“ஆளுநர் ஆய்வு மாநில உரிமைகளை பறித்துவிடும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது”

  • 17 டிசம்பர் 2017
தமிழக முதல்வர் நேரில் ஆய்வு

தமிழக ஆளுநர் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு நடத்துவது தமிழ் நாட்டில் சர்ச்சைகளையும் போராட்டங்களையும் தீவிரமடையச் செய்துள்ளது.

இந்நிலையில், எதிர்ப்புக்களை மீறி ஆளுநர் தமிழக மாவட்டங்களில் ஆய்வு செய்வது சட்டப்படியானதா? ஆம் எனில், எதிர்க்கட்சிகள் அதை ஏற்கும் வகையில் எடுத்துரைக்க வேண்டுமா? என்று கேள்விகள் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தங்களின் .பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலைதளங்கள் மூலம் அளித்த பதில்களை தொகுத்து வழங்குகின்றோம்.

வீரா சிகாமணி பி என்ற நேயர் ஃபேஸ்புக்கில் , “பழைய காலங்களில், ராஜா தன் ஆட்சியில் மக்கள் தன்னம்பிக்கை வைத்துள்ளார்களா என்று மாறுவேடத்தில் சென்று ஆய்வு செய்ததை கேள்விப்பட்டிருக்கிறோம். அது போல் அம்மக்களின் ஆளுநர் மக்கள் குறைகளை கேட்பதில் என்ன தவறு உள்ளது. ஆகவே, இதை குறை கூறுபவர்களின் செயல்பாடு சரியில்லை என்று தானே கருத வேண்டி உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக ஆளுநரின் செயல் அத்துமீறல், உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்று டுவிட் பதிவிட்டுள்ளார் பி. சந்திரசேகரன் என்ற நேயர்.

முதுவை.பா. நாகராசன், “ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது நல்ல விசயம் தான்... நாட்டின் தலைமகன் குடியரசு தலைவரே அதை முதலில் ஆரம்பித்து வைக்கட்டும்.... மத்திய அரசின் திட்டங்களை அவர் ஆய்வு செய்யட்டும்.... அதன் தொடர்ச்சியாக எல்லா மாநில ஆளுநர்களும் ஆய்வு மேற்கொள்ளட்டும்.... என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரை செயல்பட அனுமதித்து என்னதான் விளைவு ஏற்படுகிறது என்று பொறுத்துதான் பார்க்கலாமே என்பது செந்தில் எம். ராபர்ட்ஸின் டுவிட்டர் பதிவாக உள்ளது.

அன்வார் டீன் என்ற நேயர், “பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஆளுநர் ஆய்வு உள்ளதா?புதுச்சேரியில் ஆளுநர் கிரன்பேடி அவர்கள் ஆய்வு செய்தபோது அங்குள்ள தலைமை நிர்வாகம் அதை எதிர்க்கின்றது ஆனால் தமிழ்நாட்டில் அதை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது காலத்தின் கட்டாயம்? என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

சிவசாமியா சியாமளா, “தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எதுவும் கிடையாது. அனைத்தும் எதிரிக்கட்சிகளே! அனைவரும் சுயநலவாதிகள். ஆளுநரை இப்படி எல்லாம் தரம் கெட்டு விமர்சிப்பது தப்புதான்” என்று கூறியுள்ளார்.

மக்களுக்கு நல்லது செய்தால் யார் செய்தாலும் பரவாயில்லீங்க என்று டுவிட்டரில் பதிலளித்துள்ளார் பைரவி.

“ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியை ஆய்வுசெய்து மீட்புப்பணியை விரைவுபடுத்தி சில உயிர்களை காப்பாற்றியிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கிறார்” ஜெயக்குமார் கேசிஎல் என்கிற நேயர்.

Image caption தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் அமைச்சர் வேலுமணி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்

ஆளுநர் செய்வது சரியானது என்று டுவிட் செய்துள்ளார் நாகராஜ் ராமராஜ்.

சரோஜா பாலசுப்ரமணியன், “அமைச்சர்கள் செய்ய வேண்டிய வேலையை கவர்னர் செய்கிறார். தமிழ்நாட்டில் எல்லாம் சட்டப்படிதான் நடக்கிறதா?” என்ற இன்னொரு கேள்வியை எழுப்பி வாதிடுகிறார்.

முகமத் அன்வர் அப்பாஸ், “ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் தவறைக் கண்டறிந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் ஊழல் அரசியலை ஒழிக்க முடியும். ஆனால் தன் கூட்டத்தாரின் சுயநல அரசியலுக்காக செய்யக்கூடாது” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலத்தில் இவ்வாறு நடக்குமா? என்று கேள்வி எழுப்பி டுவிட் செய்துள்ளார் ஸ்ரீ என்பவர்.

ராஜேந்திரன் வெங்கடேசன், “இந்திய அரசியலமைப்பு ஆளுநரை மாநில அரசின் தலைவராக நிர்ணயித்துள்ளது. ஆளுநரின் நடவடிக்கை சரியானதே” என்று ஆதரவளித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

மகாராஜன் பாண்டியராஜ், “கவர்னர் ஆய்வு என்பது, சிறிதுகூட மக்களின் நன்மைக்காக இல்லை, முழுக்க,முழுக்க பிஜேபி ஆட்சி இல்லாத மாநிலங்களில், பிரச்சனையை உண்டு பண்ணுவதற்கே ஒழிய வேறொன்றும் இல்லை“ என்று தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் அறிவாளிகள் தடுத்திருக்கலாமே! என்று ஆலோசனை வழங்குகிறார் நேயர் மைதீன் அஸ்பாக்.

ருத்திரமூர்த்தி மூர்த்தி என்ற ஃபேஸ்புக் நேயர், “ஆளுநர் தமிழ் நாட்டில் ஆய்வு செய்வது சரிதான். ஆளும் கட்சியிடம் கேட்டால் மக்களுக்கு குறையில்லை என்று தான் சொல்லுவார்கள். எதிர் கட்சியிடம் கேட்டால் மக்களுக்கு குறை இருக்கு என்று சொல்லுவார்கள். அவரே ஆய்வு செய்தால் உண்மை தெரியும். ஆளுநர் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தன்னுடைய கருத்தை விளக்கமாக கூறியுள்ளார்.

கவர்னர் மக்களை வந்து சந்திப்பது குறைகளை கேட்பது நல்ல விஷயம். இதில் தவறு இல்லை. மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யனும் எந்த எம்எல்ஏ ஆவது தொகுதிகளை போய் பார்த்தது உண்டா. ..... என்கிறார் மகேசன்.

ஆ ராஜேந்திரன் என்ற நேயர் “தேசிய பேரிடர் பகுதி, மீத்தேன் திட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடலாமே” என்கிறார்.

சி.சந்தோஷ் குமார் ஃபேஸ்புக் பக்கத்தில், “ஆளுநர் என்றால் ஆளுநருக்கு உட்பட்ட வேலையை மட்டும் பார்க்கட்டும். மாநில சுயாட்சியில் தலையிடக் கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது வரம்பை மீறக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.

கண்ணன் நிவாஷ், “இவர் ஆய்வு செய்ய வேண்டிய இடம் கன்னியாகுமரி . இது பிஜேபியின் தூண்டுதல். நாட்டில் அதிக பிரச்சனை உள்ள இடத்தில் ஆய்வு செய்ய மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

ஆளுநர் ஆய்வு மாநில உரிமைகளை பறித்துவிடும் என்பது கிருஷ்ணாவின் டுவிட்டர் பதிவாக உள்ளது.

ஆல்பிரட் ஜான் குமார் என்பவர் “தப்பே இல்லை. சும்மா உக்காந்துகிட்டு தண்டத்துக்கு சம்பளம் வாங்குற ஒரு பதவி தேவையில்லை. குறைந்தபட்சம் இந்த வேலையை யாவது பார்க்கிறாரே. சந்தோசப் படுங்க என்று அனைவருக்கும் தெரிவித்திருக்கிறார்.

மாணிக்கம் சூரியா, “ஆய்வு செய்ய அதிகாரம் இருக்கோ இல்லையோ,ஆய்வு என்பது சரியான ஒன்று. திமுக எதிர்க்க காரணம் வரும் காலத்தில திமுக ஆட்சிக்கு வந்தா ஆட்டைய போட ஆளுநர் தடையா இருப்பார் என்று பயம்” என எதிர்காலத்தை சுட்டிக்காட்டுகிறார் இவர்.

நவீன் வி என்ற நேயர் “சரியான செயல். ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும்” என்று ஆதரவளித்து டுவிட் பதிவிட்டுள்ளார்.

பிரபு ராஜ் நேயரோ, “கவர்னர் செயல்பாடுகளில் எதார்த்தம் இல்லை, மக்களுக்காக இல்லை மத்திய அரசின் தேவைக்காக” என்று இந்த செசுல்பாட்டுக்கு உள்நோக்கத்தை சுட்டிக்காட்டுகிறார் .

பிரபு ராஜேந்திரன், “ஆளுநரின் ஆய்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது, கண்டிக்கத்தக்கது” என்கிறார்.

சட்டப்படிதான் என்றால் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏன் நடைபெறவில்லை என்ற வாதத்தை கிளப்புகிறார் ஜஹாபார்.

ஆளுநருக்கு இது தேவையில்லாத வேலை. இது வடமாநிலம் அல்ல தமிழ்நாடு என்பது முகமத் ஹாமுவின் பதிவாகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்