திருமணப் பரிசாக, `பிட்காயின்கள்` கேட்ட புதுமண ஜோடி

பிரசாந்த் மற்றும் நிதி

திருமண நிகழ்வுகள் பாரம்பரியமானதாக இருந்தாலும் அதற்கு அளிக்கப்படும் பரிசுகள் வேறுபடும்.

இந்த விதத்தில் பார்த்தால் இது ஒரு வித்தியாசமான திருமணம்.

பெங்களூரின் தெற்கு நகரில் புதிதாக திருமணமான தம்பதியினருக்கு, பெரும்பாலான விருந்தினர் பாரம்பரிய கல்யாணப் பரிசு பொருட்களுக்கு மாறாக கிரிப்டோ கரன்சியை வழங்கினர்.

28 வயது நிரம்பிய பிரசாந்த் சர்மா மற்றும் நித்தி ஸ்ரீ தம்பதியினரின் திருமணம் வார இறுதியில் நடைபெற்றது.

புறநகர் பகுதியில் ஒன்றின் பச்சைப் புல்வெளியில் நடைபெற்ற இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவரும் ஒரு பரிசோடு வந்திருந்தனர்.

இது மெய்நிகர் காட்சி போல் தோன்றினாலும், அதிலிருந்தும் வேறுபட்டதாக இருக்கிறது.

''வந்திருந்த 190 விருந்தினர்களில் 15 பேர் மட்டுமே பாரம்பரிய பரிசுகளை வழங்கினர். மற்றவர்கள் அனைவரும் கிரிப்டோ கரன்சியையே வழங்கினர்,'' என்று பிபிசியிடம் பிரசாந்த் கூறினார்.

''வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் எங்களுக்கு கிடைத்த பரிசின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கும்'' என்றார் பிரசாந்த்.

பிரசாந்த் மற்றும் நித்தி இருவருமே, மற்றொரு சக ஊழியர் உட்பட ஆஃபர்டு என்னும் ஒரு தொடக்க நிறுவனத்தின் இணை நிறுவனர்கள்.

இவர்கள் இருவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு பெங்களூரு போன்ற ஒரு நகரத்தில் கல்யாண பரிசைத் தேர்ந்தெடுக்கும் தொந்தரவை கொடுக்க விரும்பவில்லை.

பெங்களூரில் உள்ள எங்களது பெரும்பாலான நண்பர்கள் தொழிற்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள். எனவே எங்களது வருங்காலத்திற்குப் பயன்படும் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் எங்களது பரிசுப் பட்டியலில் கலந்திருக்கும் என்று நினைத்தோம். இதை எங்கள் பெற்றோரிடம் தெரிவித்தோம்; அவர்கள் இதை வரவேற்றனர்,''என்கிறார் பிரசாந்த்.

ஆனால், நெருங்கிய உறவினர்கள் வழக்கம்போல் பாரம்பரிய பரிசுகளை கொடுத்தனர். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர் பிரசாந்த், நித்தி ஸ்ரீ பீகாரின் பாட்னாவைச் சேர்ந்தவர்.

``இது நல்ல யோசனை. பல நாட்டு அரசாங்கங்கள் இப்போது இதற்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றாலும், எதிர்காலத்தில் இவை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று எனக்குத் தெரியும்.

ஆமாம், நான் அவர்களுக்கு பிட்காயின்களை பரிசாக கொடுக்கிறேன். பாரம்பரிய முறைப்படி பரிசு கொடுக்கிறோம், ஏதாவது ஒன்றை கொடுப்பதற்கு பதிலாக நவீன பரிசை கொடுக்கிறேன்" என்று ஒரு உறவினர் கூறினார்.

'எய்ம் ஹை' நிறுவனத்தின் நிறுவனரும், நித்தி ஸ்ரீயின் முன்னாள் முதலாளியுமான என்.ரவி ஷங்கர் விருந்தினர்கள் மெய்நிகர் பரிசளிப்பு பிரிவை சேர்ந்தவர்.

"இது பரிசு கொடுப்பதற்கு அலங்காரமான ஒன்று. ஆனால், பிரசாந்த் மற்றும் நித்தி ஸ்ரீ, பிட் காயினை பரிசாக பெறுவது பற்றி சில வாரங்களுக்கு முன்பல்ல, சில மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது '' என்கிறார் ஷங்கர்.

முதலீட்டாளர்களுக்கு ஆலோசனையை வழங்குவதற்காக திருமணத்திற்கு வந்திருக்கும் பிட்காயின் எக்ஸ்சேஞ்ச் ஜெப்பேவின் (Zebpay) பிரதிநிதிகள் முன்னிலையில் ஷங்கர் இதைத் தெரிவித்தார்.

கிரிப்டோ கரன்சிக்கு உலக அளவில் ஏற்பட்டிருக்கும் திடீர் ஏற்றம் பல ஊகங்களையும், சந்தேகங்களையும் ஏற்படுத்திருக்கிறது. பிட்காயினில் முதலீடு செய்து தான் வருவாய் ஈட்டப்போவதில்லை என்று கூறுகிறார் பிரசாந்த்.

``ஒரு பொருளை வாங்கி பிறகு விற்கும்போது நீங்கள் ஒரு வட்டத்தை உருவாக்குகிறீர்கள்?. இந்த புதிய தொழில்நுட்பம் எவ்வாறு முன்னே செல்கிறது என்பதை பார்ப்பதற்காகவே பிட்காயினை நாங்கள் வாங்கினோம்'' என்று அவர் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் பிளாக்செயின் தொழில்நுட்பம் பற்றி மிகவும் ஆர்வமாக இருந்தோம். கிரிப்டோ கரன்சிகள் இதன் அடிப்படையிலேயே கட்டமைக்கப்படுகிறது'' என்கிறார் பிரசாந்த்.

இருப்பினும், பிரசாந்த் மற்றும் நிதி ஆகியோர் தங்களது முக்கிய குறிக்கோளான சமுதாயத்தில் சமநிலை கிட்டாத குழந்தைகளின் கற்பிப்பதற்காக தாங்கள் பரிசாக பெறும் கிரிப்டோகரன்சிகளை விற்க முடிவு செய்தனர். "இந்தியாவின் பிரச்சினைகளை தீர்க்க கல்வி உதவும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம்'' என நிதி கூறினார்.

கிரிப்டோகரன்சியை பற்றி அரசாங்கம் என்ன நினைக்கிறது என்பதை பற்றி இந்த ஜோடி கவலைப்படவில்லை.

"எந்த புதிய தொழில்நுட்பம் வந்தாலும், குறிப்பாக பிட்காயின் தொடர்பாக இருந்தால் அதன் பரவலாக்கம் குறித்து பேசப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இவ்விடயத்தில் கட்டுப்பாட்டை இழந்து நிற்பதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு விரும்புகிறது" என்கிறார் பிரசாந்த்.

"பிளாக்செயின் தொழில்நுட்பம் என்பது இணையத்தைப் போன்று மிகவும் பெரியது. இது உலகத்தை கூட மாற்றலாம்'' என்று பிரசாந்த்தின் நண்பர் மற்றும் வாவ்லேப்ஸ்.காம் என்ற இணையதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அமித் சிங் கூறுகிறார்.

``பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சிக்கலான விடயமே அது மிகவும் பெரியது என்பது மட்டுமல்ல, அதை தடை செய்வதென்பது இயலாத காரியம் என்பதுமாகும். ஒரு முழு அரசாங்கத்தையே இந்த தொழில்நுட்பத்தில் இயக்க முடியும். பிட்காயின் மட்டுமே இதன் மூலம் சாத்தியம் என்று கூறமுடியாது. பிளாக்செயின் தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம்'' என்று பிரஷாந்த் கூறினார்.

படத்தின் காப்புரிமை AFP

இது ஏற்படுத்த கூடிய தாக்கம் மிகப்பெரியது என்றால், ஏன் அரசாங்கங்கள் பிட்காயின்களை ஏற்பதில்லை?

'பிட்காயின்களின் உரிமையாளர் தொடர்பான விடயங்கள் மற்றும் அதன் நிர்வாகத்தில் போதுமான வெளிப்படைத்தன்மை இல்லை என்று கட்டுப்பாட்டு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. பல அரசாங்கங்கள் இது போன்ற யோசனைகளை ஏற்றுகொள்வதற்கு தயாராகவே உள்ளன. அரசாங்கங்கள் விடாப்பிடியாகவோ அல்லது புதியதை ஏற்றுக்கொள்ளாத நிலையிலோ இல்லை. மாறாக அவர்கள் கவனமாக இருக்கவே விரும்புகிறார்கள்" என்று பொருளாதார நிபுணரான பிரஞ்சல் சர்மா கூறுகிறார்.

அரசாங்கங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது போலவே, முதலீட்டாளர்கள் சட்டபூர்வமான விவகாரங்களில் கவனமுடையவர்களாக இருக்க வேண்டும் என்ற மற்றொரு கருத்தும் உள்ளது.

"இதிலுள்ள முக்கியமான விடயமே முதலீடானது இந்திய நாணயத்தில் செய்யப்படுவதும், பிட்காயின்கள் சர்வதேச சந்தையில் விற்கப்படுவதுமே ஆகும். அரசாங்கம் விரும்பினால், இது அந்நிய செலாவணி கட்டுப்பாடு சட்டத்தை மீறுவதாக கூறலாம். தனிப்பட்ட முறையில், பிட்காயின்களே தற்காலம் மற்றும் எதிர்காலம் என்று நான் நினைக்கிறேன். எனவே, அரசாங்கம் விரைவாக பதிலளித்தால் நன்றாக இருக்கும்'' என்று வழக்கறிஞரான பவன் டக்கல் கூறினார்.

கிரிப்டோ கரன்சிகள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதில்லை என்று முதலீட்டாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தனது மூன்றாவது எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்ட சில நாட்களுக்கு பிறகுதான் பிரசாந்த் மற்றும் நிதியின் திருமணம் நடைபெற்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்