கன்னியாகுமரி: போராட்டத்தில் ஈடுபட்ட 15,000 மீனவர்கள் மீது வழக்கு

கன்னியாகுமரி: போராட்டத்தில் ஈடுபட்ட 15,000 மீனவர்கள் மீது வழக்கு படத்தின் காப்புரிமை லெனின்

ஓக்கி புயல் தாக்கியதில் காணாமல் போன மீனவர்களை உடனடியாக மீட்கவேண்டும் என்றும் தமிழக முதல்வர் நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் நடந்துவந்து, குழித்துறை ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 15,000 மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராடத்தை ஒருங்கிணைத்த 240 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் போராட்டம் நடத்திய 5,000 பெண்கள் உள்ளிட்வர்கள் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் ஒன்பது வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம்.துரை பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அனுமதி வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டு ரயில் போக்குவரத்தை தடுத்து நிறுத்தியது ஆகிய காரணங்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

போராட்டக்கார்களுடன் இருந்த குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்,பத்மனாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் உள்ளிட்டவர்கள் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை பெர்லின்

வழக்கு பதிவாகியுள்ளது என்பது தெரியும் என்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் வழக்கு பற்றி கவலைப்படவில்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கூறினார்.

''மக்களே ஒன்று கூடி அவர்களின் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்துவதற்கு எப்படி அனுமதி வாங்கமுடியும்? மீட்புப் பணிகளை உடனடியாக அரசு செய்திருந்தால் மக்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபடப்போகிறார்கள்?'' என்று பிரின்ஸ் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில் முட்டம் துறைமுகம், பள்ளம், சின்னத்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை(டிசம்பர் 10,2017) பெண்கள் குழந்தைகளுடன் கருப்பு கொடிகள் மற்றும் பதாகைகளைக் கொண்டு கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமாரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்