ஆளுநரிடம் புகார் அளிப்பேன்: தலைமைத் தேர்தல் அலுவலரைச் சந்தித்த பிறகு நடிகர் விஷால்

நடிகர் விஷால் படத்தின் காப்புரிமை vishal/Twitter

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் போட்டுயிடுவதற்கான தனது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.

புதன்கிழமையன்று மாலை 4.30 மணியளவில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் ராஜேஷ் லக்கானியைச் சந்தித்த விஷால், தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருப்பதில் முறைகேடு இருப்பதாகத் தெரிவித்தார்.

இத்தனை பேர் மனுத்தாக்கல் செய்திருக்கும் நிலையில், தனக்கு பரிந்துரைத்தவர்களை அழைத்து அவர்களிடம் விசாரித்தது சரியானதல்ல என்றும் விஷால் கூறினார். மேலும் தன் தரப்பு வாதங்களை ஒரு மனுவாகவும் ராஜேஷ் லக்கானியிடம் சமர்பித்தார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "இதற்குப் பிறகு ஆளுநரிடம் புகார் தெரிவிக்கப்போகிறேன்" என்று கூறினார். மேலும், "பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஒரு கையெழுத்துப் போட மறந்துவிட்டார். அவரை அழைத்து கையெழுத்திடச் சொன்னார்கள். அதுபோல எனக்கும் வாய்ப்புக் கொடுத்திருக்கலாமே. இது ஜனநாயகத்தை கேலி செய்யும் விதமாக இருக்கிறது" என்று குற்றம்சாட்டினார்.

ராஜேஷ் லக்கானியிடம் அவர் அளித்த மனுவில், வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்ட தினத்தன்று நடந்தவற்றை அவர் பட்டியலிட்டிருந்தார். தன்னுடைய வேட்புமனு முன்னதாக பரிசீலனை செய்யப்பட்டபோது சில வேட்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, கடைசியாக தனது மனு பரிசீலிக்கப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்ததாக விஷால் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தான் உணவு அருந்துவதற்காக வெளியில் சென்றபோது தன்னுடைய படிவத்தில் கையெழுத்திட்டிருந்த இருவரை அழைத்துவந்து, அவர்களது மறுப்பை ஏற்று தன்னுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் விஷால் குற்றம்சாட்டியிருக்கிறார்.

உடனே, தனக்குக் கையெழுத்திட்டுவிட்டு பிறகு மறுத்தவர்களை அழைத்து தொலைபேசியில் பேசியபோது, தாங்கள் மிரட்டப்பட்டதால் அதனை மறுத்ததாக தெரிவித்ததாகவும் அதனைத் தான் பதிவு செய்து தேர்தல் அதிகாரியிடம் அளித்ததையும் விஷால் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதன் பிறகு வெளியில் சென்று யாரிடமோ பேசிவிட்டு வந்த தேர்தல் அதிகாரி, தனது மனு ஏற்கப்பட்டதாகத் தெரிவித்தாகவும் இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு சுமார் எட்டு மணி அளவில் அங்கிருந்து வெளியேறியதாகவும் அப்போது குறுக்கிட்ட ஊடகத்தினரிடம் தனது மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கூறியதைக் கூறியதாகவும் விஷால் தெரிவித்தார்.

ஆனால், இரவு பத்தேமுக்கால் மணியளவில் தனது மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டதாகவும் 8.10 மணியிலிருந்து பத்தே முக்கால் மணிக்குள் என்ன நடந்ததென தனக்குத் தெரியவில்லையென்றும் விஷால் தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.

ஆகவே, தலைமைத் தேர்தல் அதிகாரி இந்த விவகாரத்தில் தலையிட்டு தனது மனுவை ஏற்று இடைத்தேர்தலில் போட்டியிட விரைவில் வகைசெய்ய வேண்டுமென விஷால் கூறியிருக்கிறார்.

ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 145 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 73 பேரது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் விஷாலின் வேட்பு மனு தவிர, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குகள் டிசம்பர் 24ஆம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்