வாதம் விவாதம்: "பாரதி இன்று இருந்திருந்தால் ரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்"

வாதம் விவாதம்: "பாரதி இன்று இருந்திருந்தால் இரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்" படத்தின் காப்புரிமை SAUL LOEB/AFP/Getty Images

நேற்று, பாரதியாரின் 135ஆவது பிறந்தநாள். சாதியக்கொடுமைக்கு எதிராக, பெண் விடுதலைக்காக பாரதியார் எழுப்பிய முழக்கங்கள், இன்றைய இளைஞர்களிடம் உயிர்துடிப்புடன் உள்ளதா? பாரதியாரின் கோட்பாடுகள் மீது இன்றைய இளைஞர்களிடம் ஈர்ப்பு இல்லையா? என்று, பிபிசி தமிழ் நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

இதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்தளிக்கிறோம்.

"சமூக ஊடகங்களின் மூலம் "தொழில்நுட்ப சாதிச் சண்டைகள்" அதிகரித்திருப்பதைக் காணும் பொழுது பாரதியார் பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களை நாம் இன்னும் மனதளவில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது. பாரதி கண்ட பெண் விடுதலைக் குறைந்தபட்ச அளவென்னும் அடைந்திருந்தாலும் இன்னும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறைந்தபாடு இல்லை. முன்பை விட இக்காலத்தில்தான் பாரதியாரின் சாதி எதிர்ப்பு கவிதைகள் தேவைப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார் சக்தி சரவணன் டி என்ற நேயர்.

"முன் எப்போதும் இல்லாத அளவில் இன்று நிலைமை மிக மோசமாக உள்ளது. கெளரவ கொலைகள் தினமும் நடந்த வண்ணம் உள்ளன. நடுரோடில் வைத்து பெண்கள் மானபங்கம் செய்யப்படுகிறார்கள். முகத்தில் ஆசிட் வீசப்படுகிறது. பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பற்றதொரு சமூகமாக உள்ளது. சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை. பாரதி இன்று இருந்திருந்தால் ரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்."என்று பதிவிட்டுள்ளார் ரவீந்திரன் கிருஷ்ணமூர்த்தி என்ற நேயர்.

"இன்று அவருடைய கவிதைகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாடல்களை பாடுகிறார்களே தவிர அதன் வழி நடப்போர் இல்லையே..."என்கிறார், நரேஷ் கேஷந்த்.

"பாரதியின் நாட்டுப்பற்று கொண்ட பாடல்கள் மூலம் அவரை நினைவுகூர்கிறோம். புதுமைப்பெண்கள் தற்போது வெவ்வேறு துறைகளை கையாளுகிறார்கள். அவர்கள் உலகை நல்ல புத்திசாலித்தனத்துடன் கையாளுகிறார்கள்` என்று கருத்து தெரிவித்துள்ளார் ஆனந்தா சுப்பிரமணியன் என்ற நேயர்.

"சாதியின் நிமித்தம் கௌரவ கொலைகளும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் இளைஞர்களாலேயே கட்டவிழ்த்து விடப்படும் இன்றைய சூழலில் பாரதியை எங்கே நினைக்கிறார்கள்?"என்று கேள்வியெழுப்பியுள்ளார், சரோஜா பாலசுப்பிரமணியன் என்ற நேயர்.

படத்தின் காப்புரிமை MANPREET ROMANA/AFP/Getty Images

"இன்றைய இளைய தலைமுறை மத்தியில் பாரதியின் கோட்பாடுகள் மிகவும் போற்றப்படுகிறது. மதம் பிடித்த மனிதனின் ஜாதி வேற்றுமை நீங்கும் வரை பெண் சுதந்திரம் போற்றப்படும் வரை, அடிமை வர்கம் ஒழியும் வரை, வாழிய செம்மொழியாம் தமிழ் மொழி வாழும் வரை பாரதி எனும் உயிர்த்துடிப்பாய் இருந்து கொண்டே இருப்பார். " என்று, விக்கி கேஸ்ரோ என்ற நேயர் பதிவிட்டுள்ளார்.

"அவரது முழக்கங்கள் காலத்தால் அழியாதவை.இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் பாரதியின் வார்த்தைகளால் கவரப்பட்டுள்ளனர்.இருந்தாலும் நாம் அதை சீரிய முறையில் நிகழ்காலத்தில் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஒரு சமூகத்தின் கலங்கரை விளக்கமாக இருந்தால் நலம். தமிழால் இணைவோம், தாய் நாட்டை பாதுகாப்போம்."என்று, மணி எம்.என் என்ற நேயர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :