உயிரோடிருந்த குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள் பணி நீக்கம்

Nurse படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய தலைநகர் டெல்லியில், உயிரிழந்ததாக இறுதிச் சடங்குக்கு கொண்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரோடிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறந்த குழந்தை இறந்து விட்டதாக அறிவித்த இரண்டு மருத்துவர்களை, மருத்துவமனை நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

இரட்டைக் குழந்தைகளில், ஒரு குழந்தை இறந்து பிறந்த சில மணி நேரங்கள் கழித்து இந்த குழந்தையும் உயிரிழந்ததாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையான மேக்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், கடந்த 30 ஆம் தேதியன்று அறிவித்தனர்.

இறந்ததாக கருதப்பட்ட பச்சிளம் குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர். இந்நிலையில் அந்த பையில் ஏதோ நெளிந்ததை உணர்ந்த பெற்றோர்கள், ஒரு குழந்தை உயிரோடிருப்பதை கண்டுபிடித்தனர்.

சிகிச்சைக்கு அதிக விலை வாங்கும் தனியார் மருத்துவமனையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது, அவற்றின் தரம் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம், " நிபுணர்களுடன் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விவாதங்களில் இந்த கடுமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

"இந்திய மருத்துவ அமைப்பில் இருக்கும் வல்லுநர்கள் இடம்பெற்றுள்ள நிபுணர் குழுவின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்க, அக்குழந்தைக்கு சிகிச்சையளித்து இவ்வாறு அறிவித்த இரண்டு மருத்துவர்களை வேலையை விட்டு நிறுத்திவிட்டதாகவும்" அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசும் விசாரணை நடத்தி வருகிறது.

சமீப காலத்தில், இந்தியாவில் தனியார் மருத்துவமனையில் சர்ச்சைக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது இது இரண்டாவது முறை.

கடந்த மாதம் டெங்கு பாதிப்பினால் ஒரு சிறுமி உயிரிழக்க, சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வேறொரு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்