'ஒரு ரூபாய்’ தாளுக்கு வயது 100: நூற்றாண்டை கடந்த ஒரு ரூபாய் தாளின் சுவாரஸ்ய பயணம்

  • 1 டிசம்பர் 2017
பழைய ஒரு ரூபாய் தாள்

இந்தியாவின் முதல் ஒரு ரூபாய் தாள், 1917 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று வெளியானது.

இப்போது ஒரு நூற்றாண்டு கழித்து பல விஷயங்கள் மாறிவிட்டன. தொடர்ந்து அச்சிடப்பட்டு வந்த ஒரு ரூபாய் தாள்கள் அந்த மாற்றங்களை பிரதிபலிக்கின்றன.

முதன்முதலாக அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் தாள்கள், அதன் தனித்தன்மையை இன்னமும் பராமரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நோட்டுகள் இங்கிலாந்தில் அச்சிடப்பட்டவை. அதன் முன்புறத்தில் இடப்பக்க ஓரத்தில், இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் உள்ள வெள்ளி நாணயத்தின் படத்தை இந்த தாள்கள் கொண்டிருக்கும்

'ஒரு ரூபாயை எந்த அலுவலகத்தில் தேவைப்படுகிறதோ அங்கு கொடுக்கிறேன் என சத்தியம் செய்கிறேன்' என்ற உறுதிமொழியும் அதில் அச்சிடப்பட்டிருக்கும்.

அதன் பிறகு அச்சிடப்பட்ட எந்த ஒரு ரூபாய் நோட்டுகளிலும் இந்த வாக்கியம் இடம்பெற்றிருக்காது.

அதன் பின்புறத்தில் இந்தியாவின் எட்டு மொழிகளில் 'ஒரு ரூபாய்' என்று எழுதியிருக்கும்.

இந்த ஒரு ரூபாய் தாள்களை 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசு அச்சடிக்க தொடங்கியதாக, மின்டேஜ்வார்ல்ட் ஆன்லைன் அருங்காட்சியகத்தின் தலைமை நிர்வாகி சுஷில்குமார் அக்ரவால் கூறுகிறார்.

அதற்கு முன்பாக, பிரிட்டனின் ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஆட்சியில் மேற்கு வங்கத்தில் இந்த நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இருந்தும் 1917-ல் தான் முதல் முதலாக ஒரு ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டன. இதனையடுத்து உடனடியாக, இங்கிருந்த போர்துகல் மற்றும் ஃபிரஞ்ச், நோவா கோவா மற்றும் ஃபிரஞ்ச் 'ரூபி' என்று பெயரிட்டு அவர்களின் சொந்த பதிப்புகளை வெளியிட்டனர்.

எனினும், இந்தியாவில் அப்போதிருந்த சில சுதேச மாநிலங்கள், தங்கள் சொந்த நாணயத்தையே வைத்திருந்தனர். அவற்றில், ஹைத்திராபாத் மற்றும் காஷ்மீர் மாநிலங்கள் சொந்தமாக தங்களின் ஒரு ரூபாய் தாள்களை அச்சடிக்க அனுமதி பெற்றிருந்தனர்.

இரண்டாம் உலகப் போரின் போது, சிறப்பு ஒரு ரூபாய் நோட்டுகள் இந்தியாவால் பர்மா நாட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

`என் பிரதமரை கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா?': பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டி

மத்திய கிழக்கு நாடுகளான துபாய், பஹ்ரைன், ஒமான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தியப் பணம் பயன்படுத்தப்பட்டது. 'பெர்ஷியன் ஒரு ரூபாய்' நோட்டுகளையும் சிறப்பு தொடராக இந்திய அரசு வெளியிட்டது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகும், பாகிஸ்தானில் சில காலம் இந்த ஒரு ரூபாய்தாள்கள் பயன்படுத்தப்பட்டன என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

சுதந்திரத்திற்கு பிறகு, மூன்று சிங்கங்கள் மற்றும் அசோக சக்கரம் கொண்ட தேசிய சின்னம், பழைய அரசு அடையாளங்களை மாற்றியமைத்தது. ஒரு ரூபாய் தாள்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த தாள்களிலும் மாற்றம் ஏற்பட்டது.

கடந்த 100 ஆண்டுகளில், 28 வடிவமைப்புகள் வைத்து, பலவிதமாக 125 ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன என்று மின்டேஜ்வார்ல்ட் கூறுகிறது.

குறைந்த மதிப்பு ஆனால் நிறைந்த விலை

இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குபின், உண்மை பரிவர்த்தனைகளில் ஒரு ரூபாய் நாணயங்கள் அல்லது தாள்கள் அடிப்படை தனிச்சிறப்பை இழந்துவிட்டன. ஆனால், ஒரு ரூபாய் தாள்களின் முக்கியத்துவம் இந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒரு ரூபாய் நோட்டு குறித்து பல சுவாரஸ்யமான உண்மைகள் உள்ளன.

இந்திய பணங்களில், ஒரு ரூபாய் தான் மிகவும் குறைவானது, ஆனால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

அனைத்து ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட, ஒரு ரூபாய் தாள்களை மட்டும் இந்திய அரசு நேரடியாக வெளியிடுகிறது.

அதனால் தான், இந்த ஒரு ரூபாய் நோட்டுகளில், 'இந்திய அரசு' என்று அச்சிடப்பட்டிருக்கும். இதில் நிதித்துறை செயலாளரின் கையெழுத்திருக்க, மற்ற நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்திட்டிருப்பார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன் மதிப்பு ஒரு ரூபாய்தான் என்றாலும், இதனை அச்சிடும் செலவு மிக அதிகமாகும். அதனால் தான் கடந்த 1995-ஆம் ஆண்டு ஒரு ரூபாய் தாள்களை அச்சடிப்பதை இந்திய அரசு நிறுத்திவிட்டது.

ஆனால், 2015 ஆம் ஆண்டு மீண்டும் இந்த நோட்டுகள் அறிமுகமாக, இந்தாண்டு புது மாதிரியான தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும், இதன் புழக்கம் குறைந்த அளவிலேயே உள்ளது. அதனால் பழைய பணம் அல்லது நாணயங்கள் சேகரிப்போர், இதனை தேடுகிறார்கள்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதித்துறை செயலாளராக இருந்த போது, அவர் கையெழுத்திட்ட ஒரு ரூபாய் தாள்களை கண்டுபிடிப்பது என்பதுகூட கடினமான ஒன்றாக உள்ளது.

இது போன்ற அரிதான ஒரு ரூபாய் தாள்கள், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஆயிரம் ரூபாய் கொடுத்து இதனை வாங்குபவர்களும் உள்ளனர்.

இந்தாண்டு தொடக்கத்தில், பாரம்பரிய நாணயவியல் காட்சி கூடத்தில், 1985 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் தாள் ஒன்று 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும், டாடிவாலா ஏலத்தில், 1944 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட 100 ஒரு ரூபாய் தாள்கள், 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் பெறப்பட்டது.

வெறும் ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு என்ன வாங்குவது? இதற்கு பதில், நீங்கள் எந்த மாதிரியான ஒரு ரூபாய் நோட்டை வைத்திருக்கிறீர்கள் என்பதை பொருத்துதான் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :