குஜராத் தேர்தல் முடிவுகளின் பின்னணி என்ன?

குஜராத் தேர்தல் முடிவுகளின் பின்னணி என்ன? படத்தின் காப்புரிமை Getty Images

(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

குஜராத்திலும் இமாச்சலப் பிரதேசத்திலும் வெற்றிபெற்றிருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி தன் வசமிருக்கும் மாநிலங்களின் எண்ணிக்கையை 19ஆக உயர்த்தியுள்ளது. சமீபகாலத்தில் நடந்த தேர்தல்களிலேயே குஜராத் பொதுத் தேர்தல் மிக முக்கியமான ஒரு தேர்தலாக அமைந்தது. இது பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலம் என்பதோடு, பா.ஜ.கவின் தலைவர் அமித் ஷாவும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது இதற்கு முக்கியக் காரணம்.

இந்த இரு தலைவர்களுமே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினார்கள். தாங்கள் குறைந்தது 150 இடங்களில் வெற்றிபெறுவோம் என பா.ஜ.க சொன்னது. ஆனால், இரண்டாவது சுற்று வாக்குப் பதிவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளின் முடிவுகளைப் பார்த்தபோது இது நடக்காத காரியம் என்பது புரிந்தது.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் வரும்வரை மாநிலத்தில் பா.ஜ.கவுக்கு பெரும் சவாலாக இருக்க முடிந்ததில்லை.

22 ஆண்டுகளாக அந்த மாநிலத்தை தொடர்ச்சியாக பா.ஜ.க. ஆட்சி செய்திருக்கும்நிலையில், இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியையே சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சங்கர் சிங் வகேலா, தேர்தலுக்கு சில காலம் முன்பாக 13 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் வெளியேறியது இந்தக் கருத்துக்கு வலுச்சேர்த்தது.

சங்கர் சிங் வகேலாவைப் பொறுத்தவரை, உள்ளூர் தலைவர் ஒருவரை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்படிச் செய்யாவிட்டால் காங்கிரசிற்கு வாய்ப்பு இருக்காது என்றார் அவர். தான் தான் அந்த உள்ளூர்த் தலைவர் என காங்கிரஸ் கூற வேண்டுமென்பது அவரது விருப்பம். மோதியும் அமித் ஷாவும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் புதிதாக ஒரு தலைவரை முன்னிறுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்றார் வகேலா. ஆனால், காங்கிரசில் நிலைமை அப்படியில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் காங்கிரஸ் தலைமை இதை ஏற்கவில்லை. பிராந்திய ரீதியாக சக்தி வாய்ந்த தலைவர்கள் உருவாவதை இப்போதும் காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. சங்கர் சிங் வகேலாவுடன் அவருடைய மகன் மகேந்திர சிங் வகேலாவும் கட்சியிலிருந்து வெளியேறினார். இவர்கள் இருவருமே இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

சங்கர் சிங் வகேலாவுடன் வெளியேறிய 12 எம்.எல்.ஏக்களுக்கும் பா.ஜ.க. அவர்களுடைய தொகுதியிலேயே போட்டியிட வாய்ப்பளித்தது. இவர்களில் 7 பேர் வெற்றிபெற்றனர். 5 பேர் தோல்வியடைந்தனர். ஜிக்னேஷ் மேவானி, ஹர்தீக் படேல், அல்பேஷ் தாகூர் போன்ற இளைஞர்கள், எப்படி முதல் முறை வாக்காளர்களை காங்கிரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார்கள் என்பது குறித்துத்தான் இப்போது ஒரே பேச்சாக இருக்கிறது.

ஆனால், காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்திய விதம் குறித்து இஸ்லாமிய சமூகத்தினரிடையே பெரும் வருத்தம் இருக்கிறது. முஸ்லிம்கள், தலித்துகள் ஆகியோர்தான் காங்கிரசின் முக்கியமான வாக்கு வங்கிகள். ஆனால், ராகுல் காந்தி முஸ்லிம்களிடமிருந்து விலகிச்சென்றவரைப் போல நடந்துகொண்டார்.

இந்த இரு சமூகத்தினரின் வாக்குகள் இணைந்தாலும்கூட, பெரும்பான்மை கிடைக்காது என்பதுதான் காங்கிரசின் போக்கிற்குக் காரணம். அதற்கு சில பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளும் தேவை. ராகுல் காந்தி கோவில்களுக்குச் சென்றது, அவர் பிராமணர்தான் என காங்கிரஸ் சொன்னது எல்லாமே ஒரு மிதமான இந்துத்துவத்தை அக்கட்சி பின்பற்றுகிறது என்பதைக் காட்டும் முயற்சிதான். ஆனால், முடிவில் இது எதுவுமே முக்கியமானதாக இருக்கவில்லை.

கிராமப்புறங்களில் மோதி மீது இருந்த அதிருப்தி காங்கிரசிற்கான வாக்குகளாக மாறியது. நகர்ப்புறங்களில் காங்கிரஸ் மீதிருந்த சந்தேகம் பா.ஜ.கவை ஆட்சிக்கு வரவைக்க உதவியது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்