வெற்றி தேடித் தருமா இரட்டை இலை?

  • 3 டிசம்பர் 2017
வெற்றி தேடித் தருமா இரட்டை இலை? படத்தின் காப்புரிமை Getty Images

(இக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இதுபிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் )

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிச் சின்னம் என அறியப்பட்ட இரட்டை இலை இப்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு்ப பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவு இரட்டை இலைச் சின்னத்தையும் பிரச்சனைக்கு உள்ளாக்கியது.

அ.தி.மு.க. அம்மா அணி, அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி எனப் பிரிந்து நின்று சசிகலா தரப்பும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் எதிரெதிர் நிலைப்பாட்டை எடுத்த நிலையில், ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, இரட்டை இலை முடக்கப்பட்டது.

அதற்குப் பிறகு, டிடிவி தினகரன் அ.தி.மு.கவிலிருந்து விலக்கிவைக்கப்பட்டு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிகள் தற்போது இணைந்துவிட்டன. தகுந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்து, கட்சிப் பெயரையும் சின்னத்தையும் பெற்றுவிட்டனர். சின்னத்தை இழந்த டிடிவி தினகரன் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.கவின் சார்பில் இ. மதுசூதனன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கு வெற்றி தேடித் தரும் என அ.தி.மு.க. நம்புகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகத்தான் அனைத்து அமைச்சர்களும் அ.தி.மு.க. அம்மா அணி நிர்வாகிகளும் தினகரனுக்காக தொப்பிச் சின்னத்தில் வாக்குக் கேட்டனர். ஓ.பி.எஸ். இதே மதுசூதனனை நிறுத்தி, இரட்டை மின் விளக்குக் கம்ப சின்னத்தில் வாக்குக் கேட்டார்.

இப்போது ஆர்.கே. நகர் தொகுதி நிலவரத்தைப் பார்த்தால், தி.மு.கவிற்கே வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிகிறது. தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க. கட்சிகளின் வாக்குகள், தேர்தலைப் புறக்கணித்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் வாக்குகள் இணைந்து தங்களுக்கு வெற்றிவாய்ப்பைத் தேடித்தரும் என அத்தரப்பினர் நம்புகின்றனர்.

தமிழகத்தில் தொன்னூறுகளுக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தல்களில் பெரிதும் ஆளுங்கட்சியின் வேட்பாளர்களே வெற்றிபெற்றுள்ளனர். ஆளும் கட்சியினர் எப்போதுமே இடைத்தேர்தல் வெற்றியை கவுரவப் பிரச்சனையாகக் கருதி களம் இறங்கி, ஆட்சி, அதிகாரத்தின் துணையுடனும் பண விநியோகத்தின் மூலமும் அந்த வெற்றிகளைச் சாத்தியப்படுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இப்போது நடக்கும் ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் தங்கள் பண பலத்தையும் அதிகார பலத்தையும் முழுமையாகப் பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான். இரட்டை இலை சின்னம் மட்டுமே வெற்றியைப் பெற்றுத்தருமா என்றால், அதற்கும் வாய்ப்புக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் இரட்டை இலைச் சின்னத்திற்குப் போராடி அது கிடைக்காத டிடிவி தினகரன், மாற்றுச் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர், அ.தி.மு.கவின் வாக்குகளில் இருந்து கணிசமான வாக்குகளை நிச்சயம் பிரிப்பார். தவிர, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் களம் இறங்கி குறைந்த அளவிற்காவது அ.தி.மு.க. அனுதாப வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது.

ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் மீதமிருக்கும் நான்கு ஆண்டுகளில் தொகுதிக்கு சில நன்மைகள் கிடைக்கலாம் எனக் கருதி அத்தொகுதி மக்கள் அ.தி.மு.கவுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்தால் மட்டுமே மதுசூதனனுக்கு வெற்றி நிச்சயம்.

ஆனால், ஆளும்கட்சிக்கு பாடம் கற்பிக்க வேண்டுமென மக்கள் நினைத்தால் தி.மு.கவிற்கே வெற்றி கிடைக்கும். தினகரனைப் பொறுத்தவரை வெற்றிக்கான வாய்ப்பே இல்லை என்பதுதான் ஆர்.கே. நகரின் யதார்த்தம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்