யார் இந்த ஜிக்னேஷ் மேவானி? குஜராத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியது எப்படி?

குஜராத்தின் வட்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் தையல் இயந்திரம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சக்கரவர்த்தி விஜயகுமாரை தோற்கடித்துள்ளார் 35 வயதான தலித் சமூக ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி.

ஜிக்னேஷ் மேவானி யார், அவர் வட்கம் தொகுதியில் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்த 8 சுவாரஸ்ய தகவல்கள்:

1. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்த ஜிக்னேஷ் நட்வர்லால் மேவானி செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு, சட்டம் பயின்ற அவர் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

2. 2016ல் அகமதாபாத்தின் உனா நகரில் பசு மாட்டு தோலை உரித்ததற்காக 4 தலித்துகள் பசுப் பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட காணொளி வைரலாக பரவ அப்பிரச்சனைக்கு எதிராக போராட தொடங்கியபோது பிரபலமானார் ஜிக்னேஷ்.

3. இந்தாண்டு ஜனவரி மாதம், குஜராத்தில் நடைபெற்ற மோதியின் குஜராத் வளர்ச்சிக்கான உச்சி மாநாட்டை எதிர்த்து குரல் கொடுத்தார் ஜிக்னேஷ் மேவானி.

4. தேர்தலில் சுயேச்சையாக களம் கண்ட ஜிக்னேஷ் தையல் இயந்திரம் சின்னத்தில் போட்டியிட்டு 95 ஆயிரத்து 497 வாக்குகளை பெற்று பாஜக வேட்பாளரை வீழ்த்தினார்.

5. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி சுயேச்சை வேட்பாளர் ஜிக்னேஷுக்கு வட்கம் தொகுதியில் ஆதரவளித்தன.

6. ஜிக்னேஷுக்கு ஆதரவாக நிதி திரட்டப்பட்ட நிலையில், எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலரான அருந்ததி ராய் சுமார் 3 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார்.

7. வட்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மூத்த தலைவர்களான நரேந்திர மோதி, அமித் ஷா, விஜய் ரூபானி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

8. ஜிக்னேஷின் பிரசார குழு வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டியது. திண்ணைப் பிரசாரம், தெருவோரக்கூட்டம், கிராமப்புற அளவிலான சிறு கூட்டங்கள் ஜிக்னேஷின் வெற்றிக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்