ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவது ஏன்? விஷால் விளக்கம்

  • 4 டிசம்பர் 2017
விஷால்

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட தனது வேட்பு மனுவை நடிகர் விஷால் தாக்கல் செய்தார். இதற்கு முன்னதாக காமராஜர் நினைவு இல்லம், எம்.ஜி.ஆர் இல்லம் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதேபோல நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (திங்கள்கிழமை) நடிகர் விஷால் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

இதே போல ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் இன்று மனு தாக்கல் செய்தார்.

மக்களின் பிரதிநிதியாக தான் இருக்க விரும்புவதாகவும், அனைவருக்கும் நல்லது செய்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவேன் என்று மனுதாக்கல் செய்த நடிகர் விஷால் கூறியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நடிகர் விஷாலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பதிவு செய்துள்ள கெஜ்ரிவால், "உங்களின் அரசியல் வருகை, பல இளைஞர்களை ஊக்குவிக்கும். நீங்கள் டெல்லி வரும்போது நாம் சந்திப்போம்" என்று கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டிசம்பர் 4 ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் முடிவடைய, டிசம்பர் 5 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். டிசம்பர் 7 அன்று வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை டிசம்பர் 24 அன்று நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

1977-இல் உருவாக்கப்பட்ட, இந்த சட்டமன்றத் தொகுதியில் இது வரை நடந்த தேர்தல்களில் 7 முறை அ.தி.மு.கவும், தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

முன்னதாக, அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மருது கணேஷும் அ.தி.மு.க. சசிகலா அணி தரப்பில் டிடிவி தினகரனும் மனுதாக்கல் செய்தனர்.

பிற செய்திகள் :

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்