சினிமா விமர்சனம்: அண்ணாதுரை

  • 1 டிசம்பர் 2017

அண்ணன், தம்பி, தியாகம், கொடூர வில்லன் ஆகிய கலவையுடன் தமிழில் படங்கள் வெளிவந்து சில காலமாகிவிட்ட நிலையில், இம்மாதிரி ஒரு கதையுடன் களமிறங்கியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

காதலி விபத்தில் இறந்துவிட்டதால் அவரையே நினைத்து குடிகாரராகிவிடுகிறார் அண்ணாதுரை (விஜய் ஆண்டனி). படித்து ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருக்கிறார் அவரது தம்பி தம்பிதுரை (விஜய் ஆண்டனி-2).

அண்ணாதுரை தன் நண்பனுக்காக தயாளன் என்பவனிடம் கடன் வாங்கிக்கொடுத்து, உத்திரவாதக் கையெழுத்துப்போடுகிறான். ஆனால், அதை வைத்து அண்ணாதுரை தந்தைக்குச் சொந்தமான கடையையே எழுதி வாங்கிவிடுகிறான் தயாளன்.

நடிகர்கள் விஜய் ஆண்டனி, டயானா சாம்பிகா, மொட்டை ராஜாராம், ராதாரவி, நளினி காந்த், காளி வெங்கட்
இசை விஜய் ஆண்டனி
இயக்கம் சீனிவாசன்

ஒரு கொலைப் பழியும் அண்ணாதுரை மீது விழுகிறது. இதனால், தம்பிதுரைக்கு நிச்சயமான கல்யாணமும் நின்றுவிடுகிறது.

7 ஆண்டுகள் கழித்து, சிறையிலிருந்து அண்ணாதுரை திரும்பிவந்து பார்த்தால், தம்பி பெரிய ரவுடியாகியிருக்கிறான்.

அதனால், தம்பிதுரைக்குப் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதிலிருந்து தம்பியை மீட்டு, குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக 'அல்டிமேட்' தியாகம் ஒன்றைச் செய்கிறான் அண்ணாதுரை.

படம் துவங்கியவுடன், குடித்துவிட்டு நிற்கமுடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி ஒரு பெண்ணைக் காப்பாற்ற அட்டகாசமாக சண்டை போடுகிறார். அதற்குப் பிறகு ஒரு பாடல். பிறகு சற்று சுதாரித்துக்கொண்டு நகர்கிறது திரைக்கதை.

தம்பிதுரைக்குப் பெண் பார்ப்பது, திருமணம் நிச்சயமாவது, அண்ணாதுரை நண்பனுக்காக கடன் உத்தரவாதமளிப்பது, கொலை செய்துவிட்டு சிறை சென்று திரும்பும்போது தம்பி தாதாவாகியிருப்பது என்று ஒரு உச்சத்தை நோக்கி வேகமாக முன்னேறுகிறது படம்.

'அட, பரவாயில்லையே' என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், இடைவேளைக்குப் பிறகு கசா,முசா திருப்பங்களோடு, சென்டிமெண்ட், மாறி மாறிக் கொலை, தியாகம், உருக்கம், நம்ப முடியாத க்ளைமாக்ஸ் என்று முடிவடைகிறது படம்.

கொலை செய்த தம்பியைக் காவல்துறை தேடிக்கொண்டிருக்கும்போது, அண்ணன் இன்னொரு கொலையைச் செய்துவிட்டு 'நான்தான் தம்பி' என்று காவல்துறைக்கு வாட்ஸப் செய்தி அனுப்பியதும் காவல்துறை வந்து சுட்டுக்கொன்றுவிடுகிறதாம். அண்ணன் கையில் பச்சை குத்தியிருக்கும் விஷயம், ஊருக்கே தெரிந்தாலும் காவல்துறைக்குத் தெரியாதா?

படத்தின் ஒரு பகுதி, பல ஆண்டுகளுக்கு முன்பாக பரத் - பசுபதி நடிப்பில் வெளிவந்த வெயில் திரைப்படத்தை ஞாபகப்படுத்துகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது விஜய் ஆண்டனிக்கு பெரிய சறுக்கல் இந்தப் படம்.

விஜயகாந்த் தீவிரமாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், இரட்டை வேடமென்றால் அலட்டிக்கொள்ளவே மாட்டார். ஒரு விஜயகாந்த் வேஷ்டி - சட்டையில் வருவார், இன்னொரு விஜயகாந்த் பேண்ட் - சட்டையில் வருவார். அல்லது ஒருவருக்கு மீசை நரைத்திருக்கும்; இன்னொருவருக்கு மீசை 'டை' அடிக்கப்பட்டு கருகருவென்றிருக்கும். விஜய் ஆண்டனியும் இப்போது அந்த பாணிக்கு வந்துவிட்டார்.

அண்ணாதுரைக்கு தாடி இருக்கும்; தம்பிதுரைக்கு தாடியிருக்காது. அண்ணன் கையில் எக்ஸ்ட்ராவாக ஒரு பச்சை குத்தியிருப்பார் அவ்வளவுதான். நடையுடை, குரல் எதிலும் மாற்றமில்லை.

படத்தில் நடித்திருக்கும் பிற நடிகர்களான டயானா சாம்பிகா, நளினிகாந்த், ராதாரவி, காளி வெங்கட் ஆகியோரது நடிப்பில் குறையேதுமில்லை.

விஜய் ஆண்டனியின் இசையில் 'ஜி.எஸ்.டியா மாறி நீயும் என்ன வைச்சு செய்யுற', 'ஓடாதே' ஆகிய பாடல்கள் பரவாயில்லை. 'தங்கமா, வைரமா' பாடலைக் கேட்கும்போது 80களுக்கேப் போய்விட்டதைப் போலத் தோன்றுகிறது.

தில் ராஜின் ஒளிப்பதிவு படத்தின் பலங்களில் ஒன்று.

இந்தியா - பாகிஸ்தான், சலீம், சைத்தான் என மாறுபட்ட கதைகளில் நடித்துக்கொண்டிருந்த விஜய் ஆண்டனிக்கு இந்தப் படம் பெரிய சறுக்கல்.

பிற சினிமா விமர்சனங்கள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்