கொலை வழக்கில் தேடப்படும் மத்தியபிரதேச 'மகிழ்ச்சித் துறை' அமைச்சர்

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் 'மகிழ்ச்சித் துறை' அமைச்சர், கொலை வழக்கில் தேடப்பட்டுவருவதாக புதன்கிழமை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை LAL SINGH ARYA
Image caption இந்தியாவிலேயே முதலாவது மகிழ்ச்சிக்கான துறை அமைச்சராக இருக்கும் லால் சிங் அர்யா 2009ம் ஆண்டு கொலை தொடர்பாக சந்தேக நபராக உள்ளார்.

நீதிமன்றம் அவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தவுடன் கடந்த செவ்வாய்கிழமை முதல், 53 வயதான அமைச்சர் லால் சிங் ஆர்யாவை காணவில்லை.

2009ம் ஆண்டு எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவரின் கொலை தொடர்பில் சந்தேக நபராக அமைச்சர் ஆர்யா உள்ளார். இந்த குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.

குடிமக்களின் நல வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் மகிழ்ச்சிக்கான துறை ஒன்றை உருவாக்கிய முதலாவதும், ஒரேயொரு மாநிலமுமாக மத்திய பிரதேசம் உள்ளது.

பாஜக தலைமையிலான மாநில அரசு 2016 ஆம் ஆண்டு இந்த துறையை உருவாக்கியது. "குடிமக்கள் தங்களுடைய அகசக்தியையும் நற்பண்பையும் உணர்ந்து கொள்ளும் சூழலை உருவாக்குவதன் மூலம், மக்களிடம் மகிழ்ச்சி மற்றும் சகிப்புதன்மை நிலவுவதை உறுதி செய்யும்" நோக்கத்தோடு இத்துறை உருவாக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை PRAKASH HATVALNE
Image caption “மகிழ்ச்சி திட்டங்களில்” பங்கெடுத்த மக்களுக்கு இந்த துறை சான்றிதழ்களை வழங்கியுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக இருக்கும் மத்திய பிரதேசத்தில் 7 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

மக்களுக்கு மகிழ்ச்சியை மேம்படுத்துகிற கருவிகளையும் ஆயிரக்கணக்கான மகிழ்ச்சிக்கான தொண்டர்களையும் உருவாக்கி அதன் மூலம் பிரசார நிகழ்ச்சிகளை நடத்துகிற மகிழ்ச்சிக்கான மாநில நிறுவனம் ஒன்றும் இத்துறையின் கீழ் உருவாக்கப்பட்டது.

தொடங்கப்பட்டதில் இருந்து இந்த துறை அமைச்சராக இருந்துள்ள ஆர்யா, மேலதிகமாக விமானத்துறை, பொது நிர்வாகத்துறை, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் துறை உள்பட 5 பிற துறைகளைளுக்கும் அமைச்சராக உள்ளார்.

அவர் டிசம்பர் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியுள்ளது.

"காவல்துறை குழுக்கள் அவரை தேடி வருகின்றன. நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டிய நாளுக்கு முன்னர் அவரைத் தேடி கண்டுபிடித்து விடுவோம் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்" என்று உள்ளூர் காவல்துறை ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்