ஐ.டி. யுகத்திலும் ஓதுவார் பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபடும் இளைஞர்கள்

  • 17 டிசம்பர் 2017
ஓதுவார்

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து கைநிறைய ஊதியம் பெறும் இளைஞர் கூட்டத்திற்கு மத்தியில், சில இளைஞர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட பன்னிரு திருமுறைப் பாடல்களை ஆர்வத்துடன் கற்று ஓதுவாராக பணிபுரிய பயிற்சிப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

தமிழக அரசின் சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஓதுவார் பயிற்சி பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக தங்களின் சுயவிருப்பத்தின் பேரில் இதுவரை 20 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், மூன்று ஆண்டு காலம் கற்பிக்கப்படும் பட்டப் படிப்பில் தேர்ந்த மாணவர்களுக்கு திருமுறை இசைமணி என்ற பட்டம் வழங்கப்படும் என்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியின் ஆசிரியர் வி.ரத்தினம் தெரிவித்தார்.

''ஒவ்வொரு பாடலுக்கும் பொருள் புரிந்து, இசையோடு பாடவும், ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்ற பாடல்களை தேர்ந்தெடுத்துப் பாடவும் இந்த மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். தேவாரப் பாடல்களில் நால்வர் வகுத்த அதே இசைவடிவை இந்த 21- ஆம் நூற்றாண்டிலும் பாடவேண்டும் என்பதை உறுதிசெய்கிறோம்'' என்று ஆசிரியர் ரத்தினம் கூறுகிறார்.

நவீன யுகத்தில் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி என்றும், ஓதுவாராக பணிபுரிய கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டோம்.

சிறுவயதில் இருந்தே கோயில்களில் பாடுவதில் அதிக ஈடுபாடு இருந்ததால், 12-ஆம் வகுப்பு முடித்ததும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேருவதை தவிர பிற படிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள நாட்டம் காட்டவில்லை என்கிறார் விருதுநகரைச் சேர்ந்த கார்த்தி.

''பள்ளிப்பருவத்தில் நால்வர் பாடிய பாடல்களில் சிலவற்றை கோயில்களில் பாடியுள்ளேன். பள்ளிப்படிப்பு முடிந்ததும், பட்டப்படிப்பு பெற்று, பின்னர் வேலைக்குச் செல்லுவதாக என் நண்பர்கள் கூறினார்கள். எனக்கு பக்தி பாடல்கள் பாடுவதில் ஆர்வம் என்பதால், ஓதுவார் வேலைதான் எனக்கு சிறந்தது என்று இந்தப் படிப்பை தேர்வுசெய்தேன்,'' என்றார் மாணவர் கார்த்திக்.

அவர் மேலும், ''பிற வேலைகளில் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், இந்த வேலையில் எனக்கு அளப்பரிய மனநிம்மதி கிடைக்கும் என்று உணர்ந்து ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன். தற்போது மூன்றாம் ஆண்டு பயிற்சியை நிறைவு செய்யவுள்ளேன்'' என்றும் கூறினார் கார்த்தி.

ஓதுவார் பயிற்சியின்போது, ஆசிரியரின் உதவியுடன் குறைந்தபட்சம் 1,400 பாடல்களை மனப்பாடம் செய்யும் மாணவர்கள், விடுமுறை நாட்களில் ஸ்மார்ட்போன்களில் உள்ள 'ஆப்' மூலமாகவும் பாடல்களை கேட்பதாக கூறுகின்றனர். தங்களுக்கென ஒரு வாட்ஸ்ஆப் குழுவை ஏற்படுத்தி கருத்துகளை பரிமாறிக்கொள்வதாகவும் கூறுகின்றனர்.

மற்றொரு மாணவரான அபிமன் யுவராஜ் ஓதுவாராக பயிற்சி பெறுவதில் தனக்கு மிகுந்த பெருமை என்கிறார்.

''பிறப்பால் அந்தணராக இருந்தால் மட்டுமே கோயில் கருவறையில் பூசை செய்ய முடியும் என்ற நிலை தொடர்ந்தாலும், சாதியைக் கடந்து இறைப்பணி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஓதுவார் பயிற்சி பள்ளி வழங்கியுள்ளது'' என்று அபிமான் யுவராஜ் மேலும் குறிப்பிட்டார்.

'இயந்திரவியல் கல்வி கற்றவருக்கு விருப்பமானது ஓதுவார் பணி'

''சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லப்படுவதால், பலருக்கும் அது புரியாமல் இருக்கும். ஓதுவாமூர்த்திகளான நாங்கள் தமிழில் பாடல்களை, இசையோடு பாடுவதால், மக்களுக்கு எளிமையாக புரிந்து, பாடல்களின் பொருளை உணர்ந்து அவர்கள் கேட்கிறார்கள் என்பதை பலமுறை நாங்கள் கோயில்களில் பார்த்துள்ளோம். இது எங்களை மேலும் சிறப்பாக பாட ஊக்குவிக்கிறது'' என்றார் அவர்.

இயந்திரவியல் துறையில் படித்த ஆர்.பால்பாண்டி ஓதுவாராக வேலை செய்வதில் தனக்குள்ள விருப்பத்தை தெரிவித்தபோது நண்பர்கள் கேலி செய்ததாகவும் தற்போது மன உளைச்சல் இல்லாமல் தனக்கு விருப்பமான வேலையில் இருப்பதாகவும் கூறுகிறார்.

''என்னுடன் பொறியியல் படித்தவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைசெய்கிறார்கள். அவர்களுக்கு இலக்கு கொடுக்கப்படும். தினமும் பரபரப்பான சூழலில் இருக்கவேண்டும். நான் பயிற்சி முடிக்கும் இந்த நேரத்தில் ஓதுவாராக அரசு வேலைக்கு தேர்வாகியுள்ளேன். பாடல்கள் பாடுவதும், இறைவனை துதிப்பதுமே எனக்கு வேலை என்பது மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கும், வேலை செய்வதுபோல இருக்காது,'' என்றார் மாணவர் பால்பாண்டி.

மதுரை மீனாட்சி கோயிலில் தினமும் ஒலிக்கும் பன்னிரு திருமுறைப் பாடல்களில் ஓதுவாமூர்த்திகளுடன் பயிற்சி மாணவர்களும் பாடல்களை பாட அனுமதிக்கப்படுகின்றனர் என்கிறார் கோயில் நிர்வாக அதிகாரி நடராஜன்.

''இளைஞர்கள் ஆர்வத்தோடு பயில முன்வருவதால், அவர்களுக்கு ஊக்கம் தரும்வகையில் உதவித்தொகை அளித்து, விடுதியில் அவர்கள் தங்கி படிக்க அரசு வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது. பயிற்சி முடிந்த மாணவர்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் ஓதுவாராக அமர்த்தப்படுவார்கள். தனியார் கோயில்கள் மட்டுமல்லாது, திருமணம் மற்றும் பல சுபநிகழ்வுகளுக்கும் ஓதுவார்கள் அழைக்கப்படுகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ஓதுவார்களை வரவழைக்கிறார்கள்,'' என்று நடராஜன் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்