ராஜஸ்தான் முஸ்லிம் கொலை: பொய்ச் செய்திகளால் பரவிய வெறுப்பு காரணமா?

ராஜஸ்தான் முஸ்லிம் கொலை: பொய்ச் செய்திகளால் பரவிய வெறுப்பு காரணமா?

மேற்குவங்கத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்து வந்த முஸ்லிம் ஒருவர் அண்மையில் குத்திக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கைது செய்யப்பட்ட நபர்தான் இந்த வழக்கில் குற்றவாளியா என்பதை குற்றம்சாட்டப்பட்டவரின் அண்டை வீட்டார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதே நேரம் அவரை அறிந்த வேறு சிலரோ அவரை நாயகனாகக் கொண்டாடுகின்றனர்.

இச்சம்பவம் நடந்த ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜஸ்மாண்ட் பகுதியில் சம்பவ இடத்துக்குச் சென்ற பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். லவ் ஜிகாத் நடப்பதாக வாட்சப் மூலம் பரவும் பொய்ச் செய்திகள் அங்கே வெறுப்பு பரவுவதற்கு காரணமாக இருப்பதையும் அவர் கண்டறிந்தார்.

அஃப்ரஜுல் என்கிற அந்த நபர் குத்திக் கொல்லப்படுவதையும், பிறகு கொலையாளியே உடலை எரிப்பதையும், இது முஸ்லிம்களுக்குப் பாடம் என்று கூறுவதையும் காட்டும் விடியோ தகவல் பகிர்வு தளமான வாட்சப் மூலம் வைரலாகப் பரவியது. சில தொலைக்காட்சிகளும் அந்தக் காட்சிகளை ஒளிபரப்பின. கொடூரமான காட்சிகள் அடங்கிய விடியோ அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்தக் கொலையை செய்ததாக குற்றம்சாட்டப்படும் சாம்பு லால் என்பவர், வேறொருவரை வைத்து அந்தக் காட்சியைப் படமாக்கியதாகவும், பிறகு அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்து தலித் சமூகம் ஒன்றைச் சேர்ந்தவரும், மார்பிள் வியாபாரியுமான சாம்பு லால்தான் அந்த விடியோவில் தெரியும் கொலையாளி என்று போலீஸ் கூறியது.

தாமே கொலை செய்ததாக ஒரு குறிப்பு எழுதி ஒப்புதல் அளித்த சாம்பு லால் பிறகு அதை ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டார். அத்துடன் அவர் வெளியிட்டுள்ள தகவலும் அவர் பகிர்ந்த பிற விடியோக்களும் மத உணர்வால் தூண்டப்பட்டே அவர் இச்செயலைச் செய்தார் என்று காட்டுகின்றன.

"லவ் ஜிகாத் செய்தால் இதுதான் நடக்கும்" என்று அவர் தாம் பகிர்ந்த பகிர்ந்த வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். லாலின் செல்பேசியில் மேலும் எட்டு விடியோக்கள் இருந்ததாகவும் அவற்றிலும் அவர் லவ் ஜிகாத் குறித்துப் பேசியிருப்பதாகவும் போலீசார் குறிப்பிட்டனர்.

ஆனால், சாம்பு லாலின் நண்பர்களாலும் குடும்பத்தினராலும் அந்த வீடியோவில் இருக்கும் நபர் தாங்கள் அறிந்த சாம்பு லால்தானா என்று கூற முடியவில்லை. பிபிசி செய்தியாளரிடம் பேசிய பெயர் வெளியிடவிரும்பாத, சாம்புலாலின் அண்டை வீட்டுக்காரர் ஒருவர், "எங்கள் சாம்பு இதைச் செய்யவில்லை. வீடியோவில் இருப்பவர் சாம்பு அல்ல, இப்படி வன்முறையில் ஈடுபடுகிறவர் அல்ல அவர்" என்று கூறினார். பிறந்தது முதல் சாம்புவைத் தெரியும் என்று அந்தப் பெண் கூறினார்.

சாம்புவை அறிந்த பலரும் அவர் மென்மையாகப் பேசுகிறவர், மற்றவர்களைப் பற்றி கவலைப்படுகிறவர் என்று தெரிவித்தனர்.

அதே நேரம், வேறு சிலரோ, சம்பவம் நடப்பதற்கு முன்பு சில வாரங்களாக அவரைப் பற்றித் தாங்கள் கவலைப்பட்டுவந்ததாகக் கூறுகின்றனர்.

சாம்புவின் வியாபாரம் சரிவர நடக்கவில்லை. தம்முடைய செல்பேசியில் எப்போதும் வாட்சப்பிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் விடியோக்களை அவர் பார்த்துவந்தார். அந்த விடியோக்களே அவரை இப்படி செய்யத் தூண்டியிருக்கவேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

புரளியையும், பீதியையும் பரப்பும் வீடியோக்கள் இந்தியாவில் வாட்சப் மூலமே பரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் கிழக்கிந்தியாவில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் குழந்தையை கடத்துகிறவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஏழுபேர் அடித்துக் கொல்லப்படுவதற்கு வாட்சப்பில் பரவிய தகவல்கள் காரணமாக அமைந்தன.

சாம்பு லாலை அறிந்த சில தலித் ஆண்களிடம் பிபிசி செய்தியாளர் பேசியபோது லவ் ஜிகாத் நடப்பதாக பொய்யான செய்திகள் இந்து இளைஞர்கள் மத்தியில் பரப்பப்படுவது அவருக்குப் புரிந்தது.

அந்த தலித் ஆண்களில் ஒருவர் தம்முடைய செல்பேசியை பிபிசி செய்தியாளரிடம் காட்டினார். அவரது வாட்சப்பில், இந்து பெண் ஒருவரை முஸ்லிம் ஒருவர் கடத்திச் சென்று வன்புணர்வு செய்ததாக ஒரு செய்தி இருந்தது. அதை அவர்கள் நம்பினர். ஆனால், இப்படி ஒரு செய்தி நடந்ததாக எந்த ஒரு முன்னணி செய்தி நிறுவனங்களோ, செய்தித்தாள்களோ உறுதி செய்யவில்லை.

சாம்புலால் செய்தது சரிதான் என்றும், லவ் ஜிகாத்தை நிறுத்த அது தேவை என்றும் அவர்கள் வாதிட்டனர். அதுபோன்ற செய்திகளை பார்க்கும்போது தங்களுக்குக் கோபம் வருவதாகவும், முஸ்லிம்கள் தங்கள் பெண்களை கடத்திச் சென்று வன்புணர்வு செய்து மதம் மாற்றுவதை எப்படி ஏற்க முடியும் என்றும் அவர்கள் கேட்டனர். இந்த இளைஞர்கள் ஒரு வாட்சப் குழுவைத் தொடங்கி அதில் சாம்புவின் புகைப்படங்களையும், இந்து வலது சாரி முழக்கங்களையும் பகிர்கின்றனர். அந்த இளைஞர்கள் சாம்புவை நாயகனாகக் கொண்டாடுகின்றனர்.

ஆனால், வயது முதிர்ந்தவர்கள் இந்த செயல்பாடுகள் தங்கள் சமூகத்தைப் பாதிக்கும் என்று கவலையோடு தெரிவிக்கின்றனர்.

அங்கிருந்து சில மைல் தொலைவில் அமைந்துள்ளது கொலை செய்யப்பட்ட அஃப்ரஜுல்லின் வாடகை வீடு. மேற்குவங்கத்தில் இருந்து வந்து கூலி வேலை செய்து வந்தவர் அவர். இந்தக் கொலைக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் இருந்து வந்திருந்த முஸ்லிம் தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்கள். அவர்கள் எவருக்கம் லவ் ஜிகாத் என்ற சொல் கூட தெரியாது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :