ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாகப் போட்டி

சென்னை ராதாகிருஷ்ணன் நகருக்கு நடக்கும் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அறிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வரும் திங்கட்கிழமையன்று அவர் மனுத்தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்துவரும் நடிகர் விஷால், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதி, அவரது மறைவுக்குப் பிறகு காலியாக இருந்துவந்தது. இந்தத் தொகுதிக்கு கடந்த மார்ச் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில், வாக்குப் பதிவை தேர்தல் ஆணையம் ரத்துசெய்தது.

தற்போது இந்தத் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Image caption விவசாயிகளின் போராட்டத்தில் விஷால்

அ.தி.மு.கவின் சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனனும் சசிகலா அணியின் சார்பில் டிடிவி தினகரனும், தி.மு.க. சார்பில் மருது கணேஷும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல்செய்து, பிரசாரங்களையும் துவக்கிவிட்டனர்.

இந்த நிலையில், இந்தத் தொகுதியில் போட்டியிடப்போவதாக விஷால் அறிவித்திருக்கிறார்.

2004ஆம் ஆண்டில் செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான விஷால், இதுவரை சுமார் 30 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களைத் தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்த விஷால், 2015ஆம் ஆண்டு அக்டோபரில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். இதற்குப் பிறகு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தேர்வுசெய்யப்பட்டார்.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் எதையும் விஷால் இதுவரை தெரிவிக்கவில்லை.

தமிழக விவசாயிகளுடன் விஷால்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தமிழக விவசாயிகளுடன் விஷால்

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :