ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இதுவெல்லாம் நடந்திருக்குமா?

  • ஆர். முத்துக்குமார்
  • எழுத்தாளர்
ஜெயலலிதா இருந்திருந்தால்?

பட மூலாதாரம், Getty Images

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான ஓராண்டில் தமிழக அரசியல் களத்தில் அதிகம் எழுப்பப்பட்ட கேள்வி எதுவென்று கேட்டால், "ஜெயலலிதா இருந்திருந்தால் இதுவெல்லாம் நடந்திருக்குமா?" என்ற கேள்வியைச் சொல்லலாம். அந்த அளவுக்குத் தமிழக, இந்திய அரசியலோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது இந்தக் கேள்வி.

தர்மயுத்தத்தில் இருந்தே தொடங்கலாம்!

ஓபிஎஸ் வகித்துவந்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு இரண்டு முறை வெவ்வேறு காலகட்டங்களில் சொன்னார் ஜெயலலிதா. அந்த இரண்டு முறையுமே மறுவார்த்தை பேசாமல் ராஜினாமா செய்து, ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் அமர்ந்தார் ஓபிஎஸ்.

ஆனால் அதே ராஜினாமாவை சசிகலா செய்யச் சொன்னபோது செய்த ஓபிஎஸ், சட்டென்று ஜெயலலிதா சமாதிக்குச் சென்று தியானம் செய்தார். சசிகலாவுக்கு எதிராகக் கட்சிக்குள் கலகக்குரல் எழுப்பினார். தர்ம யுத்தம் அறிவித்தார். இதுவெல்லாம் ஜெயலலிதா காலத்தில் நடந்திருக்கவில்லை.

ஓபிஎஸ் காபந்து முதலமைச்சராக இருந்தபோதுதான் தலைமைச் செயலகத்தில் வருமான வரிச் சோதனை நடந்தது. அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவின் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராம மோகன் ராவ்தான் முதன்முறையாக அந்தக்கேள்வியை எழுப்பினார். ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? உண்மை. ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வளவு பெரிய நெருக்கடியாக இருந்தாலும், தலைமைச் செயலகத்துக்குள் நுழைய வருமானவரித்துறை முயற்சித்திருக்காது.

பட மூலாதாரம், Getty Images

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றபிறகு திடீரென ஒருநாள் தலைமைச் செயலகத்துக்கு வந்த மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தமிழக அரசின் திட்டங்கள் குறித்த கோப்புகளை ஆய்வுசெய்தார்.

அப்போது முதலமைச்சர் பழனிச்சாமியும் உடனிருந்தார். என்றாலும், ஆய்வில் நடுநாயகமாக அமர்ந்திருந்தவர் வெங்கைய நாயுடு. அத்தோடு, விழா ஒன்றில் பேசிய வெங்கைய நாயுடு, "மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைக்காவிட்டால், கடும் சிரமங்களைச் சந்திக்கநேரிடும்" என்று எச்சரித்தார்.

இது போன்ற ஆய்வும் எச்சரிக்கையும் ஜெயலலிதா இருந்திருந்தால் நடந்திருக்க வாய்ப்புகள் மிக சொற்பம். அப்படி நடந்திருந்தால், அதனை இந்திய அளவிலான பிரச்னையாக, மாநில உரிமைப் பறிப்பு சார்ந்த போராட்டமாக ஜெயலலிதா மாற்றியிருப்பார். அதற்கான ஆதரவும் விரிவான அளவில் கிடைத்திருக்கும்.

மாநில அரசின் திட்டங்கள் தொடர்பாகவும் நிதித்தேவை குறித்துப் பேசுவதற்காகவும் மாநில முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதா வெகு அரிதாகவே டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசுவார்.

ஆனால் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடங்கி எல்லாவற்றுக்கும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் எல்லோரும் டெல்லிக்குச் செல்வதும், துறைசார் அமைச்சர்களுக்குப் பதிலாக அரசியல் விவகாரங்களைக் கவனிக்கும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேசுவதும் தற்போது தொடர்கதை.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது நடைமுறைகளை எல்லாம் தாண்டி பிரதமர் மோடியே ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்து கோரிக்கை மனுவைப் பெற்றுச் சென்றதை இந்த இடத்தில் நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசின் உதய் மின்திட்டம், ஜிஎஸ்டி, உணவுப்பாதுகாப்புத்திட்டம், நீட் தேர்வு போன்றவை ஜெயலலிதாவால் மிகத்தீவிரமாக எதிர்க்கப்பட்டவை. ஆனால் அந்தத் திட்டங்களை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்றுக் கொண்டது தமிழக அரசு.

வியப்பு என்னவென்றால், இந்தத் திட்டங்களுக்கான ஆதரவு கோரி முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க மத்திய அமைச்சர்கள் பெரும்பாடு பட்டதும், ஜெயலலிதாவின் அனுமதி கிடைக்காமல் தவித்துப் புலம்பியதும் நடந்தன. ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், தங்கமணியெல்லால் டெல்லிக்குச் சென்று ஆதரவைக் கொடுத்துவிட்டு வந்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலின்போது அதிமுகவின் அனைத்து அணிகளும் எங்களுக்கே ஆதரவளிக்கும் என்று சொன்னார் தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன். அதுபோலவே, தொலைபேசி உரையாடல் மூலமாகவே அதிமுகவின் ஆதரவைப் பெற்றுக்கொண்டது பாஜக.

ஆனால் ஜெயலலிதா இருந்தபோது மத்திய அமைச்சர்கள் டெல்லிக்கும் போயஸ் தோட்டத்துக்குமாக அலைந்து திரிந்ததும், ஜெயலலிதாவின் சந்திப்புக்காகக் காத்துக்கிடந்ததும், ஆதரவு கேட்டு நடையாய் நடந்ததும் சமகால நிகழ்வுகள்.

ஜெயலலிதா இருந்திருந்தால் நடந்திருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடிந்த மற்றொரு விஷயம், மாநில அமைச்சர்களின் பேட்டிகளும் பேச்சுகளும். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றவர்கள் துறை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பேசிவரும் பேச்சுகள் எல்லாம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தக்கூடியவை.

பட மூலாதாரம், Getty Images

ஜெயலலிதாவின் "ராணுவக் கட்டுப்பாட்டு" அணுகுமுறையை ஜனநாயக வாதிகளே ஏற்கும் அளவுக்கு அமைச்சர்கள் பேச்சுகள் அபத்தத்தின் உச்சத்தைத் தொட்டன. இவையெல்லாம் ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்காது.

ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்காது என்று உறுதியாகச் சொல்லமுடிந்த இன்னொரு விஷயம், ஆளுநரின் ஆய்வு. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவை மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதற்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் ஏகதேசமாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதலமைச்சர் தொடங்கி பெரும்பாலான அமைச்சர்கள் ஆளுநரின் ஆய்வை ஆராதித்து வரவேற்றனர். இது ஜெயலலிதா காலத்தில் நடந்திருக்கவாய்ப்பில்லை என்பதற்கு சென்னா ரெட்டி விவகாரம் பொருத்தமான உதாரணம்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது தொடர்பான தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் விளக்க அறிக்கை கோரினார் ஆளுநர் சென்னா ரெட்டி.

உண்மையில், அறிக்கை கேட்பதற்கான உரிமையும் அதிகாரமும் ஆளுநருக்கு உண்டு. ஆனாலும் அப்படி அறிக்கை கேட்டதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்தார். அமைச்சர்கள் எஸ்.டி.சோமசுந்தரம் உள்ளிட்டோர் ஆளுநரின் செயலுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images

அதன்பிறகு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக அதிமுக எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்பி பிரதமர் நரசிம்மராவிடம் முறையிட்டார்.

பல்கலைக் கழகங்களின் வேந்தர் பதவியில் இனி ஆளுநருக்குப் பதிலாக முதல்வரே இருப்பார் என்பதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டுவரமுயற்சி செய்தார். அந்த அளவுக்கு ஆளுநர் விவகாரத்தில் போர்க்குணத்துடன் செயல்பட்டவர் ஜெயலலிதா. ஆனால் அவருடைய வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் அதிமுக அரசு ஆளுநருக்குத் துளியளவு எதிர்ப்பையும் காட்டவில்லை.

அந்தத் துணிச்சலில்தானோ என்னவோ, ஆளுநருக்கான முதன்மைச் செயலாளர் என்ற பதவிக்குப் பதிலாக கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பதவிக்கு மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு நிகரான அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. இது ஜெயலலிதா காலத்தில் நடந்திருக்க வாய்ப்பேயில்லை. இந்தப் பட்டியல் இன்னும் நீளுமென்றே தோன்றுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: