குஜராத்: கடைசி நேரத் தேர்தல் அறிக்கை பாஜகவுக்கு வெற்றி தருமா?

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு. நேற்றுதான் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியிடாத பாரதிய ஜனதா கட்சியை கிண்டல் செய்து செய்தி வெளியிட்டிருந்தார் குஜராத்தில் அந்த கட்சிக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஹர்திக் படேல். அதன் பிறகே இந்த அறிக்கையும் வெளியானது.

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE

ஹர்திக் தமது டிவிட்டர் செய்தியில், "வீடியோ தயாரிக்கும் மும்முரத்தில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை தயாரிக்க மறந்துவிட்டது போலும்! நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு… குஜராத்தில், வளர்ச்சியுடன் சேர்ந்து தேர்தல் அறிக்கையும் காணமல் போய்விட்டது. ஐயா, யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள், மீண்டும் ஒருமுறை உங்கள் வழக்கமான பாணியில் தேர்தல் அறிக்கையை தூக்கி எறியுங்கள்".

ஹர்திக் படேல் இந்த டிவிட்டர் செய்தியை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கு பிறகுதான் நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், குஜராத் மாநிலத் தலைவர் ஜீதூ வகானியும் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள்.

ஒரு ஆவணத்தை வெளியிடுவது எங்களது நோக்கமல்ல, குஜராத்தில் நாங்கள் ஏற்படுத்தியிருக்கும் வளர்ச்சி விகிதத்தை தொடர்ந்து பராமரிக்க விரும்புகிறோம்" என்று கூறுகிறார் கட்சியின் மூத்த்த் தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி.

உலகமே மந்தநிலையில் இருக்கும்போது, இந்த வளர்ச்சி விகிதத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம், அதை மேலும் நேர்மறையாக பராமரிப்போம்" என்றார் அவர்.

படத்தின் காப்புரிமை Getty Images

குஜராத் தேர்தல் அறிக்கை பற்றி ஜெட்லி கூறிய முக்கிய விஷயங்கள்

•ஒட்டுமொத்த குஜராத்தையும் ஒருங்கிணைக்கவேண்டும். அனைத்து வர்க்கத்தினரின் நலனும் எங்கள் முக்கிய இலக்கு. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள், ஏற்கனவே மத்திய அரசு செயல்படுத்தி வருவதுதான்.

•குஜராத்தில் சமூகங்களை பிரிக்கும் காங்கிரஸின் முயற்சி சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும். காங்கிரஸ் கட்சி கூறியிருக்கும் இரண்டு வாக்குறுதிகள் அரசியலமைப்புக்கு எதிரானவை.

•குஜராத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி இந்தியாவிலேயே மிக அதிகமாக உள்ளது. குஜராத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

•ஒவ்வொரு துறையிலும் ஏற்கனவே இருக்கும் வளங்களை அதிகரிக்க வேண்டும். வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்த வீடு கொடுக்கவேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.

•குஜராத்தில் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். எங்கள் விவசாயிகளின் செயல்திறன் குறித்து பெருமிதம் கொள்கிறோம், அவர்களுடைய செயல்திறனை மேலும் மேம்படுத்துவோம்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஜெட்லியின் பதில் என்ன?

தேர்தல் வாக்குறுதிகள் பற்றி ஜெட்லியிடம், செய்தியாளர்கள் கேள்விக்கணைகளை தொடுத்தனர். எங்களது வளர்ச்சி விகிதமே எங்களின் செயல்பாடுகளை எடுத்துக்கூறும் என்றார் அவர்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன?

  • நவீன சாதனங்களுடன் மாநிலத்தை இணைப்பது
  • கல்வித் தரத்தை மேம்படுத்துவது
  • கடுமையான நோய்களுக்கு மாவட்ட நிலை மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான வசதிகளை விரிவாக்குவது
  • பொதுநோய்கள் மற்றும் மலிவு விலை மருந்துகள் விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது
  • நடமாடும் மருத்துவமனை மற்றும் 252 நோய் கண்டறியும் ஆய்வகங்களை நிறுவப்படும்.
  • குஜராத்தில் 2022ஆம் ஆண்டிற்குள் நீரினால் ஏற்படும் நோய்கள் ஒழிக்கப்படும்.

தொடர்புடையசெய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :