ஓராண்டிற்குப் பிறகு தி.மு.க. தலைமையகத்திற்கு வந்த கருணாநிதி

ஓராண்டிற்குப் பிறகு தி.மு.க. தலைமையகத்திற்கு வந்த கருணாநிதி

உடல்நலக் குறைவால் பொது இடங்களுக்கு வருவதை தவிர்த்துள்ள தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெள்ளிக்கிழமையன்று இரவு வருகை தந்தார்.

வெள்ளிக்கிழமையன்று இரவு தனது கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, 8.55 மணியளவில் அறிவாலயத்திற்கு வந்தார். அவருடன் தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

அறிவாலயத்தில் அவரிடம் அளிக்கப்பட்ட காகிதத்தில் தனது கையெழுத்தை இட்டார் கருணாநிதி. சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு கருணாநிதி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி முதலே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார்.

அதன் பிறகு கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று ஊட்டச்சத்துக் குறைபாட்டின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதி, 7ஆம் தேதியன்று வீடு திரும்பினார்.

ஆனால் மூச்சுத் திணறல் பிரச்சனைக்காக மீண்டும் டிசம்பர் 15ஆம் தேதியன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதிக்கு ட்ராக்யோஸ்டமி குழாய் பொருத்தப்பட்டது.

இதற்குப் பிறகு அவ்வப்போது தலைவர்கள், அவரை வந்து சந்திக்கும் படங்கள் வெளியிடப்பட்டுவந்த நிலையில், கடந்த அக்டோபர் 19ஆம் தேதியன்று முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

பிறகு, கோபாலபுரத்தில் நடந்த திருமணம் ஒன்றிலும் கருணாநிதி பங்கேற்றார்.

இதற்குப் பிறகு ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அவரைச் சென்று சந்தித்துவந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று இரவில் தி.மு.க. தலைமையகத்திற்கு கருணாநிதி வருகை தந்தது கட்சித் தொண்டர்களுக்குப் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் இது தொடர்பாக உற்சாகமான கருத்துகளை அவர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தனது பிறந்தநாள் வாழ்த்துரைகளை கேட்கும் மு.கருணாநிதி (காணொளி)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்