ஆர்.கே.நகரில் தேர்தல் விதிமுறைமீறல்: 102 வழக்குகள் பதிவு

  • 17 டிசம்பர் 2017
ஆர்.கே.நகரில் படத்தின் காப்புரிமை NAVEEN
Image caption தேர்தல் விதிமுறை மீறல்களுக்காக நடந்த கைதுகளுக்கு பிறகு நடந்த போராட்டம்

ஆர் கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நவம்பர் 24ம் தேதியில் இருந்து ஓட்டுக்கு பணம், பரிசு அளிக்கப்படுவது மற்றும் ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரைத் தாக்குவது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் கீழ் தற்போதுவரை 102 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரில் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் 11 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் தற்போதுவரை 39 நபர்கள் தேர்தல் விதிமுறை மீறல்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

தேர்தல் விதிமுறைமீறலில் ஈடுபட்ட நபர்கள் பயன்படுத்திய 83 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேநேரத்தில் ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர் என்று சொல்லப்படும் செல்வி என்ற நபர் பட்டுவாடா செய்வதற்காக ரூ.20 லட்சம் பணம் வைத்திருந்தார் என்று திமுகவினர் அளித்த புகாரின் பேரில் செல்வி கைது செய்யப்பட்டார். செல்வியை அதிகாரிகள் கூட்டிச் செல்வதை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரசாரத்தில் ஈடுபட்ட டிடிவி தினகரன் தனது தரப்பினர் பணம் கொடுப்பதாக எழுந்துள்ள புகார்களை மறுத்துள்ளார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கொண்டுள்ள ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு டெபாசிட் இழந்துவிடுவோம் என்ற பயத்தில் பணம் கொடுப்பதாகவும், ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 வரை அவர்கள் கொடுப்பதாகவும் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை NAVEEN
Image caption தேர்தல் விதிமுறை மீறல்களுக்காக நடந்த கைதுகளுக்கு பிறகு நடந்த போராட்டம்

அதிமுகவின் ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறுவார்கள் என்ற பயத்தில் திமுகவினர் மற்றும் டிடிவி அணியினர் பணம் கொடுப்பதாக அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஊடகங்களிடம் தெரிவித்தார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக அளிக்கப்பட்டுள்ள புகார்கள் உண்மையானவையா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

அதிமுக மற்றும் தினகரன் தரப்பும் போட்டிபோட்டு பணம் கொடுத்துவருவதாகவும், கடந்த மூன்று நாட்களில் பணம் பட்டுவாடா செய்த இரண்டு நபர்களை திமுகவினர் காவல்துறையிடம் பிடித்துக்கொடுத்துள்ளதாக திமுகவைச் சேர்ந்த பரசுராமன் தெரிவித்தார்.

ஆர் கே நகரில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின், ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக ஆதாரத்துடன் புகார் அளித்தபிறகும் கூட நடவடிக்கை எடுப்பதில் தாமதம் காட்டப்பட்டது என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் ஆர் கே நகர் வாக்காளர்களுக்கு, ஆர் கே நகர் பகுதியில் இருந்து வெளியேறி சென்னையின் பிற பகுதிகளுக்குச் சென்று பணம் கொடுக்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு அருகே ஒரு தனியார் விடுதியில் வாக்காளர் அடையாள அட்டை கொண்டுவந்து மக்கள் பணம் பெற்றுச் செல்வதாக நேரலையில் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

அரசியல் கட்சிகளிடம் வாக்காளர்கள் பணம் வாங்குவது தெரியவந்தால் அவர்கள் மீதும் வழக்கு பதியப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரி திவ்யா தர்ஷினி தெரிவித்தார்.

பிபிசிதமிழிடம் பேசிய அதிகாரி திவ்யா தர்ஷினி, ''ஓட்டுக்காக பணம் கொடுப்பதும், பெறுவதும் சட்டத்திற்கு புறம்பானது. வாக்காளர்கள் பணம் பெறுவது ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டால், நாங்கள் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம். பணம் கொடுக்கும் அரசியல் கட்சியும், பணம் வாங்கும் வாக்காளரும் தவறு இழைத்வர்கள் என்பதால் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும். ஓட்டுக்கு பணம் கொடுப்பது தவிர்க்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசியல் கட்சியினருக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது,'' என்று தெரிவித்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :