ஆறு திசைமாறிய பின்பே சிந்து வெளி நாகரீகம் தோன்றியதா? புதிய ஆய்வு முடிவுகள்

  • 1 டிசம்பர் 2017
படத்தின் காப்புரிமை A.Singh
Image caption கக்கர்-ஹக்ராவிலுள்ள பாலேயோ ஆற்றில் தோண்டி எடுக்கப்படும் படிமங்கள்.

உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடக்கம் மற்றும் முடிவு குறித்து இன்னும் கூடுதலான வியக்கத்தக்கத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்றைய இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலும், பாகிஸ்தானிலும் 5,300 ஆண்டுகளுக்கும் முன்பு, நீண்ட காலத்துக்கு முன்பே அழிந்துபோன இமாலய நதியால் செழித்திருந்தது. அல்லது, அதுதான் உண்மையென நினைக்கப்பட்டது.

ஆனால், அந்த நதி பாதை மாறியதும், அழிவுக்கு உள்ளானதும் சிந்து சமவெளி நாகரிக மக்கள் அந்தப் பகுதிகளில் குடியமர்வதற்கு முன்னரே நிகழ்ந்துவிட்டது என்கிறது புதிய ஆய்வு ஒன்று.

பெரிய, தொடர்ந்து பாயக்கூடிய நதி இல்லாமலே அவர்கள் செழிப்பாக வாழ்ந்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே காலத்தில் இருந்த எகிப்து மற்றும் மெசபடோமியா நாகரிகங்கள் நதிகளால் பயனடைந்தவை.

கான்பூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் ஆய்வில் இந்த விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை NASA/USGS
Image caption பண்டையகால நதிகளின் தனித்துவமான அமைப்பை எடுத்துக்காட்டும் அகச்சிவப்பு செயற்கைக்கோள் படம்.

வெண்கல காலத்தில் நீரின் தேவை அதிகமாக இருந்திருக்கும் என்பதை மறுக்காத அந்தக் குழுவின் ஆய்வாளர்கள், அந்த நாகரிகத்தின் நீர் தேவை பருவமழையின்போது கிடைத்த நீரைக் கொண்டு பூர்த்திசெய்யப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

"அந்த நதி வற்றியதால்தான் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தது எனும் கருத்தை இந்த ஆய்வு நொறுக்கியுள்ளது ," என்று பேராசிரியர் ராஜிவ் சின்ஹா கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை S.Gupta
Image caption கலிபங்கன் நகர மையத்தில் ஒரு தெருவில் மீதமுள்ள தடயங்கள்

"பழங்கால சமூகங்களுடன் பெருநதிகளுக்கு முக்கியத் தொடர்பு இருந்ததாக நாங்கள் வாதிட்டுள்ளோம். அவை தோன்றியதைவிட அவற்றின் அழிவே அதை ஒட்டிய நாகரிகத்தின் நிலைத்தன்மையை கட்டுப்படுத்தியுள்ளன," என்று அவர் கூறியுள்ளார்.

"சுமார் 8,000 முதல் 12,000 ஆண்டுகளுக்கும் முன்னரே அந்த நதி அழிந்த காலகட்டத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகம் உச்சத்தில் இருந்த 3,000 முதல் 4,000 ஆண்டுகளுக்கும் முந்தைய காலகட்டத்துக்கும் உள்ள பெரிய இடைவெளி இதை நிரூபிக்கிறது," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை A.Carter/Birkbeck, University of London
Image caption பாலேயோ ஆற்றின் தோற்றத்தை கண்டுபிடிப்பதற்கு உதவிய கனிம தானியங்களின் தொகுப்பு

கக்கர்-ஹக்ரா பழங்கால நதி என்று அழைக்கப்படும் நீரோட்டம் இருந்த பகுதியை செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் மற்றும் கள ஆராய்ச்சி மூலம் அவர்கள் சோதித்தனர்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் நகரங்களான காலிபங்கன், பனாவாலி ஆகியன இந்த நதியின் கரையோரத்திலேயே அமைந்திருந்தன. "சிந்து வெளிநாகரிகம் செழித்த பகுதி சட்லெஜ் நதி முன்னர் பாய்ந்த பகுதி என்றும் பல இமாலய ஆறுகளைப் போலவே அதுவும் தமது பாதையை மாற்றிக்கொண்டிருக்கலாம்," என்றும் இந்த ஆய்வுக் குழு கூறுகிறது.

"சுமார் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் பாதையை மாற்றும் இயல்பை அவை கொண்டிருந்தன," என்று இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் சஞ்சீவ் குப்தா கூறுகிறார்.

"சட்லெஜ் நதி தன் புதிய பாதையிலேயே தங்கி விட்டதால், பழைய நதியின் பாதைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இதுவே பேரழிவை உண்டாக்கும் வெள்ளத்திலிருந்து சிந்து சமவெளி நாகரிகத்தைக் காத்து, செழித்திருக்கச் செய்துள்ளது. இந்த நாகரிகத்தின் சில பகுதிகள் அந்தப் பழைய ஆற்றின் மீதே அமைக்கப்பட்டிருந்தது" என்று அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை S.Gupta
Image caption காளிபங்கனில் தரையில் காணப்படும் சிந்து நாகரிக மண்பாண்டத்தின் உடைந்த துண்டுகள்

ஒளியை வெளிவிடும் பொருட்களின் ஒளிரும் தன்மை, அவை வெளியிடும் ஒளியின் அளவு ஆகியவற்றை அளக்கும் ஒரு தொழில்நுட்பம் மூலம் அந்தப் படிமங்களின் தொன்மை எவ்வளவு காலம் என்பது கணக்கிடப்பட்டது.

சட்லஜ் நதியின் பாதைமாற்றம் சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தற்போது அந்நதி பாயும் பாதையில் சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிலைகொண்டது.

சிந்து சமவெளி நாகரிக மக்கள் திறன்மிகுந்த பொறியாளர்களாக இருந்தனர் என்றும் நிலத்தடிநீரை பயன்படுத்துதல் உள்ளிட்ட நீர் மேலாண்மை முறைகளை அவர்கள் பின்பற்றியுள்ளனர் என்றும் பேராசிரியர் குப்தா கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை NASA/USGS
Image caption சிந்து நாகரிகத்தின் நகர்ப்புற குடியேற்றங்கள் தற்போதைய வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பரவியுள்ளன.

ஆனால், குறைவான நீர் ஆதாரம் இருந்த சூழலில் அவர்கள் எவ்வாறு இயங்கினார்கள் என்பதை தொல்லியல் ஆய்வாளர்கள்தான் விளக்க வேண்டும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் ஆய்வுடன் தொடர்பில்லாத நியூயார்க் பல்கலைக்கழக மானுடவியல் நிபுணர் ரீட்டா ரைட், "நதி தமது பாதையை மாற்றிக்கொண்ட பகுதி என்பது ஹரப்பா சமூகத்தின் மக்கள் வாழ்ந்ததில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே என்றும் ஆனால், இந்த நாகரிகத்தைப் புரிந்துகொள்வதில் இது முக்கியமான பகுதி" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Spl
Image caption பாகிஸ்தானின் மொஹஞ்சோ-தாரோவிலுள்ள ஹரப்பா தளம். இது சிந்து நதிக் கரையில் கட்டப்பட்டது

"வடமேற்கு இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தையே இந்த ஆய்வு கவனத்தில் கொண்டுள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

"சிந்து பள்ளத்தாக்கைப் போல் அல்லாமல், இது வேறு விதமான நீரியல் சூழலைக் கொண்டுள்ளது. சிந்து சமவெளியில் நீர் ஒரு முக்கிய வளமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. சிந்து சமவெளி நாகரிகத்தின் வண்டல் மண் பரப்புகள் மற்றும் 'கக்கர்' பருவமழை அடிப்படையிலான நீரியல் முறை ஆகியவற்றுக்கு இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த வேறுபாடுகளுக்கான ஆதாரம் உள்ளது," என்று தெரிவித்தார் ரீட்டா ரைட்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்