வெள்ளம் சூழ்ந்த கிராமம்: டிராக்டரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

டிராக்டரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
Image caption டிராக்டரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

வேதாரண்யம் அருகே பழையாற்றங்கரையில் மழை வெள்ளம் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் டிராக்டரில் பள்ளிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட வண்டல், குண்டூரான்வெளி, பழையாற்றங்கரை போன்ற பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலை துண்டிக்கப்பட்டு அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன.

சாலையில் 4 அடிக்கு மேல் நீர்தேங்கி நிற்பதால் வண்டல், குண்டுராண்வெளி பகுதியைச் 150க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் ஆபத்தான நிலையில் தலைஞாயிறு பகுதிக்கு படகு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Image caption பாதிக்கப்பட்ட கிராமம்

இதே பேரூராட்சியைச் சேர்ந்த பழையாற்றங்கரை பகுதியில் 160க்கும் மேற்பட்டகுடியிருப்புகளில் நீர்தேங்கி உள்ளதாலும், சரியான சாலைவசதி இல்லாததாலும் இரண்டு கிலோமீட்டர் தூரம் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது ஒரு வாரமாகியும் தண்ணீர் வடியவில்லை.

இதனால் அங்கிருந்து தலைஞாயிறு பகுதிக்கு செல்லும் 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் டிராக்டரில் காலையிலும், மாலையிலும் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்க்கு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

அரிச்சந்திரா, அடப்பாறு போன்ற ஆறுகளில் தடுப்பணை பணிகள் விரைந்து முடிக்காமலும், வாய்கால் தூர் வாராமலும் உள்ளதால் ஊருக்குள் புகுந்த தண்ணீர் ஒருமாத காலத்திற்கு மேல் வடியாமல் உள்ளது.

Image caption டிராக்டரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

"புள்ளைங்க பள்ளிக்கு செல்ல முடியாமல் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால், டிராக்டரில் சென்று வருகின்றனர். சாலையில் தேங்கியுள்ள தண்ணீர் இன்னும் வடியவில்லை மருத்துவமனைக்கு செல்ல 108 வாகனம் கூட செல்லமுடியாமல் சிரமமாக உள்ளது. சாலை மிகவும் மோசமாக உள்ளது." என்று கூறியுள்ளார், பழையாற்றங்கரையை சேர்ந்த உமா.

இந்த பகுதியில், காலை மூன்று முறையும், மாலை மூன்று முறையும் டிராக்டர் இயக்கப்படுவதாக கூறிய, தலைஞாயிறு பேரூராட்சியின் செயல் அலுவலரான ரஞ்சித், "வண்டல், குண்டுராண்வெளி மழைநீரால் துண்டிக்கப்பட்ட நிலையில்; 150க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் தலைஞாயிறு செல்ல ஒரு படகும், அவுரிக்காடு செல்ல ஒரு படகும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த படகுகளில் மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் ." என்று தெரிவித்தார்.

இதனால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் வருவதால் அச்சத்துடன் குடியிருந்து வருவதாக, இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் சாலைவசதியை மேம்படுத்திதரவேண்டும் என்று அரசுக்கு கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்