பட்டியல் பிரிவில் சேர்த்ததே தேவேந்திகுல வேளாளர் அவல நிலைக்கு காரணம்: கிருஷ்ணசாமி

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை பட்டியல் சமூகப் பிரிவில் இருந்து நீக்கி இதர பிறப்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியத் தலைநகர் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின்தலைமையில் பேரணி நடைபெற்றது.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைPTPARTY

இந்தப் பேரணியின் நோக்கம் மற்றும் தனது அடுத்த கட்ட நிலைப்பாடுகள் குறித்து கிருஷ்ணசாமி பிபிசி தமிழுக்கு நேரலை பேட்டி அளித்தார். அவரது பேட்டியிலிருந்து:

பொதுவாக, இதர பிற்படுத்தப்பட்ட இன மக்கள்தங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோருவதுதான் வழக்கம். இந்நிலையில், பட்டியல் சாதிப் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை நீக்கி, இதர பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் வலியுறுத்துவது ஏன்?

தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்படும் மக்கள், பூர்விக வேளாண் குடிமக்கள். இவர்கள் மருத நிலத்தின் மக்கள் ஆவர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆதி திராவிடர் பிரிவில் தேவேந்திர குல வேளாளர்களை சேர்க்கக்கூடாது என்று அப்போதே இந்த சமுதாயத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், வலுவான சமுதாய தலைமை இல்லாத காரணத்தால் தேவேந்திர குல வேளாளர் சமூகம் பட்டியல் சாதிப் பிரிவில் சேர்க்கப்பட்டது.

பட்டியல் சாதிப் பிரிவில் சேர்க்கப்பட்டதால் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் தனது பூர்விக அடையாளத்தை இழந்துள்ளது.

Image caption 'பட்டியல் பிரிவில் சேர்த்ததே தேவேந்திர குல வேளாளர்களின் அவல நிலைக்கு காரணம்'

ஆதி திராவிடர் என்றும், ஹரிஜன் என்றும் இந்த சமூகம் கொச்சைப்படுத்தப்பட்டது. இட ஒதுக்கீடு என்ற பெயரில் இந்த சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டது. அதனால், இந்த பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை நீக்க நாங்கள் கோருகிறோம்.

சாணார் என்றும் கிராமணி என்றும் அழைக்கப்பட்டவர்களை நாடார்கள் என்று அழைக்கிறார்கள். கள்ளர், மறவர், அகமுடையார் என்று அழைக்கப்பட்டவர்களை முக்குலத்தோர் என்றழைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. வன்னியர்கள் என்று அழைக்கப்பட்டவர்களை சத்திரியர்கள் என்றழைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதே போல், ஏழு பட்டப்பெயர்கள் கொண்ட எங்கள் சமூகத்தை தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க நாங்கள் கோருகிறோம். எங்கள் சமுதாயத்தின் அடையாள மீட்புக்காக நாங்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறோம்.

பெரும்பான்மை சமூகத்தினருடன் நாங்கள் இரண்டறக் கலப்பதற்கு பட்டியல் சாதிப் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் வெளியேற வேண்டும்.

மற்ற சமூகத்தினரைவிட தேவேந்திர குல வேளாளர் மக்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக இன்னமும் பின்தங்கியுள்ளனர். இந்த சூழலில், இட ஒதுக்கீடு மட்டுமேதானே அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை, சலுகைகளை பெற்றுத்தந்துள்ளது. இதை இழப்பது சரியான முடிவா?

பட்டியல் பிரிவில் சேர்த்ததுதான் தேவேந்திர குல வேளாளர் மக்களின் அவல நிலைக்கு காரணம். இந்த மக்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்கிவிட்டால் இவர்களுக்கு சமுதாயத்தில் இருந்த இழிவு மற்றும் ஒடுக்குமுறை ஆகியவை போய்விடும்.

படத்தின் காப்புரிமை DRKRISHNASAMY

தொழில் மற்றும் வணிக ரீதியாக இவர்கள் முன்னேற வேண்டுமென்றால், பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர் பிரிவினர் வெளியேற வேண்டும். இட ஒதுக்கீட்டினால் மட்டும் ஒரு சமூகம் முன்னேறிவிடுமா?

உங்களை போன்றவர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் பயன்பெற்று சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளீர்கள். ஆனால், தற்கால இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் அவர்கள் பாதிக்கப்படுவார்களே?

ஹரிஜன் என்ற பெயரோடும், ஆதிதிராவிடர் என்ற என்ற பெயரோடும் கிடைக்கக்கூடிய இட ஒதுக்கீட்டை காட்டிலும், தேவேந்திர குல வேளாளர் என்ற அடையாளத்தோடு மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து தேவையான இட ஒதுக்கீட்டை நான் பெற்றுத் தருவேன்.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு இல்லையா? பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மரியாதையும் கிடைக்கும். இட ஒதுக்கீடும் கிடைக்கும்.

உங்கள் கட்சியிலோ, தேவேந்திர குல வேளாளர் சங்கங்களிலோ இல்லாத பல இளைஞர்கள் உங்கள் சமூகத்தில் உள்ளார்கள். இது குறித்து அவர்களின் கருத்தை அறியாமல் நீங்கள் இதனை எவ்வாறு முன்னெடுக்கிறீர்கள்?

20 ஆண்டுகளாக நான் பல கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். பலருடன் உரையாடியுள்ளேன். பல்கலைக்கழக பேராசிரியர்களின் உதவியோடு இது குறித்து நான் ஆய்வும் மேற்கொண்டுள்ளேன்.

இட ஒதுக்கீட்டுக்காக இனி போராட வேண்டாம். சுயமரியாதைக்காக நீங்கள் போராடுங்கள். பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற நடவடிக்கை எடுங்கள் என்பதே ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர் பிரிவின் கோரிக்கையாக உள்ளது. இதனை நிறைவேற்றுவதே மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

இந்தப் பேரணியைத் தொடர்ந்து இது தொடர்பாக உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

நாளை அல்லது நாளை மறுநாள் பிரதமரை சந்திப்பதற்கு (டிசம்பர் 7 அல்லது 8-ஆம் தேதி) நேரம் கேட்டுள்ளோம். எங்களின் மனுவை அவர்கள் பெற்றுள்ளார்கள். நிச்சயமாக நாங்கள் பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

உங்கள் கோரிக்கைகள் சாத்தியமாக சட்ட வாய்ப்புகள் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள சட்ட ஆலோசகர்களை ஆலோசித்தீர்களா?

மத்திய, மாநில அரசுகள் நினைத்தால், இது ஒன்றுமே இல்லை. முற்பட்ட வகுப்பை சேர்ந்த சமூகத்தை பட்டியல் பிரிவில் சேர்ப்பது, பிற்படுத்தப்பட்ட பிரிவை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்ப்பது ஆகியவை இயல்புதான். பட்டியல் என்பது நிரந்தரமல்ல.

தமிழக முதல்வர், துணை முதல்வர் மாற்றும் தமிழக ஆளுநரிடம் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். மத்திய அரசிடம் எங்கள் கோரிக்கையை அளிக்க உள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

முன்னதாக, தேவேந்திர குல வேளாளர் சாதியை பட்டியல் சாதியிலிருந்து நீக்க வேண்டுமெனக் கோரி கடந்த அக்டோபர் ஆறாம் தேதியன்று சென்னையில் மாநாடு ஒன்றை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்