தேர்தல் அலுவலரை மிரட்டினாரா விஷால்?

ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி வேலுசாமியைத் தான் மிரட்டியதாக, அவர் கூறுவதாக நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார். தேர்தலில் போட்டியிட தன்னைப் பரிந்துரைத்துவிட்டு, பின்வாங்கியவர்களின் வீடுகளின் முன்பாக யாரோ ஆட்கள் நிற்பதாகவும் விஷால் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ரஜினி, விஷால், கமல்

சென்னை ஆர்.கே. நகருக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரைப் பரிந்துரைத்து கையெழுத்திட்ட இருவர், அந்தப் படிவத்தில் இருப்பது தங்களது கையெழுத்து இல்லை என நேரில் வந்து கூறியதால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், கையெழுத்திட்டு, பிறகு மறுத்தவர்களை நேரில் அழைத்துவரும்படி விஷாலிடம் தேர்தல் ஆணையம் கூறியதாக முன்னதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் வியாழக்கிழமையன்று பிற்பகலில் தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வந்த விஷால், தேர்தல் அதிகாரியிடம் சென்று பேசினார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் மாற்றமில்லையென தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தான் தேர்தல் அதிகாரியிடம் பேசியதாகவும், அவர் தனது வேட்புமனுவை ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்தார். மேலும் முதலில் ஏற்பதாகச் சொல்லிவிட்டு, பிறகு நிராகரிக்கப்பட்டதாகச் சொன்னது ஏன் எனக் கேட்டபோது, தான் மிரட்டியதால்தான் அப்படிச் சொல்ல வேண்டியதாயிற்று என தேர்தல் அதிகாரி கூறியதாகவும் தான் எப்படி தேர்தல் அதிகாரியை மிரட்ட முடியும் என்றும் விஷால் கேள்வியெழுப்பினார்.

"நாங்கள் கெஞ்சினோம். அந்தக் கையெழுத்து உண்மையானது என்று கெஞ்சினோம். பிறகு அவர் ஏற்பதாகச் சொன்னார். அவருக்குக் கை கொடுத்தேன்" என்றார் விஷால்.

தனக்குக் கையெழுத்திட்டு மறுத்தவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களை அழைத்துவரப் போனபோது அவர்கள் வீட்டில் இல்லையென்றும் அவர்களது வீடுகளின் முன்பாக ஆட்கள் நிற்பதாகவும் விஷால் குற்றம்சாட்டினார். அவர்களது பாதுகாப்பு குறித்து தனக்குக் கவலையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்போவதாகவும் விஷால் கூறினார்.

இதற்கிடையில் ஆர்.கே. நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது 59 பேர் களத்தில் உள்ளனர்.

ஆர்.கே. நகரில் ஒட்டுமொத்தமாக 145 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இவர்களில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நடிகர் விஷாலின் வேட்புமனுக்கள் உட்பட 73 பேரில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 72 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதில் 13 பேர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். ஆகவே தற்போது 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த 59 பேரில் ஒருவர் மட்டுமே பெண். 47 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.

தற்போது ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் இ. மதுசூதனனும் சசிகலா அணியின் சார்பில் டிடிவி தினகரனும் தி.மு.க. சார்பில் மருது கணேஷும் பா.ஜ.க. சார்பில் கரு. நாகராஜனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைக்கோட்டுதயமும் போட்டியிடுகின்றனர். பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்துள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :