ஐக்கிய அரபு எமிரேட்: பைலட் இல்லாத விமான டேக்சி அறிமுகப்படுத்த திட்டம்

மகிழ்ச்சிக்கான தேசிய அமைச்சகம், செயற்கை மதிநுட்ப தேசிய அமைச்சகம், எதிர்காலத்துறை, பந்தய ட்ரோன்களின் உலக நிறுவனம்.

படத்தின் காப்புரிமை A3/AIRBUS

ஹலோ, ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தின் திகைப்பூட்டும் ஆனால் நிஜமான உலகத்திற்கு உங்களை வரவேற்கிறாம்.

இந்த அமைச்சகங்களும், துறைகளும் எதிர்கால ஹாலிவுட் திரைப்பட படப்பிடிப்புத் தளங்ளல்ல.

அவை இப்போதே உள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்டின் அதிகாரப்பூர்வ அமைப்பு உருவாக்கத்தின் ஒரு பகுதியாக அவை அமைந்துள்ளன.

நான் கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு முதல்முறையாக சென்றேன்.

22 ஆண்டுகளாக நான் ஒன்றிணைந்து இருந்து வருகின்ற மேற்குலகு ஊடகங்களின் செய்திகளை வாசித்ததன் மூலம் பல ஆண்டுகளாக உருவாகிய பல கருத்துகளோடு நான் அங்கு சென்றிருந்தேன்.

வானளாவிய கட்டடங்களை கொண்டிருக்கும் ஓர் உணர்வற்ற வணிக மையம் என்று துபாயை பற்றி நான் எண்ணியிருந்தேன்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஓர் எண்ணெய் உற்பத்தி மையம் என்பதை தவிர ஐக்கிய அரபு எமிரேட் பற்றி அதிகமாக நான் எண்ணியதில்லை.

ஆனால், அரேபியர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளில் இறுமாப்புடன் இருப்பவர்கள் என்றும், தங்களுடைய செல்வத்தை அற்பமான விடயங்களில் செலவழிப்பதில் தீவிரமான புதுப்பணக்காரர்கள் என்றும் நியாயமற்ற எண்ணத்தை கொண்டிருந்தேன்.

ஆனால், அங்கு 10 நாட்கள் நான் தங்கியிருந்தது, பலவற்றை எனக்கு வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

எமிரேட்டுக்காரர்கள் தங்களுடைய பாரம்பரிய உடையில் மிகவும் எளிமையானவர்களாக தோன்றலாம். ஆனால், அவர்கள் மிகவும் புத்திசாலிகள்.

படத்தின் காப்புரிமை Tom Dulat/Getty Images

அவர்களின் நிகழ்காலம் பாதுகாப்பாக உள்ளது. இன்னும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய அவர்கள் பாடுபடுகிறார்கள்.

வளமானதொரு சமூகத்தை அவர்கள் கொண்டுள்ளனர். பல நாடுகள் கனவு கூட காண முடியாத அளவுக்கு எதிர்காலத்தை கட்டியமைக்க கடுமையாக உழைத்து வருகின்றனர்.

இதனை அவர்கள் தலைதெறிக்கும் வேகத்தில் செய்வதோடு, எவ்வித ஆரவாரமும் இன்றி உருவாக்கி வருவதுதான் மிகவும் முக்கியமானது.

செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரத்தை கட்டியமைக்க இந்த நாடு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

உலகின் புதிய தகவல் தொழில்நுட்ப முனையமாக மாறுவதற்கு தயார் செய்து வருகிறது.

வலவன் (பைலட்) இல்லாமலேயே இயங்கக்கூடிய விமான டேக்சி சேவையை தொடங்கும் நிலையில் உள்ளது.

படத்தின் காப்புரிமை RTA/VOLOCOPTER

"உலக ட்ரோன் பந்தயம்" என்று அழைக்கப்படும் ட்ரோன்களின் பந்தய நிகழ்வுகளை முறைப்படுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பொதுச் சேவைகளில் உயர் தொழில்நுட்ப பயன்பாடு பற்றிய தெளிவான புரிதல் இல்லாதவர்களுக்கு இது மனதை கவரக்கூடியது. திகைப்பூட்டுவது.

பின்தங்கிய நாடோடிகளாக, பழங்குடியின அம்சங்களால் பிரிக்கப்பட்டு, சில தசாப்பதங்களுக்கு முன்னால் சூடான பாலைவனத்தில் பழங்கால நிலைமைகளில் வாழ்ந்ததை கவனத்தில் கொள்கிறபோது, உண்மையில் இவர்களின் இந்த முன்னேற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அவர்களின் அருகிலுள்ள பல அரேபிய நாடுகள் பயங்கவாத தாக்குதல்கள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் இனக் கலவரங்கள் ஆகியவற்றை சமாளிக்க முயன்று கொண்டிருக்கின்றன.

இந்த வேளையில், இதற்கு அருகிலிருக்கும் நாடுகளாலும், உலக நாடுகளாலும் பொறாமைப்படும் விதமாக, அதனுடைய 90 லட்சம் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க விரைவான முன்னேற்றங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அடைந்து வருகிறது.

அரேபிய உலகில் மிகவும் சகிப்புதன்மை வாய்ந்ததாக அவர்களுடைய நாடு இருப்பதில் அவர்கள் பெருமை கொள்கிறார்கள்.

ஆனால், அவர்கள் இன்னும் அதிக சகிப்புத்தன்மையோடு இருக்க விரும்புகின்றனர்.

படத்தின் காப்புரிமை GIUSEPPE CACACE/AFP/Getty Images

வணிக ரீதியாக வெற்றி பெறுவதோடு, ஓர் ஆன்மிக சமநிலையைப் பெறுவதன் மூலம் அவர்கள் இயங்கிக்கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

வரக்கூடிய மாதங்களிலும், ஆண்டுகளிலும் ஒமர் பின் சுல்தான் அல் ஒலாமாவின் பெயரை நீங்கள் அதிகமாக கேட்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அவர்தான் தேசிய செயற்கை மதிநுட்பத் துறையின் அமைச்சராக உள்ளார்.

தமது 27வது வயதில் 2 மாதங்களுக்கு முன்னதாக அவர் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆர்வத்தை தூண்டும் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், எதிர்கால துறையின் துணை இயக்குநர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் உலக அரசுகளின் உச்சி மாநாட்டை வழிநடத்திய மிகவும் மெச்சத்தக்க அனுபவங்களை பெற்றவர்.

புதிய தொழில்நுட்பங்களிலும், செயற்கை மதிநுட்ப கருவிகளிலும் முதலீடு செய்வதன் மூலம் அரசின் செயல்பாட்டை மேம்படுத்துவது அல் ஒலாமாவின் பொறுப்புக்களில் அடங்குகின்றன.

உகந்த அளவு செயல்திறனை உருவாக்குகின்ற பார்வையோடு செயற்கை மதிநுட்பங்களை எல்லா துறைகளிலும் பயன்படுத்த அவர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அவருடை உரைகள் எளிமையாகத் தோன்றலாம். ஆனால், எல்லா செய்ல்பாடுகளும் ஐக்கிய அரபு எமிரேட்டின் எதிர்காலத்தை கட்டியமைப்பதாகவும், இன்னும் சுமார் 100 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் முதலாவது ஸ்மாட் நகரத்தை அமைப்பதற்குத் தயார் செய்வதை நோக்கியும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2071ம் ஆண்டு தொலைநோக்குத் திட்டத்திற்காக அவர் ஏற்கனவே பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

1971 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் இருந்து விடுதலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Tom Dulat/Getty Images

இந்த எமிரேட் சமூகம் செல்வச் செழிப்பால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு அங்குள்ளவரின் தலா நபர் வருமானம் 72 ஆயிரத்து 800 டாலர்களாகும்.

அவர்கள் வாழ்க்கையில், குறைந்தபட்சம் புறவயமாகவாவது, திருப்தியடைந்தவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறு இருந்தும் மகிழ்ச்சிக்கான தேசிய அமைச்சகம் என்ற தனிப்பட்ட அமைச்சகத்தை அரசு உருவாக்கியுள்ளது.

மகிழ்ச்சிக்கான அமைச்சகம்

ஐக்கிய அரபு எமிரேட்டில் மகிழ்ச்சியை வளர்ப்பதே அதனுடைய நோக்கம். அரசு எப்படி மகிழ்ச்சியை பரப்ப முடியும்? என்ற கேள்வி எழலாம்.

இது பற்றிய தெளிவு எதுவும் இல்லை. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட் உலக நாடுகளிலே மிகவும் மகிழ்ச்சியான நாடாக உருவாக வேண்டுமென விரும்புவதாக இந்த அமைச்சகத்தின் இணையதளம் தெரிவிக்கிறது.

இது ஏற்கெனவே அமைதியான நாடாக உள்ளது. உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியற்றவர்களாக தோன்றவில்லை. மகிழ்ச்சியை கொண்டிருப்பதும், நேர்மறையான வாழ்க்கைப்பாணியுமே இந்த அமைச்சகத்தின் செயல்பாடாக அமையும்.

குடிமக்களுக்கு மகிழ்ச்சியை கண்டறிவது அரசின் பணியல்ல என்ற கூறி, இது மிகவும் அந்தரங்கத்தில் தலையிடுவது என்று சிலர் வாதிடலாம்.

ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் என்னால் மகிழ்ச்சி காண முடியாது. தனிப்பட்ட நபராக நான் அனுபவிக்கும் உரிமைகளில் இருந்துதான் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஐக்கிய அரபு எமிரேட்டில் ஜனநாயகமோ, கருத்து சுதந்திரமோ கிடையாது.

அரசு குடிமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்குமானால் சிறப்பான முறையில் மகிழ்ச்சியை வென்றெடுக்க முடியும் என்று சிலர் தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :