அனல் பறக்கும் ஆர்.கே. நகர் யாருக்கு?

தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்கத் துடிக்கும் டிடிவி தினகரன், தங்கள் பக்கமே அ.தி.மு.க. இருக்கிறது; மக்கள் தங்களை ஆதரிக்கிறார்கள் என்று காட்டத்துடிக்கும் ஆளும் அ.தி.மு.க, ஆளும் கட்சி மீது கடும் அதிருப்தி இருக்கிறது என்று நிரூபிக்கத் துடிக்கும் தி.மு.க. என மூன்று துருவங்களால் இழுபடுகிறது சென்னையின் வட பகுதியில் அமைந்திருக்கும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசம் இருந்த இத்தொகுதியில் கடந்த ஏப்ரலில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்காளர்களுக்குப் பெரிய அளவில் பணம் கொடுக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் இந்தத் தொகுதியில், செவ்வாய்க்கிழமையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு.

1977ல் உருவாக்கப்பட்டதிலிருந்து பதினொரு முறை தேர்தலைச் சந்திருக்குக்கும் இத்தொகுதியில் அதிக தடவைகள் அ.தி.மு.கவே வெற்றிபெற்றிருக்கிறது. அதாவது ஏழு முறை அ.தி.மு.க. இந்தத் தொகுதியை தன் வசம் வைத்திருந்தது. காங்கிரஸ் இரண்டு தடவையும் தி.மு.க. இரண்டு தடவையும் இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன.

2011ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதா, 2014ல் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதால் பதவியிழந்தார். அந்த வழக்கிலிருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதும், தான் மீண்டும் போட்டியிடுவதற்கு இந்தத் தொகுதியையே தேர்ந்தெடுத்தார். இதற்கு உதவியாக அப்போது இந்தத் தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினமா செய்தார் (இந்த வெற்றிவேல் தற்போது டிடிவி தினகரன் அணியில் இருக்கிறார்).

எதிர்பார்த்ததைப் போலவே அந்தத் தேர்தலில் 88 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார் ஜெயலலிதா. அதனால், 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு சுமார் 56 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார் அவர்.

2016 டிசம்பரில் ஜெயலலிதா இறந்த பிறகு, 2017 ஏப்ரலில் இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. தரப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே அணியாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனி அணியாகவும் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னமும் கட்சியின் பெயரும் முடக்கப்பட்டிருந்தது. எடப்பாடி - சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னமும் ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு மின் விளக்குக் கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டிருந்தன. எடப்பாடி தரப்பில் டிடிவி தினகரனும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் இ. மதுசூதனனும் தி.மு.க. சார்பில் மருது கணேஷும் அப்போது வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் விநியோகம் செய்ததாக எழுந்த புகாரையடுத்து வாக்குப் பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பாக, தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

பிறகு, இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென வழக்குகள் எல்லாம் தொடரப்பட்ட நிலையில், இப்போது டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.

குறுகலான சாலைகள், குப்பை, போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சினைகளில் தவிக்கும் இத்தொகுதி, இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் காரணமாக மூச்சுத் திணறிப்போயிருக்கிறது. அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால் தொகுதியின் பல சாலைகள் ஒரு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதனால், ஏற்கனவே நெரிசலாகக் காட்சியளித்த பல சாலைகளில் இப்போது வாக்குகேட்டு நடக்கும் ஊர்வலங்களால் மொத்தமாக முடங்கிப் போயிருக்கின்றன.

தினகரன் பலம் என்ன?

இங்கு யார் வெற்றிபெறுவது என்பது ஒரு புறமிருந்தாலும், தொகுதியின் பெரும்பாலானவர்களால் அறியப்பட்டவராக இருக்கிறார் டிடிவி தினகரன். கடந்த முறை, சசிகலா தலைமையிலான அணியில் இருந்த டிடிவி தினகரனுக்காக ஆளும்கட்சி மிகத் தீவிரமாகப் பணியாற்றியது. அதன் தாக்கம் இப்போதும் தொகுதிக்குள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

கடந்த முறை இரட்டை இலை முடக்கப்பட்டதால் தொப்பிச் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் இந்த முறை ஒரு சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். தினகரனுக்கு குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே அந்தச் சின்னம் தொகுதிக்குள் பிரபலமாகியிருக்கிறது.

குக்கர் படம் பொறித்த கொடிகள், தினகரன் வரும்போது குக்கர் கோலங்கள், தொண்டர்களின் கையில் குக்கர் என எல்லா வழிகளிலும் குக்கரை வாக்காளர்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறார் தினகரன். தவிர, அவரது பிரச்சாரக்கூட்டங்களுக்கு கூடும் கூட்டமும் உற்சாகமும் பிற கட்சிகளை கவலைக்கு உள்ளாக்கவே செய்திருக்கின்றன.

கடந்த முறை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரங்கள் நடந்துகொண்டிருந்தபோது தினகரன் தரப்பு மீது வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாகப் புகார் எழுந்தது. அதே போன்ற புகார் இப்போதும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இந்தப் புகார்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தெம்பாக வலம்வருகிறார் தினகரன். அவர் பிரச்சாரத்திற்குச் செல்லும் வழியெங்கும் தோரணங்கள், கோலங்கள், குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் வைபவங்கள், ஆரத்தி என ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இது தவிர, வீட்டின் மாடிகளிலிருந்து பூ தூவுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஆளும் அ.தி.மு.கவின் வாக்குகளைப் பிரிப்பார் தினகரன் என்று அளவிலேயே கருதப்பட்ட டிடிவி தினகரன், தற்போது வெற்றிபெறும் வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கிறார்.

தொகுதிக்குள் ஒரு சுற்று சுற்றிவந்தால், ஒருவர் பலமுறை தினகரன் ஆதரவு பிரச்சார ஊர்வலங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. களத்தில் உள்ள வேறு எந்தப் பெரிய கட்சியும் இவ்வளவு தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

பிரச்சாரத்தின் கடைசி நாளில் தினகரன் கூட்டிய கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தொகுதியே ஸ்தம்பித்தது, பிற கட்சிகளை அதிரவைத்திருக்கிறது.

மதுசூதனனுக்குள்ள வாய்ப்புகள்

ஆளும் அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிடும் இ. மதுசூதனனுக்கு இந்த முறை இங்கு போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் அழுத்தத்தால் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைத்திருப்பது மதுசூதனன் தரப்புக்கு மிகப்பெரிய பலம். தவிர, தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னம் கிடைக்காதது, தினகரனின் பிரச்சாரத்தில் துவக்கத்தில் இருந்த தொய்வு ஆகியவற்றால் ரொம்பவுமே தெம்பாகக் காட்சியளித்தது அ.தி.மு.க. ,

கடந்த 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறி துறை அமைச்சராக பணியாற்றியவர் மதுசூதனன். அதன் பிறகு பெரிதாக அவருக்கு அரசியலில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அ.தி.மு.கவின் அவைத் தலைவர் பதவியிலேயே வெகுநாட்கள் இருந்தவருக்கு இப்போது மீண்டும் தேர்தல் அரசியலில் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கும் மதுசூதனனுக்கும் ஒத்துப்போகாது என்பது ஒரு பலவீனம்.

தவிர, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசின் மீது பரவலாகக் காணப்படும் அதிருப்தியும் மதுசூதனுக்கு எதிராக உள்ளது.

இருந்தபோதும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் மதுசூதனனுக்காக தீவிரமாக வாக்குவேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், இரட்டை இலைச் சின்னம் இருப்பதாலேயே மதுசூதனுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துவிடுமா என்பது கேள்விக்குறிதான்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.கவைத்தான் குறிவைத்து எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். சில சந்தர்ப்பங்களில் தினகரனின் பெயரைச் சொல்லாமல் அவரைத் தாக்குகிறார்.

திமுக-வின் வாய்ப்புகள்

தி.மு.க. வேட்பாளர் மருத கணேஷ், ஏப்ரல் மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தி.மு.கவின் சார்பில் போட்டியிட்டவர் என்பதால் இப்போது தொகுதிக்குள் நன்றாக அறிமுகமாகியிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியும் அக்கட்சியின் வாக்குகளை தினகரன் பிரிப்பதும் தி.மு.கவுக்கு உள்ள சாதகமான அம்சம். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர், தொகுதியின் பிரச்சனைகளை நன்றாக அறிந்தவர் என்ற பலத்துடன் தீவிரமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார் மருது கணேஷ்.

மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளும் தி.மு.கவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. இந்தக் கட்சிகளின் வாக்குகளில் பெரும் பகுதி தி.மு.கவிற்குக் கிடைக்கக்கூடும்.

ஆனால், இந்தத் தொகுதி எப்போதுமே தி.மு.கவிற்கு கைகொடுக்காத தொகுதி என்பது இக்கட்சியின் மிக முக்கியமான பலவீனம்.

அ.தி.மு.கவும் டிடிவி தினகரனும் யார் ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் என்பது போன்ற திசையில் தேர்தலைக் கொண்டுசெல்ல, தி.மு.க. தொகுதியிலிருக்கும் பிரச்சனைகளைப் பட்டியலிட்டுப் பேசுகிறது. ஆனால், அ.தி.மு.க., டிடிவி தினகரன் தரப்பு பிரச்சாரத்தில் காணப்படும் உற்சாகமும் பரபரப்பும் தி.மு.க. பிரச்சாரத்தில் தென்படவில்லை. முழுக்க முழுக்க ஆளும்கட்சி மீதான அதிருப்தியையும் நம்பி களமிறங்கியிருக்கிறது தி.மு.க.

இதற்கு நடுவில், பா.ஜ.கவின் கரு. நாகராஜன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் ஆகியோரும் களத்தில் இருக்கின்றனர். இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பிரச்சினைகள் மலிந்த தொகுதி

சுமார் 2,19,409 வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதி சென்னையின் மிகவும் பின்தங்கிய தொகுதிகளில் ஒன்று. சென்னையின் மிகப் பழைய பகுதியான இத்தொகுதியில் குறுகிய சாலைகளும் சிறு சிறு சந்துகளும் அதிகம். தீராத குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல், ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு என பிரச்சனைகளுக்குப் பஞ்சமே இல்லாத தொகுதி இது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிறகு குடிநீர் பிரச்சனை ஒரளவுக்குச் சரிசெய்யப்பட்டிருக்கிறது. குப்பைகளும் ஒழுங்காக அள்ளப்பட்டுவந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மீண்டும் குப்பைகூளங்களுடன் காணப்படுகிறது இந்தத் தொகுதி.

இந்தத் தொகுதியில் ஒரு கலைக் கல்லூரியும் பாலிடெக்னிக்கும் கட்டப்படும் என தேர்தல் வாக்குறுதியளித்தார் ஜெயலலிதா. சொன்னபடி கலைக்கல்லூரி கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதற்குள் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் குன்றியதால் அந்தக் கட்டடம் திறக்கப்படாமலேயே இருக்கிறது. இருந்தபோதும் அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் இரண்டு பிரிவுகளுடன் இந்தக் கல்லூரி நடந்துவருகிறது.

குப்பைக் கிடங்கு

இதுமட்டுமல்ல, ஒட்டுமொத்த ராதாகிருஷ்ணன் நகரிலும் நூலகங்கள், வங்கிக் கிளைகள் குறைவு என்ற குறையையும் சிலர் முன்வைக்கிறார்கள்.

ராதாகிருஷ்ணன் நகரின் மிக முக்கியமான பிரச்சனை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு. இந்த குப்பைக்கிடங்கு, தொகுதிக்குள் வரவில்லை என்றாலும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியை ஒட்டியுள்ள எழில்நகர் பகுதிகளை ஒட்டிதான் இக்கிடங்கு அமைந்துள்ளது.

வட சென்னையின் குப்பைகள் அனைத்தும் கொட்டப்படும் இடம் இதுதான். இதனால், இதைச் சுற்றி வசிக்கும் மக்கள் அனைவரும் கொசுத்தொல்லை, நிலத்தடி நீர் மாசடைந்திருப்பது, காற்றில் பரவியிருக்கும் துர்நாற்றம் ஆகியவற்றால் எப்போதும் அவதிப்பட்டுவருகின்றனர். "தமிழ்நாட்டில் அதிகம் புற்றுநோயாளிகள் உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்று" என்கிறார் சிபிஐயின் சி. மகேந்திரன்.

தற்போது இந்த குப்பைக் கிடங்கைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுவிட்டாலும், ஒருங்கிணைந்த குப்பை மேலாண்மை அவசியம் என்கிறார்கள் இப்பகுதிவாசிகள்.

இந்தத் தொகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள். ஆகவே ரேஷன் கடைகள் சரியாக இயங்குவது மிக அவசியம் என்கிறார்கள் இப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள்.

கரைபுரளும் பணம்

ஆனால், எந்த வேட்பாளருக்கு களம் சாதகமாக உள்ளது என்பதைக் கணிக்க முடியாத வகையில் பணம் கரைபுரண்டு ஓடுகிறது. தொகுதி முழுவதும் கண்காணிப்பு இருந்தாலும் அதை மீறி பல கட்சிகள் பண விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க., டி.டி.வி. தினகரன் ஆகியோர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் அதிகம் உள்ளன. தேர்தல் ஆணையமும் காவல்துறையும் இதுவரை லட்சக் கணக்கான ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆனால், இம்மாதிரி பணம் பறிமுதல் செய்யப்படும்போது பொதுமக்களில் சிலரே இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது பிற கட்சிகளுக்கு பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர்களுக்கு நேரடியாக அளிக்கப்படும் பணம் தவிர, பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள், வரவேற்பு ஆகியவற்றுக்கும் பெரும் தொகையான பணம் வேட்பாளர்களால் அளிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்