“விவசாயத்தைவிட்டு வெளியேறுகிறோம்” டெல்டா விவசாயிகள் ஆவேசம்

கடந்த இரண்டு வாரங்களாக காவிரியின் கடைமடை பகுதிகளான திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பெய்த பெருமழை, அப்பகுதியின் வேளாண் நிலங்களை மோசமாக பாதித்து இருக்கிறது.

Image caption கட்சனம் பகுதியில் மழையில் மூழ்கிய சம்பா நடவு

சம்பா நடவு மேற்கொள்ளப்பட்டிருக்கும் சமயத்தில் பெய்த மழை, பல ஏக்கர் பயிர்களை முற்றும் முழுவதுமாக மூழ்கடித்து இருக்கிறது.

குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கட்சனம், பழயங்குடி, மணலி, ஆலதாம்பட்டி ஆகிய பகுதிகளில் சம்பா பயிர், மழையில் முழுவதுமாக மூழ்கி உள்ளன என்கிறார்கள் விவசாயிகள்.

பயிர்களை அழித்தது மழை மட்டுமல்ல, கடலும்தான்

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திருவாரூர் மாவட்டம் மணலி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெ. சக்திவேல், "இந்தப் பஞ்சாயத்தில் மட்டும் ஏறத்தாழ 700 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் 80 விழுக்காட்டுக்கும் மேலான சம்பா பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளன" என்கிறார்.

விவசாயிகளின் நெல் சாகுபடி வரவுச் செலவு கணக்கை நம்மிடம் விளக்கினார் விவசாயி கண்ணையன்.

Image caption மணலி பகுதியில் மழையில் மூழ்கிய பயிர்களை காட்டும் விவசாயிகள்

"ஓர் ஏக்கரில் பயிர் நடவு செய்ய, விவசாய கூலி, உரம் மற்றும் பூச்சிக்கொல்லிக்கான செலவு என எல்லாம் சேர்த்து 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகும். எல்லாம் சரியாக நடந்தால், எதிர்பார்த்த மகசூல் கிடைத்தால், அந்த ஓர் ஏக்கர் நிலம் 30 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் தரும். செலவு எல்லாம் போக 15 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். இது குறைந்தது 120 நாள் பயிர். அதாவது, 4 மாத உழைப்பில் எங்களுக்கு வருவாயாக 15 ஆயிரம் கிடைக்கிறது. இது எப்படி ஒருவரின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இருக்கும்? ஆனால், இப்போது இந்த வருவாயையும் மழை இல்லாமல் செய்து விட்டது" என்று தங்கள் பிரச்சனையை விளக்கினார் கண்ணையன்.

ஒரு பக்கம் மழையால் பயிர்கள் மூழ்கி உள்ளதென்றால், இன்னொரு பக்கம் கடல் நீர் உள்ளே புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. முத்துபேட்டை பகுதியில் உள்ள தில்லைவிளாகம் பகுதியில் உள்ள வேளாண் நிலங்களில் கடல் நீர் உட்புகுந்ததால், அவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

'விவசாயத்தைவிட்டு வெளியேறுகிறோம்'

இந்த ஆண்டு மட்டுமல்ல, சென்ற ஆண்டும் இதேதான் நிகழ்ந்தது. ஆனால், சென்ற ஆண்டு எங்கள் பயிர்களை நாசம் செய்தது வறட்சி என்கிறார் திருக்குவளை தாலுக்கா கூத்தான்குடியைச் சேர்ந்த விவசாயி எஸ். முருகையன்.

Image caption நீரில் மூழ்கிய பயிரை காட்டும் கூத்தான்குடியைச் சேர்ந்த விவசாயி முருகையன்

''சென்ற ஆண்டு வறட்சியினால் திக்கு தெரியாமல் நின்றோம். இந்த ஆண்டு மழை; அப்படியே எல்லாம் சரியாக நடந்தாலும் எங்கள் வேளாண் பொருட்களுக்கு உரிய விலையும் இல்லை. பின்ன ஏன் நாங்க விவசாயம் செய்யணும்? அதான், நான் விவசாயத்திலிருந்து வெளியேறி டைல்ஸ் வேலைக்கு போறேன். என் பையனும் திருப்பூருக்கு வேலைக்கு போயிட்டான். அரசு உரிய கவனம் செலுத்தி விவசாயத்தை லாபகாரமான தொழிலா மாற்றவில்லை என்றால் இப்பகுதி விவசாயிகள் கொத்து கொத்தாக விவசாயத்தைவிட்டு வெளியேறுவார்கள்" என்கிறார் விவசாயத்தைவிட்டு வெளியேறிய முருகையன்.

'உரிய காலத்தில் வாய்க்கால்களை தூர்வாராததே பாதிப்புகளுக்கு காரணம்'

மன்னார்குடியை சேர்ந்த விவசாயி காசி, "மழையை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. கிழக்கு தஞ்சை பகுதி, காவிரியை நம்பி விவசாயம் செய்யும் பகுதி. மேட்டூர் அணையில் இருந்து மட்டும் உரிய நேரத்துல தண்ணி திறந்து இருந்தாங்கன்னா இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. சம்பா நடவு உரிய சமயத்துல நடந்து இருக்கும். பயிரும் நல்லா வளர்ந்து இருக்கும். இந்த மழையினால் இவ்வளவு மோசமான பாதிப்பு வந்து இருக்காது" என்கிறார்.

மேலும் அவர், "எங்களால கிணத்து பாசனமும் செய்ய முடியாது. ஏன்னா, இது கடல் சூழ்ந்த பகுதி, நாங்க கிணறு வெட்டி விவசாயம் பாக்குறோம்னு கிளம்பினா கடல் தண்ணி உள்ளே வந்துரும். எங்க நிலமும் நாசம் ஆகிடும்" என்று விளக்குகிறார்.

Image caption நீரில் மூழ்கிய பயிர்

இந்தப் பகுதி வாய்க்கால்களை தூர்வாராததும் சம்பா பயிர் மழையில் மூழ்கியதற்கு ஒரு காரணம் என்கிறார். "பல வருஷமா வாய்க்கால் தூர்வாரப்படாததால் தண்ணீர் வரதுக்கும் வழியில்லை. மழை காலத்துல தண்ணி வடிஞ்சு போறதுக்கும் வழி இல்லை. அரசு மட்டும் உரிய காலத்தில் வாய்க்கால்களை தூர்வாரி இருந்தா இந்த நிலை ஏற்பட்டு இருக்காது" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் விவசாயி காசி.

இந்த குற்றச்சாட்டை ஆமோதிக்கிறார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் தனபால். அவர், "காவிரி டெல்டா பகுதியிலலுள்ள வாய்காலின் நீளம் மட்டும் 36, 251 கி.மீ. ஆனால், இந்த வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. நிலைமை இவ்வளவு மோசமாக, இதுவும் ஒரு காரணம்" என்கிறார்.

வறட்சியினாலும், மழையினாலும் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆள்பவர்கள் விவசாயிகளின் நிலையை புரிந்துக் கொண்டு, உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுக்கும் பணியினை தொடங்க வேண்டும். அதுபோல, வாய்கால்களை, ஆறு கடலோடு கலைக்கும் முகதுவாரங்களை தூர்வார வேண்டும். அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் தனபால்.

விவசாயிகளுக்கு இழப்பீடு எப்போது?

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திருவாரூர் ஆட்சியர் எல். நிர்மல் ராஜ் கூறுகையில், "சம்பா பயிரிடபட்ட நிலத்தில் உள்ள நீர் விரைவில் வடிந்துவிடும். ஏதேனும் சேதம் ஏற்பட்டு இருந்தாலும், ஜனவரியில் பயிர் அறுவடைக்கு வரும் போதுதான் துல்லியமாக தெரியும். மாவட்டத்தில் உள்ள வாய்கால்கள் அனைத்தையுன் தூர்வார நிதி கோரி உள்ளோம்." என்றார்.

விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து பேசிய தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு, "வேளாண்துறை அதிகாரிகள் அந்தப் பகுதிகளை பார்வையிட்டு இருக்கிறார்கள். கணக்கெடுக்கும் பணி நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், முழுமையான சேத மதிப்பு தண்ணீர் வடிந்த பின்தான் தெரியும். அப்போதுதான், எவ்வளவு ஏக்கர் பயிர் அழுகி இருக்கிறது என்று கணக்கிட முடியும். சேதமான பயிர்களுக்கு நிச்சயம் முதல்வர் இழப்பீட்டை அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "டெல்டா பகுதிகளில் ஏரிகளும், குளங்களும் தூர்வாரப்பட்டு இருக்கின்றன. ஏரிகளில் இருந்த வண்டல் மண்ணும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. தூர்வாரப்படாத கால்வாய்கள் எவை என கணக்கிட சொல்லி இருக்கிறோம். அவை விரைவில் தூர்வாரப்படும்." என்றார்.

பிற செய்திகள்

வீட்டுக்குள் விவசாயம் செய்யும் பொறியியல் பட்டதாரி (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அறுவடை செய்யும் பொறியியல் பட்டதாரி - அர்ச்சனா ஸ்டாலின்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :