இரவிலும் தொடர்கிறது கன்னியாகுமரி மீனவர் ரயில் மறியல்: முதல்வர் பேச்சு நடத்தக் கோரிக்கை

  • 7 டிசம்பர் 2017

ஒக்கி புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துக் கூறுவதாகவும், புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணிகளை துரிதமாக செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில்நிலையத்தில் நூற்றுக்கணக்கான மீனவ பெண்கள், ஆண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பகலில் நடந்த போராட்டம் இரவிலும் நீடிக்கிறது. முதல்வர் போராட்ட இடத்துக்கு வந்து மீனவர்களிடம் பேசும்வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

போர்க் கால அடிப்படையில் மீனவர்களை மீட்கும் பணி நடத்தப்படும் என்று முதல்வர் கூறியபோதும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான மீனவப் பெண்கள், இளைஞர்கள் என பலரும் கலைந்து செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்களுடன் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததுள்ளது.

கடந்த வாரம் ஒக்கி புயல் தாக்கியதில் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் பலரும் புயலில் சிக்கியதாகவும், சுமார் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் தமிழகம் தொடங்கி குஜராத் வரை பல்வேறு கடற்கரைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக அரசு தெரிவித்திருந்தது.

எண்ணிக்கை குழப்பம்

ஆனால் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. மேலும் எட்டு மீனவர்கள் மட்டுமே இதுவரை ஒக்கி புயலில் சிக்கி இறந்தவர்கள் என தமிழக அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் குழுப்பம் உள்ளது என மீனவ அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கூறிவருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பேரணியாக நடந்துவந்து குழித்துறை ரயில்நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மீனவர்களை மீட்கும் பணியில் தொய்வு உள்ளதாக போரட்டக்கார்கள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கன்னியாகுமரி மற்றும் பிற கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமாகியுள்ளனர் என்றும் அவர்களின் எண்ணிக்கையை சரியாக தெரிவிக்க அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

"தொலைந்த இடத்தில் தேடவில்லை"

நெய்தல் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பெர்லின்,'' ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயுள்ள சுழலில் மீட்புப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படுகிறது. மீட்புப் பணிகளின் போது, நாங்கள் சொல்லும் இடங்களில் தேடுங்கள் என்று கூறுகிறோம். குறைந்தபட்சம் நூறு கடல் மைல் தூரத்திற்கு அப்பால்தான் குமரி மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்வார்கள். ஆனால் தேடுதல் பணிகள் அறுபது கடல்மையில் பகுதியோடு நிறுத்திக்கொள்ளப்படுகிறது,'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

போர்க்கப்பல் வந்ததா?

போராட்டத்தில் கலந்துகொண்ட அருட்தந்தை சர்ச்சில், போர்க்கப்பல் கொண்டுவரப்பட்டு மீட்பு பணிகள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்களிடம் கூறினார், ஆனால் இதுவரை போர்க் கப்பல் சென்றதாகத் தெரியவில்லை என்றார்.

''தமிழக அரசு மீனவர்களை மீட்கும் பணியை முறையாகச் செய்யவில்லை. எங்கள் கணிப்பின்படி எழுபதுக்கும் மேற்படவர்கள் இறந்துள்ளனர். ஆனால் அரசு வெறும் எட்டு பேர் இறந்துள்ளனர் என்று கூறுகிறது. தமிழக அரசிடம் நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். நாங்கள் அண்டை மாநிலமான கேரளா முதல்வரிடம் சென்று உதவி கேட்கப்போகிறோம். உடனடியாக மீனவர்கள் இழந்த படகுகளுக்கான இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும்,'' என்று சர்ச்சில் பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் பாதிப்பு பற்றியும், மீட்புப் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்த தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் குளச்சலில் செய்தியாளர்களிடம் பேசியபோது மீனவர்களுடன் கலந்துபேசி இழப்பீடு தரப்படும் என்று தெரிவித்தார்.

''இந்த துக்கரமான நேரத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். உங்களுக்கு தகுந்த இழப்பீடு கிடைக்க உயரதிகாரிகளிடம் பேசுவோம். உங்களுக்கு கண்டிப்பாக உதவுவோம்,'' என்று கூறினார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்