குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஹர்திக் படேலுக்கு கூடும் கூட்டம் பிரதமர் மோதிக்கு ஏன் கூடுவதில்லை?

குஜராத் மாநில தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் ஒன்பதாம் தேதியன்று நடைபெறவுள்ள நிலையில், அங்கு நடைபெறும் தேர்தல் பிரசாரம் ஹர்திக் படேல் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இடையிலான யுத்தமாக மாறிவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹர்திக் படேல்

ஹர்திக் படேல் குஜராத் அரசியலுக்கு புதியவர். மோதி ஒரு காலத்தில் கூட்டத்தை கவர்ந்திழுக்கும் நபராக இருந்தவர்.

ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டதாக தோன்றுகிறது. ஹர்திக் படேலுக்கு கூடும் கூட்டம் மோதிக்கு கூடுவதில்லை என பலர் கூறுகின்றனர்.

''டிசம்பர் மூன்றாம் தேதி குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபனியின் சட்டமன்றத் தொகுதி இருக்கும் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற பேரணியில் மோதி கலந்துக்கொண்டார். கடந்த வாரம் ஹர்திக் படேலின் பேரணிக்கு கூடிய கூட்டத்தை போல, மோதியின் பேரணியில் மக்கள் கூட்டத்தை பார்க்க முடியவில்லை'' என்கிறார் இரண்டு பேரணிகளையும் பார்த்த ராஜ்கோட்டை சேர்ந்த செய்தியாளர் கீரிஷின் ஸலா.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரதமர் நரேந்திர மோதி

''ஹர்திக்கின் கூட்டத்திற்கு வருபவர்கள் தாங்களாகவே விருப்பத்துடன் வருகிறார்கள். ஆனால், பாரதிய ஜனதா கட்சியோ மோதியின் பிரசாரத்தை கேட்க மக்களை அழைத்து வருவதற்கு பல ஏற்பாடுகளை செய்கிறது'' என்கிறார் கீரிஷின்.

ஹர்திக் முன்வைத்து பேசும் பிரச்சனைகள் மக்களுடனான அவரது தொடர்பை வலுப்படுத்துவதாக பலர் நம்புகின்றனர்.

''விவசாயம் மற்றும் வேலைவாய்ப்புகளில் உள்ள பிரச்சனை குறித்து ஹர்திக் படேல் பேசுகிறார். இது கிராமப்புற இளைஞர்கள் இடையேயான அவருடைய அவருக்கு இணக்கத்தை மேம்படுத்துகிறது. குஜராத்தின் கிராமப்புற இளைஞர்களுக்கு விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை. அதுமட்டுமல்ல, அவர்களுக்கு வேறு எந்த வேலைவாய்ப்புகளும் இல்லை''.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹர்திக் படேல்

''மறுபுறத்தில் மோதியின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே போகிறது. குஜராத்தின் தெற்குப் பகுதியில் நடைபெறவிருந்த பேரணியின் இடத்தையே அவர் மாற்ற வேண்டியிருந்ததை உதாரணமாக கூறலாம்''.

''இதற்குமுன் மோதியின் பல பேரணிகளை பார்த்திருக்கிறேன். அதில் மாபெரும் கூட்டம் கூடுவதையும் கண்டிருக்கிறேன். ஆனால் தற்போது அவரது பேரணிகளுக்கான கூட்டம் மிகவும் குறைந்துவிட்டது'' என்கிறார் ஹர்திக் படேல் மற்றும் பிரதமர் மோதியின் பேரணிகளில் கலந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர் தர்சன் தேசாய்.

ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சூரத்தில் ஞாயிறன்று ஹர்திக் படேல் கலந்துக்கொண்ட சாலைப்பேரணியில் மிகப்பெரிய அளவில் மக்கள் கலந்துக்கொண்டனர். அதன்பிறகு சூரத்தில் கிரண் செளக் பகுதியில் நடைபெற்ற பேரணியிலும் ஹர்திக் படேல் உரையாற்றினார்.

''25 கி.மீ தூர சாலைப் பேரணி, பொதுக்கூட்டம் போல இருந்தது. இதுவரை சூரத் காணாத ஒன்று இது. வீதிகளில் நிற்கவே இடமில்லை, ஆனால் ஆச்சரியப்படும்விதமாக, ஹர்திக் படேலின் பிரம்மாண்ட சாலைப்பேரணி நடைபெற்ற அதே தினத்தன்று பெளருச் மாவட்டத்தில் நடைபெற்ற நரேந்திர மோதியின் பேரணியில் காலி நாற்காலிகளை பார்க்கமுடிந்த்து. இதுவே நிலைமையை எடுத்துச் சொல்ல போதுமானது'' என்று மூத்த பத்திரிகையாளர் ஃபைஸல் பகிலி பிபிசியிடம் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி

"ஹர்திக்கின் பேரணி, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தை வெளிப்படுத்துகிறது'' என்கிறார் ஃபைஸல் பகிலி,

பிபிசியிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சி செய்தித்தொடர்பாளர் யமல் வியாஸ், "பிரதமர் நரேந்திர மோதியையும் ஹர்திக் படேலையும் ஒப்பிடவே முடியாது. மோதி நாட்டின் மிகப்பெரிய தலைவர், அவருடைய பேரணிகளுக்கு இருக்கும் வரவேற்பு எங்களுக்கு திருப்தியாக இருக்கிறது. இது கட்சியில் நேர்மறையான சூழலை உருவாக்கியுள்ளது".

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குஜராத் பெண்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவது ஏன்?

"குஜராத்தின் தெற்குப் பகுதியில் நடைபெறவிருந்த பிரதமரின் பேரணி பாதுகாப்பு காரணங்களுக்காகவே இடம் மாற்றப்பட்டது. அதற்கு வேறெந்த காரணமும் கற்பிக்க வேண்டியதில்லை" என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்