ஆமா பிச்சைக்காரங்கள ஏன் துரத்தி விட்டாங்க ஒரு வேளை தொழில் போட்டியா இருக்குமோ?" என்கிறார் வினோத் குமார் எனும் நேயர்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தபோது அங்கிருந்த குடிசைப்பகுதிகள் பெரிய திரைகளால் மூடப்பட்ட படங்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முரளி கிருஷ்ணன் இவாறு கூறுகிறார்," தம் மக்களை கண்டுகொள்ளாமல், யாரோ ஒருவருக்காக, நகரத்தை பளபளபாக்கும் செயல் கொடுமையானது. இவ்வகையான கொடுமைகளுக்கு ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்ல இயலாது. நமது சமூகம் தெளிவற்ற ஒன்றாக உள்ளதே இதற்கு காரணம்."

'கிழிந்த ஆடையை கோட் போட்டு மறைத்து இருக்கிறார்கள்'

"பசியின் ஏக்கம் ஏழைகளின் கண்களில்,பதவியின் மோகம் ஆட்சியாளர்களின் மனங்களில், கிழிந்த ஆடையை கோட் போட்டு மறைத்து இருக்கிறார்கள் !!!" என்கிறார் புலிவலம் பாஷா.

"இயல்பாய் எப்பொதுமே சுத்தம் சுகாதாரம் பேனியிருந்தால் ஏன் இந்த கேள்வி எழப் போகிறது..." என்கிறார் ரமேஷ் நாராயண் எனும் பிபிசி தமிழ் நேயர்.

"மேடம் கொஞ்சம் தமிழ்நாட்டுக்கு வந்துட்டு போங்க இங்க ரோடே இல்லை நீங்க வந்ததான் ரோடு போடுவாங்க," என்று இவான்காவை தமிழ் நாட்டுக்கும் வரச் சொல்கிறார் ப.பிரேம்குமார் பாரதி.

படத்தின் காப்புரிமை Getty Images

எழுதப்படாத சாசனமா?

"மற்ற நாடுகளில் அனைத்துலக நிகழ்வுகளுக்காகக் கூடுதல் கட்டமைப்புக்கான முன்னெடுப்புகளை நிகழ்த்துவது இயல்பு. இந்நாட்டில் மட்டும்தான் மக்களுக்கான அடிப்படை வசதிகள் (உரிமைகள்) உள்ளடக்கிய நிரந்தர கட்டமைப்போ, தற்காலிக கட்டமைப்போ என்பது முதன்மை அமைச்சர், அரசியல் பிரமுகர், வெளிநாட்டு அமைச்சர் வருகையை ஒட்டியே நிறைவேற்றுவது எழுதப்படாத சாசனமாக இருக்கிறது. கீழ்நிலை அரசு அதிகாரி தொடங்கி துறைசார் அமைச்சர் வரை அவர்களது கடமைகளை காலம் தாழ்த்தாது எவ்வித எதிர்பாரப்புமின்றி அவர்களாகச் செயல்படுத்தும் வரையில் மக்களுக்கான நலத்திட்டங்கள் நிவாரண உதவிகள் போன்று கிடைக்குமே ஒழிய உரிமைகளில் ஒன்றாகக் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை." என்று கூறியுள்ளார் சக்தி சரவணன் எனும் பதிவர்.

சரவணா சரோ எனும் பெயரில் பதிவிடும் ஃபேஸ்புக் நேயர், "வெக்கக்கேடு" என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :