“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் ஆளுநர் தலையிடுவதா?”

அரசுத் திட்டப் பணிகளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில், இது பாஜகவின் அரசியல் உள்நோக்கம் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு சரியா? ஆளுநர் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது மாநில அரசுக்கு உதவிகரமாக அமையுமா? என்று வாதம் விவாதம் பகுதியில் பிபிசி நேயர்களின் கருத்துக்களை கேட்டிருந்தோம்.

நேயர்கள் அளித்த பதில்களை இதில் தொகுத்து வழங்குகின்றோம்.

ஃபேஸ்புக் நேயரான சக்தி சரவணன், “ஆளுநர் அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறேன் என்னும் பெயரில் நடுவண் அரசு இடும் கட்டளைகளை செயல்படுத்தி மாநில அரசின் மீதான மக்களின் நம்பகத்தன்மையை குறைக்கும் வகையில் செயல்படுகிறார். இத்தகைய ஆளுநர் செயல்பாடுகள் நடுவண் அரசிற்கு இணக்கமாக இயங்காத மாநிலங்களில் மட்டுமே நடக்கிறது. அனைத்து மாநிலங்களின் கூட்டாச்சி முறையைக் குறைத்து ஒற்றை ஆட்சிமுறையை முன்னிறுத்தும் நடவடிக்கையின் தொடக்கமாகவே இதை நாம் பார்க்க வேண்டும்” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

லிங்கவேல் ராஜா, “பதவி பிரமாணம் செய்வதற்கும் சட்டசபையின் தீர்மானங்களுக்கு கையெழுத்து போடுவதற்கும் எதற்கு ஆளுநர்? தலைமை நீதிபதி போதுமே! எந்த காலத்திலும் நாடு மாறாது. மக்கள் தான் மாற வேண்டும்” என்கிறார்.

இது மத்திய ஆளுங்கட்சியின் தந்திரமே‌. இல்லையெனில் ஏன் அஸ்ஸாம் மாநிலத்தில் பதவி வகிக்கும் போது இது போன்று ஏதும் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்புகிறார் விஜயகுமார் ராஜேந்திரன்.

ஆர்எம்எஸ்ஆர்எம் என்ற பெயரிலான நேயர், “குடியரசு தலைவர் அனைத்து மாநிலத்திலும் மூக்கை நுழைத்தால் பிரதமர் எதற்கு? ஆளுநர் மாவட்டத்தில் மூக்கை நுழைத்தால் முதல்வர் எதற்கு” என்று வினா எழுப்புகிறார்.

இது எந்த விதத்திலும் உதவாது. அமைச்சர்கள் செய்ய வேண்டிய வேலையை ஆளுநர் செய்கிறார். பாஜக வுக்கு விளம்பரம் என்கிறார் சரோஜா பாலசுப்பரமணியம்.

சேகர் பர்னபாஸ், “ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் தலையிடக்கூடாது. ஜனாதிபதி மத்திய அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை செய்ய மோடி விடுவாரா? ஜனநாயகத்தில் இந்த நச்சு கூடாது” என்கிறார்.

“ஆளுநர் ஆய்வு செய்வது தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லதுதான் இதில் கருத்து கூற ஒன்றும் இல்லை” என்பது தங்கராஜின் வாதம்.

அரசு திட்டப்பணிகளை ஆளுநர் ஆய்வு செய்வது என்பது சாமானிய மக்கள் நலனுக்காகவே. அவரின் செயல் வரவேற்க தக்கது என்று சிவகுமார் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ராம் ஈஸ்வரன், ஆய்வு செய்வது நல்லது என்றும் பிரேம் அம்பாஸ், அவர் ஆய்வு வரவேற்கத்தக்கது என்றும் கூறியுள்ளனர்.

மானி எம்என் என்ற நேயர், மாநிலங்களில் ஆளுநர்கள் ஆய்வு செய்வதைப் போன்று மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளில் குடியரசுத் தலைவர் நேரடியாக ஆய்வு செய்ய முடியமா? இதற்கு பாஜக வின் பதில் என்ன? என்கிறார்.

இனி டுவிட்டர் மூலம் பதிவிட்ட கருத்துகளை பார்க்கலாமா!

இப்போதுதான் ஆளுநர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இது நன்மையாகதான் முடியும் என்கிறார். செந்தில் எம். ராபர்ட்ஸ்.

இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது, பிற்காலத்தில்தான் எல்லாம் தெரியும் என்று டுவிட் பதிவிட்டுள்ளார் மணிகண்டன்.

ஆளுநர் செய்வது சரியே என்று ஆதரவு தெரிவித்துள்ளார் தங்கம் ரமேஷ் என்ற நேயர்.

தேவையற்ற அதிகார மோதலுக்கு வழிவகுக்கும் என்கிறார் ராஜசேகர் குறிச்சி.

தவறில்லையே என்பது வையைத்துறைவனின் வாதமாக உள்ளது.

ஆளுநரின் அத்துமீறிய செயல் என்று எதிராக டுவிட் பதிவிட்டுள்ளார் ரங்கசாமிகுமரன்

கடமையை தானே செய்கிறார் என்கிறார் ராமசுப்ரமணி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்