பெரும் சர்ச்சைக்குள்ளான ஆளுநரின் கடலூர் விஜயம்

பெரும் சர்ச்சைக்குள்ளான ஆளுனரின் கடலூர் விஜயம்
Image caption கோப்புப் படம்

காவலுக்குச் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது, பெண் ஒருவர் உள்ளிருக்கும்போது குளியலறையில் ஆளுநர் நுழைந்ததாகக் கூறப்படும் புகார், எதிர்க்கட்சிகளின் கறுப்புக்கொடி போராட்டம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடலூரில் வெள்ளிக்கிழமையன்று மேற்கொண்ட பயணம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெள்ளிக்கிழமை கடலூரில் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்.

ஆனால், ஆய்வுப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவதன் மூலமாக மாநில நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாகவும் ஜனநாயக விரோதமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டிய தி.மு.க. கடலூரில் ஆளுநர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டால் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக்கொடி காட்டப்போவதாக அறிவித்தது.

அதன்படி கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடியுடன் வெள்ளிக்கிழமை காலை முதலே கூடி கோஷங்களை எழுப்பிவந்தனர். இந்த நிலையில், சென்னையிலிருந்து கார் மூலமாக கடலூர் வந்த ஆளுனர் வேறு வழியாக சென்று ஸ்வச் பாரத் பணிகளை ஆய்வுசெய்த ஆளுநர் திரும்பி வரும்போது, தி.மு.கவினர் திரண்டிருந்த பகுதியின் வழியாக வந்தார்.

அப்போது, அவருக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கறுப்புக்கொடிகளுடன் கோஷங்களை எழுப்பினர். இருந்தபோதும் எந்த அசம்பாவிதமும் இன்றி ஆளுநரின் வாகனம் அந்தப் பகுதியைக் கடந்து சென்றது.

இதற்கிடையில், கடலூரில் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறையைப் பார்வையிடச் சென்றபோது ஆட்கள் உள்ள கழிப்பறைக்குள் நுழைந்துவிட்டதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பான செய்திகள் சில தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒளிபரப்பாயின. இது சமூக வலைதளங்களிலும் பெரும் கேலிக்கும் சர்ச்சைக்கும் உள்ளானது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகளுக்கு ஆளுநர் மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"கடலூரில் ஆளுநர் ஆய்வு செய்த கழிப்பறை திருமதி கௌரி என்பவரது இல்லத்தில் இருந்தது. அந்த வீட்டிற்கு ஒரு மாவட்ட பெண் வருவாய்த் துறை அதிகாரியுடன்தான் ஆளுநர் சென்றார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் செய்திருந்தார். அந்தக் கழிப்பறை காலியாக இருக்கிறது என்பதை உறுதிசெய்துகொண்ட பின் முதலில் வருவாய்த் துறை அதிகாரியும் பிறகு மாவட்ட ஆட்சியரும் பிறகு ஆளுநரும் அதனைப் பார்வையிட்டனர்" என ஆளுநர் மாளிகை இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ளது.

சில தொலைக்காட்சிகள் வேண்டுமென்றே தவறான செய்திகளை, அவதூறு பரப்பும் நோக்கத்துடன் ஒளிபரப்புவதாகவும் ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கிடையில் ஆளுநரின் வாகன வரிசையில் பாதுகாப்பிற்காகச் சென்ற வாகனம் திரும்பி வரும்போது நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடலூரில் இருந்து சென்னை திரும்பிவரும்போது காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப் பகுதிக்குள் பாதுகாப்பு அளிக்க, அம்மாவட்டத்தைச் சேர்ந்த காவல் வாகனங்கள் ஆளுநரின் வாகன வரிசையுடன் சேர்ந்துகொண்டன.

ஆளுநர் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையை விட்டுச் சென்ற பிறகு, அந்த வாகனங்களில் ஒன்று திரும்பி வந்துகொண்டிருந்தபோது கல்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து டிவிஎஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் 10 வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து சென்ற அந்த வாகனம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கௌசல்யா என்ற மூதாட்டி மீது மோதியது. அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த விபத்துகளுக்கும் ஆளுநரின் வாகன வரிசைக்கும் எந்த தொடர்பும் இல்லையென ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்