ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டுக்கு உடனடியாகத் தடை விதிக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கு தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது.

"அதில், பாரம்பரியம், கலாசாரம் தொடர்பான இந்த ஜல்லிக்கட்டு 2,500 ஆண்டுகளாக நடைபெற்ற வருகிறது. அதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு மிருக வதை தடுப்பு சட்டம் 1960 பொருந்தாது" என்று இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசின் இந்த சட்டம் 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அமைந்துள்ளது. மேலும், காளைகளை துன்புறுத்துவதை நியாயப்படுத்தும் வகையில் இந்த சட்டம் உள்ளது என்று பீட்டா அமைப்பு, விலங்குகள் நல வாரியம் மற்றும் பிற நிறுவனங்கள் இன்றைய உச்ச நீதிமன்ற விசாரணையின்போது தெருவித்தன.

எனவே, தமிழக அரசின் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் முக்குல் ரோத்கி, அரசியல் சாசனம் 29 (1) பிரிவின் கீழ் பாரம்பரியமிக்க, கலாசார கூறுகளை பாதுகாக்க வலியுறுத்துவதை சுட்டிக்காட்டினார்

"பாரம்பரிய கலாசாரத்தை பாதுகாப்பதற்காக தமிழக அரசு இந்த சட்டத்தை இயற்றியுள்ளது. எனவே அரசியல் சாசன ரீதியாக இந்த சட்டத்துக்குப் பாதுகாப்பு உள்ளது," என்று அவர் வாதிட்டார்.

ஒரு குறிப்பிட்ட மக்கள் தங்களுடைய பாரம்பரியத்தை, கலாசாரத்தை பாதுகாப்பதற்காகதான் அரசியல் சாசனத்தின்29 (1) பிரிவு உள்ளது என்று கூறிய அட்டர்னி ஜெனரல் கே. கே. வேணுகோபால், ஒட்டுமொத்த தமிழ் நாட்டிற்கும் இது பொருந்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று என்று கூறினார்.

இந்நிலையில், இது தொடர்பாக அரசியல் சாசன விளக்கம் பெறுவதற்கான கட்டாயம் இருப்பதால், 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இதனை விசாரிக்கும் என்றும், இடைகாலத் தடை எதுவும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட மாட்டாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனவே, அடுத்த ஆண்டு பொங்கலின்போது நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டுக்கு எந்த தடையும் இருக்காது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :