புற்றுநோய் நோயாளிகள் மீண்டும் பேச உதவும் எளிய சாதனம்

  • 19 டிசம்பர் 2017
Image caption டாக்டர் ராவ் குரலவடப் பெட்டிகளில் ஒன்றை பொருத்தியிருக்கும் நளினி, மற்ற தொண்டை புற்று நோயாளிகளுக்கும் உதவுகிறார்.

டாக்டர் விஷால் ராவ் இந்தியாவில் தொண்டை புற்றுநோயாளிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளார்.

நாடு முழுவதும் ஆண்டொன்றுக்கு சுமார் 30,000 நோயாளிகளுக்கு குரல்வட (குரல் நாண்கள்) புற்றுநோய் (larynx) ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஒரு டாலருக்கு ஒரு குரல்

நோயின் கடைசி கட்டங்களில் இருப்பவர்களுக்கு குரல் வடம் (குரல் நாண்கள்) அகற்றுவது ஒன்றே முடிவாக இருப்பதால், நோயாளிகளின் குரலும் அவர்களை விட்டு போய் விடுகிறது.

செயற்கை குரல் வடத்தின் (prosthetic voice boxes) விலை 1,000 டாலர்களாகும். பல நோயாளிகளுக்கு இது கட்டுப்படியாகாது.

"பொதுவாக நமது உடல்நல பாதுகாப்பு சேவைகளில் பெரும்பாலானவை தனியார்வசம் உள்ளது மற்றும் விலை அதிகமானது. எனவே, இந்த நோயாளிகள் மீண்டும் பேசுவதற்கு உதவுவதன் தேவை இருப்பதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன். ஏனென்றால் பேசுவது என்பது உரிமை, சலுகை அல்ல" என்கிறார் டாக்டர் ராவ். இவர் பெங்களூரில் உள்ள ஹெல்த் கேர் க்லோபல் மையத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவராக பணிபுரிகிறார்.

பயனற்றவனாக உணர்ந்தேன்

நாராயண் சுவாமிக்கு ஏற்பட்ட புற்றுநோயால் அவரது குரல் வடம் நீக்கப்பட்டதால் அவரால் பேசமுடியவில்லை. அது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

"நான் பணியாற்றிய நிறுவனத்தில் தொழிற்சங்கத் தலைவராக இருந்தேன் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு உதவி செய்வேன். குரல் இல்லாத நான் அவர்களுக்கு பயனற்றவன்" என்று அவர் கூறுகிறார்.

"குரலை இழப்பது என்பது என் வாழ்க்கையை இழப்பதற்கு சமம், விரும்பிய எதையும் என்னால் செய்ய முடியவில்லை, நான் என்னையே கொல்ல விரும்பினேன்."

சுவாமி போன்ற நோயாளிகளுடன் பேசிய பிறகு அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று சிந்திக்கத் தொடங்கினார் டாக்டர் ராவ்.

விலை குறைவான குரல் வட சாதனத்தை (பேசுவதற்கு உதவும்) ஏன் வடிவமைக்கக்கூடாது என்று ஒரு நண்பர் அவரிடம் கேட்டபோது, அவருக்கு தேவையான உத்வேகம் கிடைத்தது. தொழிற்துறை பொறியியலாளரான சஷாங்க் மஹேஸ் உடன் சேர்ந்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டார் டாக்டர் ராவ்.

இரண்டாண்டு முயற்சிகளுக்கு பின்னர், 'அம்குரல் வடம்' என்ற கருவியை கண்டுபிடித்தனர். ஒரு டாலர் விலை கொண்ட இது குரல் வடம் அகற்றப்பட்டநோயாளிகளின் தொண்டைக்குள் செருகப்படும் சுமார் ஒரு சென்டி மீட்டர் அளவு கொண்ட சிறிய சாதனம் ஆகும்.

இது நளினி சத்யநாராயணா போன்ற நோயாளிகளுக்கு ஒரு புது வாழ்க்கையை கொடுத்திருக்கிறது.

அவரால் தற்போது பேச முடிகிறது, தொண்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிற நோயாளிகளுடன் நேரடியாகப் பேசி ஆலோசனை வழங்க முடிகிறது.

"நான் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பினேன். புற்றுநோய்க்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்பதற்கான சிறந்த நேர்மறையான உதாரணமாக இருக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.

Image caption நோயாளியின் தொண்டைக்குள் செருக பயன்படும் சாதனத்துடன் கூடிய குரல்வடம்

"தொண்டை புற்றுநோயால், அதுவும் அதன் நான்காம் கட்டத்தில் இருப்பவர்கள், தங்கள் குரல் வடத்தை இழக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அதற்குள் குரல்வடம் முற்றிலுமாக அழிந்துவிடுகிறது" என்று விளக்குகிறார் டாக்டர் ராவ்.

"இப்போது இதுபோன்ற நோயாளிகளுக்கு சுவாசக் குழாயை உணவு குழாயுடன் இணைத்து, நுரையீரலில் இருந்து வரும் சுவாசக்காற்று உணவு குழாயை அசையச்செய்ய முடிந்தால் அவர்களால் பேசமுடியும். உணவுகுழாயில் மீண்டும் அசைவுகளை (அதிர்வுகளை) ஏற்படுத்துவதற்கு மூளை பயிற்சி அளித்தால், நோயாளிகளால் மீண்டும் பேசமுடியும். "

'அம் வாய்ஸ் பாக்ஸ்' திட்டத்தில் வேலை செய்தவர்கள் தங்கள் நேரத்தையும் நிபுணத்துவத்தையும் இலவசமாக வழங்கினார்கள். எனவே, இதை குறைந்த விலையில் விற்க முடிகிறது.

ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்ற விருப்பம் இந்தக் குழுவை இயக்கியது. அதுவே நோயாளிகளுக்கு குறைந்த விலையில் சுகாதார வசதிகளை வழங்க செய்தது என்று டாக்டர் ராவ் கூறுகிறார்.

Image caption உயர் தரமான சுகாதார வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று டாக்டர் ராவ் விரும்புகிறார்.

இந்தியாவிலும் இந்த சாதனம் தயாரிக்கப்படுகிறது; பெரும்பாலான பிற செயற்கை குரல் வடங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் அவற்றின் விலை அதிகம்.

'அம் வாய்ஸ் பாக்ஸ்' நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றும் என்று நம்புகிறார், ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸை சேர்ந்த தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அலோக் தாக்கர்.

"இது ஒரு எளிமையான சாதனம். குரலை இழந்தவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்புவதற்கும், பொருளாதார ரீதியாக வாழ்க்கையை நிம்மதியாக எதிர்கொள்வதற்கும் உதவும் ஒரே துருப்பு சீட்டு அநேகமாக இதுதான்" என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், டாக்டர் ராவ் மற்றும் அவரது குழுவினர் தங்கள் குரல்வடப்பெட்டி கிடைக்கும் தன்மையை விரிவாக்குவதற்கு அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால் குறித்தும் அவர் எச்சரிக்கை செய்கிறார்.

இதேபோன்ற ஒரு முந்தைய திட்டம், போதுமான அளவிற்கு உற்பத்தி செய்ய முடியாமல் போனதால், பரந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்கிறார் அவர்.

தனது கண்டுபிடிப்பு இந்தியாவில் உள்ள பிராந்திய புற்றுநோய் சுகாதார மையங்களில் கிடைக்கவேண்டும் என்று டாக்டர் ராவ் பணியாற்றி வருகிறார். எனவே, செலவைப்பற்றி கவலைப்படாமல் தொண்டை புற்றுநோயாளிகள் அனைவரும் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

"மிகவும் எளிய முறையில் பலரின் வாழ்க்கைக்கு உதவியிருக்கும் ஒரு எளிமையான கண்டுபிடிப்பு இது" என்று அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :