சக்கர நாற்காலியில் தங்க கெளரவம் தேடித்தரும் ஜெனிதா!

  • 3 டிசம்பர் 2017
ஜெனிதா ஆண்டோ படத்தின் காப்புரிமை G.Ivan Edinbarow
Image caption ஜெனிதா ஆண்டோ

`90 சதவீத மாற்றுத்திறன் கொண்டுள்ள ஜெனிதா ஆண்டோ, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். `இன்டர்நேஷனல் மாஸ்டர்` பட்டம் பெற்ற, உலகின் முதல் மாற்றுத்திறனாளி வீராங்கனையும் இவர்தான்.` உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை(டிசம்பர்-3) முன்னிட்டு தனது சாதனை பயணத்தை பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்துக்கொண்டார்.

குழந்தைகளுக்கே உரிய சுட்டித்தனத்தோடு, மழலை மொழி பேசிக்கொண்டிருந்த தனது மகள் ஜெனிதா, திடீரென ஒரு நாள் முடங்கிப் போவார் என கணிகை இருதயராஜ் நினைத்துக் கூட பார்க்கவில்லை. சாதாரண காய்ச்சல் என நினைத்த அவருக்கு, மூன்றே வயதான ஜெனிதா போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மருத்துவர் கூறிய பின்னர்தான் தெரியவந்தது.

போலியா பாதிப்பினால், தனது மூன்று வயதில் தலை தவிர உடலின் வேறு எந்த பாகத்தையும் அசைக்கக் கூட முடியாத நிலைக்கு ஜெனிதா தள்ளப்பட்டார். பல மாத தொடர் சிகிச்சைகளுக்கு பிறகு, அவரின் கைகள் செயல்படத் துவங்கினாலும், கால்கள் செயலிழந்ததால் சக்கர நாற்காலியே அவரின் நிரந்தர இடமாகிப் போனது.

ஆண்டுகள் உருண்டோடினாலும், தனது மகளின் எதிர்காலம் குறித்த பதைபதைப்பு, ஒரு தந்தையாக அவருக்கு இருந்துகொண்டே இருந்தது. அரசுப்பள்ளி ஆசிரியரான அவர், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ``will of steel' என்ற பாடத்தை நடத்திக் கொண்டிருக்கும்போதுதான், அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

சர்வதேச விளையாட்டுகளில் சாதித்த மாற்றுத்திறனாளி வீரர்கள் குறித்து அந்த பாடத்தில் விளக்கப்பட்டிருந்தது. இந்த பாடத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் சாதித்திருக்கும் போது, தன் மகளாலும் முடியும் என முடிவெடுத்த கணிகை இருதயராஜ், தனக்கு பரிட்சயமான செஸ் விளையாட்டை ஜெனிதாவுக்கு பயிற்சி அளிக்கத் துவங்கினார்.

3-ஆம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலாக திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டியில் கலந்து கொண்ட ஜெனிதா ஆண்டோ, சாம்பியன் பட்டம் வென்றார். அதனைத் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய அளவிலான செஸ் போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஜெனிதா ஆண்டோ பெற்றார்.

``முதலில் செஸ் விளையாட்டில் பெரிய ஆர்வம் இல்லாவிட்டாலும், முதல் போட்டியில் கிடைத்த வெற்றி, உத்வேகத்தை அளித்தது. அதனைத் தொடர்ந்து செஸ் போட்டிகளுக்காக தனிக்கவனம் எடுத்து பயிற்சி எடுத்தேன். அதனைத் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறத் துவங்கினேன்.`` என பிபிசி தமிழிடம் ஜெனிதா ஆண்டோ தெரிவித்தார்.

முதலில் சாதாரண நபர்களுக்கான செஸ் போட்டியில்தான் ஜெனிதா பங்கேற்று வெற்றிகள் குவித்து வந்தார். பின்னர் பெங்களூருவைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளர் ராஜா ரவிசங்கரின் அறிவுரையை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் போட்டிகளின் பக்கம் ஜெனிதாவின் கவனம் திரும்பியது.

இதனைத் தொடர்ந்து 2007-ஆம் ஆண்டு போலந்தில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கம் நடத்திய தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் 2008-ஆம் ஆண்டு 570 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட்டில், 25-வது இடத்தை பிடித்தார். பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் போட்டிகளில், பதக்கங்களை குவித்தார்.

``சர்வதேச போட்டிகளில், போட்டியாளர்கள் எவ்வளவு சதவீதம் மாற்றுத்திறன் கொண்டிருக்கிறார்கள் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆண்கள், பெண்கள் என்ற பிரிவுகளும் இல்லை. எல்லாம் ஒரே பிரிவுதான். குறிப்பாக ஆண் வீரர்கள் அதிகம் கலந்து கொள்வார்கள். எனவே 90 சதவீதம் மாற்றுத்திறன் கொண்ட நான், 60 சதவீதம் மாற்றுத்திறன் கொண்ட வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளுடன் மோத வேண்டி இருக்கும். அதில் தங்கம் வெல்வது சவாலான ஒன்று. ``என ஜெனிதா கூறுகிறார்.

2013-ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் சங்கம் நடத்திய 13-வது தனி நபர் செஸ் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றதன் மூலம், ``வுமன் இன்டர்நேஷனல் மாஸ்டராக`` ஜெனிதா அங்கீகரிக்கப்பட்டார். இது செஸ் விளையாட்டின் இரண்டாவது பெரிய பட்டமாகும். இதன் மூலம் இன்டர்நேஷனல் மாஸ்டர் (IM) பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி வீராங்கனை என்ற பெருமையை ஜெனிதா பெற்றார்.

இது மட்டுமல்லாமல் 2013-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் ஜெனிதா.

இவருடைய இத்தனை சாதனைகளுக்கும் பின்னால், உறுதுணையாக இருப்பது இவரது தந்தை கணிகை இருதயராஜ். 2005-ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், தனது ஓய்வூதியத்தின் பெரும்பாலான பகுதியை ஜெனிதாவை வெளிநாட்டு போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக செலவிட்டுள்ளார். 2015-ஆம் ஆண்டு முதல் ஜெனிதாவுக்கு, இந்திய விளையாட்டு ஆணையும் நிதியுதவி அளித்து வருகிறது. அதற்கு முன்பு தன்னுடைய சொந்த பணத்தை செலவளித்து, தனது மகளை அவர் சாதனையாளராக்கியுள்ளார் .

``ஒரு தந்தையாக, பயிற்சியாளராக ஜெனிதாவுக்கு பக்க பலமாக இருந்து வருகிறேன். மாற்றுத்திறன் என்பது சாதிக்க ஒரு தடை இல்லை என்பதை ஜெனிதா மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளார்.`` என இருதயராஜ் பெருமிதப்படுகிறார்.

படத்தின் காப்புரிமை G.Ivan Edinbarow

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பல சாதனைகளை புரிந்துள்ள ஜெனிதா, அடுத்த கட்டமாக கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்காக கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறார். இதற்காக பல சர்வதேச கிராண்ட் மாஸ்டர்களிடம் சிறப்பு பயிற்சி பெற முயற்சித்து வருகிறார். ஆனால் அவரது பொருளாதாரச் சூழல் இதற்கு தடையாக இருந்து வருகிறது.

``சில சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் ஒரு மணி நேர பயிற்சிக்கு 10 ஆயிரம் ரூபாய் கூட கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஆனால் என் பொருளாதார சூழலுக்கு இது பெரிய தொகை. இருந்தாலும் என்னால் முடிந்த முயற்சிகளை செய்து, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற தயாராகி வருகிறேன்.`` என ஜெனிதா தெரிவிக்கிறார்.

இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளிடம் செஸ் குறித்த விழிப்புணர்வு ஓரளவுக்கு அதிகரித்து வந்தாலும், சாய்தளம் போன்ற அடிப்படை வசதிகள் போட்டி நடக்கும் இடங்களில் செய்து தரப்பட்டால், போட்டிகளில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது அவரின் எண்ணம்.

``எனக்கு தெரிந்த பல வீரர், வீராங்கனைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் போட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பதை பார்த்திருக்கிறேன்.`` என அவர் கூறுகிறார்.

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பின்னர், தன்னை போன்ற பல மாற்றுத்திறனாளிகளுக்கு செஸ் விளையாட்டில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதே ஜெனிதாவின் எதிர்கால திட்டமாக உள்ளது.

தனது கிராண்ட் மாஸ்டர் இலக்கின் முதற்கட்டமாக, கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற 1500 பேர் பங்கேற்ற செஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டியில் கலந்து கொண்ட 90 சதவீதம் மாற்றுத்திறன் கொண்ட ஒரே பெண் இவர் மட்டுமே. செஸ் விளையாட்டுக்கு இவர் அளித்த பங்களிப்பை பாராட்டி, திருச்சி மாவட்ட தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஜெனிதாவை தூதராக நியமித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

``எந்த சூழலிலும் தன்னம்பிக்கை இழக்கக் கூடாது. ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். அதனை கண்டறிந்து அதில் தொடர்ந்து பயணிக்க வேண்டும். முதலில் தடைகள் வந்தாலும், மன உறுதியுடன் எதிர்கொண்டால், நமது விடா முயற்சி வெற்றியை மட்டுமே தரும்.`` என்கிறார் இந்த தமிழகத்தின் எதிர்கால செஸ் கிராண்ட் மாஸ்டர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்