ஒகி புயல்: சென்னையில் எதிரொலித்த குமரி மீனவர்களின் குரல்

  • 16 டிசம்பர் 2017

கி புயலில் இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கவேண்டும் என்றும் கி புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சென்னையில் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீன்பிடிக்கும்போது போது கடலில் தவறி விழுந்து இறந்துபோகும் மீனவர்கள் அல்லது இயற்கை சீற்றத்தில் கடலில் காணாமல் போகும் மீனவர்கள் ஏழு ஆண்டுகள் கழித்தே இறந்தவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்ற விதியை மற்றவேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆபத்துக் காலங்களில் மீனவர்களை மீட்க ஹெலிக்காப்டர் தளம் அமைக்க வேண்டும் என்று பலமுறை அரசுக்கு வலியுறுத்தியதாகவும், அதுபோன்ற மீட்புப் பணிக்கென்று ஒரு தளம் கன்னியாகுமரியில் இருந்திருந்தால், ஒகி புயலின்போது, காணாமல் போன நூற்றுக்கணக்கான மீனவர்களை உடனடியாக மீட்டிருக்கலாம் என ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த லின்கன் எஸ் பாஸ்டின் கூறினார்.

''குமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்பவர்கள். எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மீனவர்களில் தொழிலாளர்கள் என யாரும் இல்லை. பங்குதாரர்களாகவே தொழிலில் ஈடுபடுவார்கள். அதனால் சொந்தங்களை, உடைமைகளை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு உடனடியாக உதவித்தொகை அளிக்கவேண்டும்,'' என்று லின்கன் எஸ் பாஸ்டின் கூறினார்.

அவர் மேலும் குமரி மீனவர்களோடு சேர்ந்து தொழில் ஈடுபட்ட வடமாநில மீனவர்களுக்கும் இழப்பீடு தரவேண்டும் என்றும் கூறினார்.

குமரி மீனவர்களின் பிரச்சனைகளை பொது வெளியில் பேசி ஆர்ப்பாட்டம் நடந்த சென்னை உயர்நீதிமன்றம் சென்று உத்தரவு பெறவேண்டிய நிலை ஏற்பட்டது என்று வழக்கறிஞர் கான்சியஸ் இளங்கோ தெரிவித்தார்.

''சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். எந்தப் பதிலையும் காவல்துறை தரவில்லை. இறுதியாக நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி பெற்றோம். ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களது கருத்துக்களை, விமர்சனங்களைக் கூறுவதற்கு வழக்கு போட்டு அனுமதி பெறவேண்டும் என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார் இளங்கோ.

குமரியில் தகவல் மையம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கடலில் மீனவர்கள் காணாமல் போனால் அதை குடும்பத்தினருக்கு தெரிவித்து, மீட்புப் பணிகள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

''எங்களின் அப்பாவை, அண்ணனை மீட்டுத் தா'' என்ற பதாகைகளை ஏந்திய பெண்கள், குழந்தைகள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் ஒகி புயல் மீனவ சமுதாயத்தை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டதாகக் கூறினர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்