ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவு: வைகோ அறிவிப்பு

  • 3 டிசம்பர் 2017
வைகோ படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR/Getty Images

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்போவதாக வைகோ தலைமையிலான ம.தி.மு.க. அறிவித்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தொகுதியான சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். ஏற்கனவே காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவுதெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தி.மு.கவிற்கு ஆதரவளிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிரான இந்துத்துவ மதவெறி சக்திகளின் ஆக்டோபஸ் கரங்கள், தமிழகத்தை வளைக்கும் பேராபத்து சூழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில், டிசம்பர் 21 ஆம் நாள் நடைபெற இருக்கின்ற இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தல், முன் எப்பொழுதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. நாலாதிசைகளில் இருந்தும் பலமுனைத் தாக்குதல் நடத்தும் சூழலில், திராவிட இயக்கத்தைப் பாதுகாக்கவேண்டிய வரலாற்றுக் கடமை மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு இருக்கின்றது.

எனவே, ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்குவது என்றும், வெற்றிக்காகப் பணியாற்றுவது என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானிக்கின்றது." என்றும் ம.தி.மு.கவின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர்கள் வைகோவிடம் இந்தத் தீர்மானம் குறித்து கேள்வியெழுப்பியபோது, தீர்மானத்திலேயே அனைத்திற்கும் பதில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வைகோவின் இந்தத் தீர்மானத்தை வரவேற்பதாக தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அந்தத் தருணத்தில் முடிவுசெய்யப்படும் என்றும் தெரிவத்தார்.

ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் அவைத் தலைவர் மதுசூதனனும் சசிகலா அணியின் சார்பில் டிடிவி தினகரனும் பா.ஜ.க.சார்பில் கரு. நாகராஜனும் சுயேச்சையாக நடிகர் விஷாலும் போட்டியிடுகின்றனர்.

வடசென்னையில் அமைந்துள்ள இந்தத் தொகுதியில் 2015ஆம் ஆண்டிலும் 2016ஆம் ஆண்டிலும் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்