வாக்களித்த பின் பேரணி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினாரா மோதி?

நரேந்திர மோதி படத்தின் காப்புரிமை Twitter @BJP4India
Image caption தேர்தலில் வாக்களித்த பிறகு பிரதமர் நரேந்திர மோதி

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் அகமதாபாதில் வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த பிரதமர் நரேந்திர மோதி அங்கிருந்து பேரணியாக சென்று தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக சர்ச்சையை கிளம்பியிருக்கிறது.

பிரதமரின் நடவடிக்கை விசாரணைக்கு உட்பட்டது என்று குஜராத் மாநில தலைமை தேர்தல் அலுவலர் பி.பி ஸ்வேன் கூறியுள்ளார்.

பிபிசியிடம் பேசிய ஸ்வேன், "வாக்குச்சாவடியில் வாக்களித்தபின் பிரதமர் நரேந்திர மோடி வெளியே வந்தபோது, அங்கு நடத்தை விதிமுறைக் குழு இருந்தது. அங்கு நடைபெறும் அனைத்தையும் அந்தக்குழு வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்தது."

"நாங்கள் அகமதாபாத் மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் இருந்து அறிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம், அந்த அறிக்கையை பெறுவதற்கு முன்னரே 'தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல்' என்று சொல்வது பொருத்தமான செயலாக இருக்காது" என்று அவர் கூறுகிறார்.

இந்த செயல் தேர்தல் நடத்தை விதி மீறல் என்று கூறும் காங்கிரஸ், பிரதமர் மற்றும் பிரதமரின் அலுவலகத்தின் அழுத்தத்தின்கீழ் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

ராகுல்காந்தியின் நேர்க்காணல் குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் காங்கிரஸ் கட்சியினரிடையே சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அது மட்டுமல்ல, வாக்குப்பதிவுக்கு ஒருநாள் முன்பு தொலைகாட்சி பேட்டி ஒன்றில் ராகுல்காந்தி பேசியதற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

காங்கிரஸின் குஜராத் மாநில பொறுப்பாளர் அசோக் கெலாட், "பிரதமர் மற்றும் பிரதமரின் அலுவலகத்தின் அழுத்தத்தின் கீழ் தேர்தல் ஆணையம் செயல்படுவது நிதர்சனமாக தெரிகிறது" என்று கூறுகிறார்.

கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவலாவின் கருத்துப்படி, "நாங்கள் அளித்த புகார் பற்றி இன்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டபோது, ஐந்து மணிக்கு பிறகு பதிலளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மோதியின் செயலாளர் போல செயல்படும் தலைமை தேர்தல் அலுவலர் இன்றும் அதேபோல் செயல்படுகிறார். இது தேர்தல் ஆணையத்திற்கே அவமானகரமான செயல்."

படத்தின் காப்புரிமை Twitter @INCIndia
Image caption வியாழனன்று ராகுல் காந்தி கேரளாவுக்கு சென்றார்

பிரதமர் நரேந்திர மோதியின் கைப்பாவையாக உள்ளது தேர்தல் ஆணையம் என்றும் காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. குஜராத் மாநில தலைமை தேர்தல் அலுவலர் பி.பி ஸ்வேனிடம் பிபிசி இந்த குற்றச்சாட்டு பற்றி கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

"இது அரசியல்ரீதியான பேச்சு. தேர்தல் ஆணைய அதிகாரியான நான் இதுபோன்ற கருத்துகளுக்கு எப்படி பதில் சொல்வது? நிதர்சனமான உண்மைகளின் மீதே நான் கருத்து சொல்லமுடியும்" என்று கூறி அவர் காங்கிரஸின் கருத்துகளை புறந்தள்ளிவிட்டார்.

"பிரதமரின் சாலை பேரணி தேர்தல் ஆணையத்தின் கண்ணுக்கு தெரியவில்லையா? இப்போதும் நேரமிருக்கிறது. குறைந்தபட்சம் இப்போதாவது தேர்தல் ஆணையம் விழித்தெழட்டும்," என்கிறார் ரண்தீப் சுர்ஜேவலா.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குஜராத் தேர்தலில் முடிவுகள் டிசம்பர் 18ஆம் தேதியன்று வெளியாகும்

பாரதிய ஜனதா கட்சியின் புகாரில் பேரில், 30 நிமிடங்களுக்குள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக முதல் தகவல் அறிக்கை அனுப்புமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்திய அரசியலமைப்பின் மதிப்பை குறைத்துவிட்டது இந்திய தேர்தல் ஆணையம். அது எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேண்டுமா? பாஜக மற்றும் நரேந்திர மோடியின் கைப்பாவையாகிவிட்டது தேர்தல் ஆணையம்" என்று கடுகடுக்கிறார் சுர்ஜேவாலா.

பிரதமர் மோதி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஏதாவது புகார் வந்திருக்கிறா என்று குஜராத் மாநில தேர்தல் ஆணையர் ஸ்வேனிடம் கேட்டோம். எந்தவிதமான புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்வேன் உறுதிகூறினார்.

"அனைத்துவிதமான புகார்களின் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது. அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்" என்கிறார் ஸ்வேன்.

படத்தின் காப்புரிமை ECI.NIC.IN

புதன்கிழமையன்று காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியின் நேர்காணலை ஒளிபரப்புவதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்தது.

அடுத்த நாள் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் ராகுல்காந்தியின் பேட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கருதப்படுவதாக புதன்கிழமை மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டது.

ராகுல்காந்தியின் பேட்டியை ஒளிபரப்பும் தொலைகாட்சி நிறுவனங்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று காரணம் கோரி ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் நோட்டிஸில், டிசம்பர் 18ஆம் தேதி மாலை ஐந்து மணிக்குள் அவர் பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்திற்குள் ராகுல்காந்தி பதிலளிக்காவிட்டால், மேல் நடவடிக்கைப்பற்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :