இந்து பெண்கள் திருமணத்திற்கு தந்தையின் சம்மதம் தேவையா? நீதிமன்றம் கூறுவதென்ன?

  • 8 டிசம்பர் 2017

தங்களது சொந்த விருப்பத்தில் திருமணம் செய்து கொண்ட ஹாதியா மற்றும் ஷாஃபின் ஜஹானின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES

திருமணம் என்ற சாதாரண நிகழ்வை, மதம் மாற்றி செய்வதாக இருந்தால் அதாவது இந்து பெண்கள் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்து கொண்டால் இந்து தீவிரவாதிகள் அதனை "லவ் ஜிஹாத்" என்று குறிப்பிடுகின்றனர்.

இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் மதமாற்றுவதை குறிப்பிடும் பெயராக "லவ் ஜிஹாத்" என்ற வார்த்தையின் அர்த்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் இந்தியாவில் பல இளம் தம்பதிகளின் வாழ்க்கையை அழிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த லவ் ஜிஹாத் பிரசாரம்.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், மக்கள் தங்கள் விருப்பப்படி எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். மதம் மாறினாலும் மாறவில்லை என்றாலும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

மூன்றாம் தரப்பினரால் அல்லாது, திருமணம் செய்து கொண்டவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே அதனிலிருந்து விலக்கு (விவாகரத்து) பெற முடியும். இவ்வாறாக சட்டம் கூறினாலும், தற்போது எழுந்துள்ள சர்ச்சையில், இது போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

வரும் சட்டமன்ற தேர்தலில், வலதுசாரி கட்சியான பாரதிய ஜனதா கட்சி காலூன்ற நினைக்கும் கேரளாவில்தான் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் கணிசமான அளவில் முஸ்லிம் மக்கள் தொகை உள்ளது. இந்தியாவில், முஸ்லிம்கள் அரசியல் தாக்கம் ஏற்படுத்தும் ஒருசில மாநிலங்களில் கேரளாவும் ஒன்று.

படத்தின் காப்புரிமை Reuters

24 வயதான ஹாதியா இந்துவாக பிறந்து, கடந்த ஜனவரி மாதம் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். அகிலா என்ற அவருடைய பெயரை ஹாதியா என மாற்றிக் கொண்டார்.

அப்போதிலிருந்து அவரின் தந்தை, ஹாதியா தனது விருப்பத்திற்கு மாறாக மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாக நிரூபிக்க நீதிமன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தனது தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் கேரளா உயர்நீதிமன்றத்தில் ஆஜரான ஹாதியா, தன் விருப்பதின் பெயரிலேயே மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.

எனினும், கடந்த மே மாதம் ஹாதியாவின் திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஹாதியாவை "பலவீனமானவர் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அவரது அடிப்படை உரிமைகளை கருத்தில் கொள்ளாமல் அவரது பெற்றோரின் காவலில் ஹாதியாவை ஒப்படைத்தது.

பதினெட்டு வயது நிரம்பிய அவர்களின் சொந்த வாழ்க்கையில் கேரள உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்ததை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கு பின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஹாதியாவின் கணவர் ஷாஃபின் ஜஹான்.

திருமணத்தை ரத்து செய்த கேரள நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து விசாரிக்காமல், இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியது.

இளம் இந்துப் பெண்களை மதமாற்ற சில தீவிர குழுக்கள் இயங்கி வருவதாக உயர்நீதிமன்றம் விமர்சித்ததை உச்சநீதிமன்றம் மேலும் தூண்டியது.

ஹாதியாவை நேர்காணல் செய்ய அவரது வழக்கறிர்களால் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்க, அவர் தொடர்ந்து தந்தையின் வீட்டுக்காவலில் இருந்து வந்தார்.

இறுதியாக, 2017 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஹாதியா ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தனது தந்தைக்கு பதிலாக, தனது கணவரை சட்டப்பூர்வ பாதுகாவலராக நியமிக்க வேண்டும் என்று ஹாதியா கூற, "மனைவியின் பாதுகாவலராக கணவர் இருக்க முடியாது" என வழக்கை விசாரித்த நீதிபதி சந்திராசூத் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பெண்கள் ஒன்றும் உடைமை பொருள் அல்ல, சமுதாயத்தில் சொந்த நிலைக்கு உரிமையானவர்கள் என ஹாதியாவிற்கு விவரிக்கும்படி, அவரது கணவர் ஷாஃபின் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் நீதிபதி தெரிவித்தார்.

நாட்டின் உச்சநீதிமன்றம் கூட, பெண்ணின் சுதந்திரம் மற்றும் அவரது திருமணம் குறித்து அவர் எடுக்கும் முடிவுகளை முழுமையாக நம்பவில்லை என்று விசாரணை நாளன்று வெளிப்பட்டது.

ஹாதியாவின் சுதந்திரத்தை பாதுகாத்து, பெற்றோர்கள் காவலில் இருக்கும் அவரை விடுவிக்க வேண்டும் என்பதே அன்று அத்தம்பதியினருக்காக வாதாடிய வழக்கறிஞர்களின் கோரிக்கையாக இருந்தது.

இந்த விவகாரத்தில் நடைபெற்றது ஒரு பாலின பாகுபாடு என்று அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது.

ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தில் தலையிட்டதில் அதன் பங்கை மறந்து உச்சநீதிமன்றம் செயல்பட்டது ஆச்சரியம் தரக்கூடியதாக இருக்கிறது.

தனது உரிமையை பெற கேரளாவில் இருந்து வந்த ஹாதியாவின் சொந்த வாழ்க்கை மற்றும் விருப்பங்களை இழிவுப்படுத்தும் வகையில் நீதிமன்றம் விமர்சனம் செய்து வந்தது.

பலவீனம் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர் என்பதற்கு பதிலாக, அன்றைய தினம் ஹாதியாவின் துணிச்சலான நம்பிக்கையும் மற்றும் பல மாதங்களாக அவர் குடும்பத்தார், ஊடகங்கள் மற்றும் நீதித்துறையிடமிருந்து எதிர்கொண்டுவரும் அழுத்தங்களே அவரிடம் வெளிப்பட்டன.

சமீபத்தில் முத்தலாக் சர்ச்சை எழுந்தபோது, இஸ்லாமிய ஆணாதிக்க சமூகத்தில் முஸ்லிம் பெண்களின் உரிமை பாதிக்கப்படுகிறது என ஊடகங்கள் பேசி வந்தன. தற்போது எழுந்துள்ள சர்ச்சையில் இந்து பெண்களை எளிமையாக 'மூளைச்சலவை' செய்யமுடியும் என்று கூறுகின்றன.

இந்து பெண்கள், முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்வதை "லவ் ஜிஹாத்" எனக் குறிப்பிடுவது இந்து பெண்களால் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க முடியாது என்ற எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

மேலும், தங்களுக்கு எது சிறந்தது என பெண்களால் முடிவெடுக்க முடியாது என்பதால், அவர்களது தந்தை முடிவெடுக்கிறார். அவருடைய தந்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்த திருமணம் செல்லாது என்று குறிப்பிடுகிறது.

பல மாநிலங்களில் தேர்தல் பிரசாரங்களின் போது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் வலதுசாரி அமைப்புகள் லவ் ஜிஹாத் என்ற வார்த்தையை சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். நீதிமன்றங்கள்கூட வலதுசாரி கொள்கைகளுக்கு ஒத்துப்போகின்றன என்ற சர்ச்சை கவலைக்குரியதாக உள்ளது.

மும்பையை சேர்ந்த ஃபிளாவியா ஆக்னஸ் பெண்கள் உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர் ஆவர்.

பிற செய்திகள் :

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கடலை முதல்முறையாக பார்க்கின் அகதி குழந்தைகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :