கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக காவல் ஆய்வாளர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை

கொள்ளையர்கள் குறித்து போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு
Image caption கொள்ளையர்கள் குறித்து போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு

நகைக்கடை கொள்ளைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களைப் பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் ஒருவர் அங்கு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் மேலும் ஒரு ஆய்வாளர் காயமடைந்துள்ளார்.

கடந்த நவம்பர் 17ஆம் தேதியன்று சென்னை கொளத்தூரில் உள்ள மகாலட்சுமி ஜுவல்லரி என்ற நகைக்கடையில் கொள்ளை நடைபெற்றது. இந்தக் கடையில் இருந்து இரண்டரைக் கிலோ தங்கம், மூன்றரைக் கிலோ வெள்ளி, இரண்டு லட்ச ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

நகைக்கடையின் மாடியை வாடகைக்கு எடுத்து அதிலிருந்து துளையிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்திருந்தது. அந்தக் கடையை வாடகைக்கு எடுத்திருந்த தினேஷ் சௌத்ரி, நாதுராம் ஆகியோர் திட்டமிட்டு இந்தக் கொள்ளையை நடத்தியதாக சந்தேகமடைந்த காவல்துறை, அவர்களைத் தேடிவந்தது.

நகைகளைக் கொள்ளையடித்த பிறகு அவர்கள் தங்களது சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்குச் சென்றுவிட்டதாக காவல்துறை கண்டுபிடித்தது.

இதையடுத்து அவர்களைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படைகளில் மதுரவாயில் காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனி சேகர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்ற காவல்துறையினர் தேடப்படும் குற்றவாளிகளின் உறவினர்களான சென்னா ராம், கேலா ராம், சங்கர் லால், தவ் ராம் ஆகியோரைக் கைதுசெய்தனர்.

இதற்குப் பிறகு நாதுராமையும் தினேஷ் சௌத்ரியையும் பிடிப்பதற்காக பாலி மாவட்டத்தில் உள்ள ராம்புரா கிராமத்திற்குச் சென்றபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்தத் தாக்குதலில் கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முனி சேகர் காயமடைந்தார்.

Image caption காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டி

அப்போது அவர்களைச் சுட முயன்ற பெரிய பாண்டி துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் அதில் அவர் அங்கேயே உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த முனி சேகர் அங்குள்ள இமாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிகாலை மூன்று மணியளவில் நடைபெற்றுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் சென்னை மேற்கு மாவட்ட காவல்துறை ஆய்வாளர் சந்தோஷ் தலைமையிலான காவல்துறையினர் ராஜஸ்தான் புறப்பட்டுச்சென்றனர்.

கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியில் இல்லத்திற்குச் சென்ற சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பெரிய பாண்டியின் உடலை சென்னை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்