நீர் பற்றாக்குறையை தவிர்க்க அணை கட்டும் 71 வயது மூதாட்டி

அம்லா ரூயாவை குறைத்து மதிப்பிடுவது எளிது.

ஆனால் 71 வயதான, இந்த மரியாதைக்குரிய தலைவி மிகவும் திறமைமிக்கவர். உலகிலேயே மிக அதிகமான அணை கட்டியவர்களில் ஒருவர், வறட்சிக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் முக்கியமாக பங்காற்றுபவர்களில் முன்னணியில் இருப்பவர்.

300 மில்லியனுக்கும் அதிகமான இந்திய மக்கள் ஆண்டுதோறும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.

அண்மைய ஆண்டுகளில் பருவமழை பொய்த்துவரும் நிலையில், அரசு விளைநிலங்களுக்கும் கிராமங்களுக்கும் ரயில்கள் மற்றும் டேங்கர்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யவேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

அருகிலிருக்கும் கிணற்றில் நீர் எடுக்க வேண்டும் என்றாலும் மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதால் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு இறக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் வறட்சியிலும் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்று. அம்லாரூயாவும் அவரின் ஆகார் தொண்டு நிறுவனமும் இங்கு பணியாற்றுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டியுள்ள அவர்கள், 115க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தியுள்ளனர். அதன் பின்விளைவாக அவற்றின் 193 சுற்றுவட்டார கிராமங்களிலும் அதன் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

பழங்கால முறை

நீர்த்தேக்கம் போன்ற நீரை தேக்கி வைக்கக்கூடிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடிப்பதற்காக உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது இந்த தொண்டு நிறுவனம்.

மனிதனால் புதிதாக உருவாக்கப்படும் நீர்த்தேக்கங்களுக்கு பதிலாக, மலைப்பாங்கான பகுதிகளின் இயற்கையான நிலப்பகுதிகளை பயன்படுத்தி. அதற்கேற்றாற்போல் சரிவான பகுதியை கட்டமைக்கின்றனர். நீரை தேக்கிவைக்கும் பகுதிகளை பலப்படுத்தி, இந்த ஓரளவு இயற்கையான நீர் படுகைகளில் நீரை சேமித்து வைக்கின்றனர்.

காலப்போக்கில் குறைந்துக்கொண்டே வந்து அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்ட நிலத்தடி நீர்மட்டமானது, பருவ மழை வரும்போது, தடுப்பணைகள் நிரம்புவதால் அதிகரிக்கும். கிராமங்களுக்கு அருகிலுள்ள நீர்நிலைகளிலும் கிணறுகளிலும் சேகரிக்கப்படும் நீர் வறண்ட காலத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

இவை குறைந்த செலவில் கட்டப்படுபவை. மேலும், பெரிய அளவிலான அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கட்டப்படும்போது மக்கள் பெருமளவில் இடம் பெயர வேண்டியிருப்பது போன்ற கட்டாயம் இவற்றில் இல்லை.

"இது ஒரு புதிய தீர்வு அல்ல, நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்ததே" என்கிறார் அம்லாரூயா.

"எங்களுடைய கட்டமைப்புகளில் மத்தியில் உறுதியான காங்கிரீட் சுவர் இருப்பதுபோல் வடிவமைக்கிறோம். எனவே நீரின் அளவு அதிகரித்து, நீர்மட்டம் அதிகரிக்கும்போது, மறுபுறமாக எளிதில் வழிந்துசெல்லும்" என்று கூறுகிறார் ஆகார் தொண்டு நிறுவனத்தின் பொறியாளர் டிரிக்பால் சின்ஹா.

"பிற சுவர்கள் மண்ணால் கட்டபடுகின்றன, நிலப்பகுதியில் சாதாரண மண்ணே பயன்படுத்தப்படுகிறது, இவை அனைத்தும் பெரும்பாலும் மண்ணால் கட்டப்பட்டவைதான்".

"இவற்றில் நீர் வந்து சேரும்போது, நீர் நேரடியாக மண்ணிற்குள் இறங்கி, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும். அதோடு, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிணறுகளின் நீர்மட்டத்தையும் அதிகரிக்கும்" என்று அவர் கூறுகிறார்.

தொண்டு நிறுவனத்தின்மீது அவநம்பிக்கை

தடுப்பணைகளை உருவாக்க 60% ஆதாரங்களை வழங்கும் இந்த தொண்டு நிறுவனம், மீதமுள்ள 40% நிதியை வழங்குமாறு உள்ளூர் சமூகத்தை கேட்டுக்கொள்கிறது.

தடுப்பணைகள் சீராக பராமரிக்கப்பட வேண்டும். கிராமங்கள் மற்றும் விவசாயிகள் செய்யும் முதலீடு, அவர்களை இவற்றின் உரிமையாளராக்குவதால், அவர்கள் தடுப்பணைகளை முறையாக பராமரித்து பலன் பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் வேறு இடத்தில் பணியாற்ற செல்லமுடியும் என்று அவர் கூறுகிறார்.

"முதலில் கிராம மக்கள் எங்களிடம் நம்பிக்கை வைக்கத் தயாராக இல்லை. எங்களுக்கு உள்நோக்கங்கள் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள்" அவர்கள் பணியை ஆரம்பித்த நாட்களைப் பற்றி அம்லாரூயா நினைவுகூர்கிறார்.

மக்களின் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது இந்த தொண்டுநிறுவனம்.

உயிர் வாழ்வதற்கான நீரை டேங்கர்கள் மூலம் பெற்று வந்த விவசாயிகள், இப்போது முப்போகம் விளைவிப்பதுடன், கால்நடைகளையும் பராமரிக்கின்றனர். குடிநீருக்காக அன்னையர் தொலைதூரம் செல்லவேண்டியிருந்ததால், வீட்டிலேயே இருந்து வீட்டுவேலைகளை பார்த்துக் கொண்டிருந்த சிறுமிகள் தற்போது பள்ளிக்கு செல்ல முடிகிறது என்று சொல்கிறார் அம்லா ரூயா.

ஆகார் தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து ஆண்டுதோறும் சராசரியாக 30 தடுப்பணைகளை கட்டி வருகிறது, ஆனால் இதை மூன்று மடங்காக அதிகரித்து ஆண்டுக்கு 90 தடுப்பணைகள் உருவாக்கவேண்டும் என்று விரும்புகிறார் அம்லா ரூயா.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நீர்ப் பற்றாக்குறையைப் போக்க தடுப்பணை கட்டும் மூதாட்டி

தடுப்பணைகள் பற்றிய தகவல்களை உலகம் முழுவதும் பரப்பவேண்டும் என்று அம்லா ரூயா விரும்புகிறார்.

ஆனால் இது அனைவருக்குமான தீர்வு அல்ல என்று சுட்டிக்காட்டுகிறார் உள்ளூரில் வசிக்கும், நீர் தொடர்பாக பணியாற்றிவரும் ஆர்வலர் பிரஃபுல் கதம்.

"இந்த தடுப்பணைகள் உள்ளூர் மக்களுக்கு மிகவும் பயனளிக்கின்றன. இதனால் விவசாயிகள் எதிர்காலத்தில் பருவகால பயிர்களை பயிரிட முடியும். ஆனால் தடுப்பணைகளுக்கு சில வரம்புகளும் இருக்கின்றன. பல்வேறு புவியியல் அமைப்பைக் கொண்டிருக்கும் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் பொருந்தாது." என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இந்தக் கூற்று அம்லாரூயாவின் பணிகளை நிறுத்தவில்லை.

"எனக்கு 90 வயது ஆகும்வரை எனது தடுப்பணைகளை கவனிப்பேன் என்று ஒருமுறை என் கணவரிடம் சொன்னேன். அதற்கு அவர், அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீ என்ன செய்வாய்? உனக்கு 120 வயதாகும் வரை இதே வேலையைத்தான் செய்யப் போகிறாய் என்று சொன்னார்" என்கிறார் அம்லா ரூயா.பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :