மாலத்தீவு கடல் பகுதியில் 150 தமிழக மீனவர்கள் தவிப்பா?

  • 14 டிசம்பர் 2017
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

ஒக்கி புயலின்போது, கடலில் மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாமல் காணாமல் போன மீனவர்கள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரம் தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது. இந்நிலையில், மாலத்தீவு கடல் பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த 150 மீனவர்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவலை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், 15 படகுகளில் சென்ற 150 தமிழக மீனவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தாயகத்துக்கு அழைத்து வருமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இந்திய வெளியுறவுத் துறைக்கு கடந்த 9-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார். அதில் நடுக்கடலில் காணாமல் போன தமிழக மீனவர்கள், மாலத்தீவு கடல் பகுதி அல்லது அதன் கடலோர பகுதிகளிலோ இருக்கலாம் என மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார்.

ஒக்கி புயலின்போது காணாமல் போன தமிழகத்தின் கன்னியாகுமரி மீனவர்கள், மாலத்தீவு அருகே உள்ள வாழ்விடமற்ற சிறிய தீவுகளில் கரை ஒதுங்கியிருக்கலாம். 15 படகுகளில் சுமார் 150 மீனவர்கள் இவ்வாறு வெவ்வேறு இடங்களில் இருக்கலாம் என்று கூறப்படுவதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில், இந்திய விமானப்படை உதவியுடன் வான் வழியாக தேடுவதற்கு தயார் நிலையில் விமானங்களை வைத்திருக்குமாறு ஏற்கெனவே தமிழக அரசு கேட்டுக் கொண்டதாகவும், ஆனால், மாலத்தீவு அரசிடமிருந்து உரிய அனுமதியைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் தேடுதல் பணி தொடங்கவில்லை என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரபிக் கடல் வழியாக கடந்த ஒக்கி புயலின்போது, கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் பலர் இன்னும் கரை திரும்பாத நிலையில் ஒருவேளை அவர்கள் நடுக்கடலில் சிறிய தீவுகளில் ஒதுங்கியிருந்தால் அவர்களுக்கு போதுமான உணவோ குடிநீர் வசதியோ இருக்க வாய்ப்பில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் மாலத்தீவு அரசுடன் பேசி தேவையான அனுமதியை இந்திய விமானப்படை,கடற்படை ஆகியவற்றுக்கு பெற்றுத் தந்து அந்நாட்டு கடல் பகுதியிலும் அதன் சுற்றுவட்டாரத் தீவுகளிலும் மீனவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு இந்திய வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறையை தமிழக தலைமைச் செயலாளர் தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெளியுறவுத் துறை பதில்

இந்த கடிதம் தொடர்பான தகவலை இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

இது குறித்து அவர் பிபிசி செய்தியாளரிடம் கூறுகையில், தமிழக அரசின் வேண்டுகோளைத் தொடர்ந்து, மாலத்தீவு கடல் பகுதியில் இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் தேடுதல் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மீனவர்களின் இருப்பிடத்தை இதுவரை அறிய முடியவில்லை என்றார்.

Image caption ஒக்கிப் புயலினால் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் லட்சத்தீவில் கரை ஒதுங்கிய படகு.

மேலும் அவர், மாலேவில் உள்ள இந்திய தூதகரத்துக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு இந்திய கடற்படையின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்காக ஒருங்கிணைந்து செயல்படும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பு அதிகாரிகள் யார்?

மீனவர்களின் தேடுதல் பணி குறித்து இந்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக, தமிழக வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. சத்யகோபால், தமிழக பொது மற்றும் மறுவாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் பி. செந்தில் குமார், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரட்னூ, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ஆர். சவான் ஆகியோரை நியமித்துள்ளதாக வெளியுறவுத் துறையிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்