மோடியின் முதன்மை எதிரியாக வளர்ந்திருப்பவர் யார் தெரியுமா?

மோடியின் முதன்மை எதிரியாக வளர்திருப்பவர் யார் தெரியுமா? படத்தின் காப்புரிமை Getty Images

குஜராத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தூக்கத்தைக் கெடுக்கிறார் என்று சொல்லப்படும் ஹர்திக் பட்டேலின் வருகைக்காக சாலைச் சந்திப்பில் கூட்டமாக வெயிலில் காத்திருக்கிறார்கள் இந்த மக்கள்.

கொஞ்சம் சிடுசிடுப்பான, முன்வளைந்த தோற்றமுடைய ஹர்திக்கின் வயது 24-தான். சட்டப்படி தேர்தலில் நிற்கிற வயதுகூட இல்லை.

ஆனால், இவர் இயங்க ஆரம்பித்து இரண்டாண்டுகளுக்குள் மோடியின் முதன்மை எதிரியாக மாறியிருக்கிறார் என்கிறார் ஒரு பார்வையாளர்.

சட்டமன்றத் தேர்தல் நடக்கும் மோடியின் சொந்த மாநிலத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரும் பட்டேதார் (படேல்) சாதியின் போராட்டத்தின் முகம் இவர்தான்.

குஜராத்தின் மக்கள் தொகையில் 14 சதவீதமாக இருக்கும் இந்த சாதி சமூக ரீதியில் மேலே இருக்கிற, செல்வாக்கு மிக்க விவசாய சாதி. கடந்த 20 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிற மோடியின் பாஜக-வுக்கு பெருமளவில் இந்த சாதி வாக்களித்து வந்துள்ளது. கடந்த காலத்தில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தீவிரமாகப் போராடிவந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது.

பட்டேல்கள் இட ஒதுக்கீடு கோரிக்கை

இந்தியாவில் இப்போது விவசாயம் அதிக உழைப்பு தேவைப்படுவதாக, குறைந்த பலன் தரக்கூடியதாகவும், கௌரவக் குறைவான தொழிலாகவும் ஆகிவிட்டது. எனவே பல நிலவுடைமைச் சாதிகள் குறிப்பாக ஹரியாணாவில் ஜாட்டுகள், மகாராஷ்டிராவில் மராத்தாக்கள் போன்றோர் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கவும், அவர்களை கௌரவமான தொழில்களில் அமர்த்தவும் அவர்கள் விரும்புகிறார்கள்.

மலிவான சீனப் பொருள்களின் இறக்குமதியால், பட்டேல்களுக்கு சொந்தமான சுமார் 48,000 சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நகரத்துக்குச் செல்லும் பட்டேல் இன இளைஞர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இட ஒதுக்கீடு கோரி போராடும் பட்டேல்கள்.

இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்த வாய்ப்பு குறைவாக இருந்தாலும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பட்டேல்கள் கோருகின்றனர். பின்தங்கும்படி விடப்பட்டதாக பட்டேல்கள் நினைக்கிறார்கள் என்கிறார் வழக்குரைஞர் அனந்த் யக்னிக். அதுதவிர, மாநில முதல்வராக இருந்த மோடி பிரதமராகிச் சென்ற பிறகு அவரளவு செல்வாக்கு மிக்க தலைவர் யாரும் பாஜகவில் உருவாகவில்லை. எனவே மாநிலத்தில் பாஜக வெல்லப்படமுடியாத கட்சியாக இல்லை.

ஹர்திக் பட்டேலின் சாதியின் கோபத்தால் தற்போது பாஜக பின்தங்கி உள்ளது. மொத்தமுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் 70 தொகுதிகளின் முடிவை தீர்மானிப்பதில் படேல்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.

துப்பாக்கிச்சூடு

இரண்டாண்டுகள் முன்பு பட்டேல்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்த சாதியைச் சேர்ந்த 12 பேர் இறந்தனர்.

போராட்டத்தை ஏற்பாடு செய்த ஹர்திக் பட்டேல் மீது தேசவிரோதக் குற்றச்சாட்டின்கீழ் வழக்குத் தொடரப்பட்டு அவர் 9 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இறுதியாகப் பிணை வழங்கப்பட்டபோது ஆறுமாதம் அவர் மாநிலத்துக்கு வெளியே இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Reuters

சிறைவாசமும், மாநிலத்துக்கு வெளியே அனுப்பியதும் பட்டேல்களின் மத்தியில் ஹர்திக்கை ஒரு நாயகனாக்கியது. 2002க்குப் பிறகு குஜராத்தில் பாஜக கடும் போட்டியை இத்தேர்தலில்தான் எதிர்கொள்கிறது. ஹர்திக் பட்டேலிடம் இருந்து பாஜகவுக்கு வரும் சவால் என்பது தீவிரமானது.

அவர் கூட்டத்துக்கு அவர் மூன்று மணி நேரம் தாமதமாக வந்தாலும் சாலைச் சந்திப்பில் அவருக்காக காத்திருக்கும் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அவரைக் காணத் தாவுவது இதைத்தான் காட்டுகிறது.

அவர்களில் கூலிங் கிளாசும், டீ சர்ட்டும் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வரும் இளைஞர் கூட்டம் கணிசமான பகுதி. அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. கிடைத்தாலும் குறைந்த சம்பளமே கிடைக்கிறது.

முதல் முறை வாக்களிக்கும் பாவ்திப் மராடியாவுக்கு தனியார் துறையில் வேலை கிடைக்குமா என்ற சந்தேகம். இட ஒதுக்கீடு கிடைத்தால் அரசுப் பணி ஏதாவது கிடைக்கும் என்று நம்புகிறார்.

அந்தப் பகுதியில் உள்ள ஒரே சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.

ஹர்திக் பட்டேல் விவசாய சிக்கல் பற்றி, நகர்ப்புற கிராமப்புற ஏற்றத்தாழ்வு பற்றி, வேலையின்மை பற்றியெல்லாம் பேசுகிறார்.

கடந்த மாதம் காங்கிரசுடன் கூட்டணி அறிவித்தார் ஹர்திக். கடைசியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது 1985ல்தான். ஆனால் தொடர்ச்சியாக இந்தக் கட்சி 30 சதவீத வாக்குகளைப் பெற்று வந்துள்ளது.

ராகுல் பெற்ற புதிய பலம்

புதிய வேகத்துடன் இந்த மாநிலத்துக்கு வந்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த முறை ஹர்திக் மட்டுமல்லாமல் வேறு இரண்டு சக்திகளின் துணையும் கிடைத்துள்ளது.

ஒன்று பிற்படுத்தப்பட்டோர் தலைவர் அல்பேஷ் தாக்கூருடையது மற்றொன்று, தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானியுடையது. ஆனால், இட ஒதுக்கீட்டால் பலன் பெற்ற தலித்துகளுக்கும், இட ஒதுக்கீடு பெற முனையும் பட்டேல்களுக்கும் இடையிலான கடந்த கால கசப்புகள் அத்தனை எளிதாக இந்தப் பிரிவுகளின் வாக்குகளை காங்கிரசுக்கு மாற்றித் தந்துவிடாது என்று பாஜக நம்புகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

இன்னொன்று மோடி மீதான கவர்ச்சி. இதுவரை மோடி இரண்டு டஜன் தேர்தல் பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார். இந்தக் காரணிகள் எப்படியாவது இத்தேர்தலில் தங்களைக் காப்பாற்றிவிடும் என்று பாஜக நம்புகிறது.

குஜராத் பெரிய அளவில் நகரமயமான மாநிலம். இங்கே நகரப் பகுதியில் பாஜக பெரிய அளவில் செல்வாக்குப் பெற்றுள்ளது. நகரப் பகுதியில் உள்ள 84 தொகுதிகளில் கடந்த முறை பாஜக 71 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த முறை கிராமப்பகுதியில் உள்ள 98 தொகுதிகள் பாஜகவுக்கு தலைவலியாக இருக்கும். பண நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும், கிராமவாசிகளும் வளர்ச்சி என்பது நகரத்துக்கு மட்டும் இருக்கக்கூடாது என்று பேசுகிறார் ஹர்திக் பட்டேல்.

ஆட்களைத் திரட்டுவதிலும், பண பலத்திலும் பாஜக முந்தியிருக்கிறது. நகர்ப்புற வாக்குகள் இந்தமுறையும் பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தலைத் திருப்பும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. வெற்றி பெறுவது கடினமாக இருந்தாலும் அடித்துப் பிடித்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றிவிடும் என்கிறார் பல தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்திய சஞ்சய்குமார்.

பாஜக-வை வீழ்த்துவதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறார் ஹர்திக் படேல். "இந்தமுறை மாற்றம் நடக்கவில்லை என்றால் பாஜகவை வீழ்த்த குஜராத் மக்களுக்கு சக்தி இல்லை என்றாகிவிடும்," என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்