ஒகி புயல் பாதிப்பை எதிர்கொள்ள ரூ.9,300 கோடி கோருகிறது தமிழ்நாடு

படத்தின் காப்புரிமை DIPR

டிசம்பர் மாத துவக்கத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களையும் விவசாயப் பிரதிநிதிகளையும் இந்தியப் பிரதமர் மோதி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். புயலின் பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு 9,300 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டுமென பிரதமரிடம் மாநில அரசு கோரியுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளான லட்சத் தீவுகள், திருவனந்தபுரம், கன்னியாகுமரி பகுதிகளுக்கு இன்று வந்த நரேந்திர மோதி மறுவாழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

செவ்வாய்க்கிழமையன்று ராணுவ விமானம் மூலம் லட்சத் தீவுகளுக்கு வந்த பிரதமர் புயல் சேதங்களைப் பார்வையிட்டார். இதற்குப் பிறகு திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோதி, அங்கு முதல்வர் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பிறகு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு பிற்பகல் இரண்டேகால் மணியளவில் வந்த பிரதமரை உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதிகம் பாதிக்கப்பட்ட 8 கிராமங்களிலிருந்து மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த தலா 3 பேரும் பங்குத் தந்தைகள் எட்டு பேரும் மீனவப் பிரதிநிதிகள் 16 பேரும் பிரதமரை சில நிமிடங்கள் சந்தித்துப் பேசினர்.

இதற்குப் பிறகு முதலமைச்சர், ஆளுனர், செயலர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது, வடகிழக்குப் பருவமழையால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்களை எதிர்கொள்ள ஒட்டுமொத்தமாக 9,302 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஒக்கி புயலால் பாதித்த கன்னியாகுமரி

இதற்குப் பிறகு சுமார் 4 மணியளவில் பிரதமர் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டார்.

அங்கிருந்து புறப்பட்ட அவர் திருவனந்தபுரத்தை ஒட்டியுள்ள மீன்பிடிக் கிராமமான பூந்துறையில் தங்கள் உறவினர்களை இழந்த மீனவக் குடும்பத்தினரிடம் பேசிய மோதி, தாங்கள் மீனவர்களுடன் இருப்பதாக உறுதியளித்தார்.

அங்கு கூடியிருந்த மீனவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார்.

தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளுக்கு கூடுதலாக 325 கோடி ரூபாயை உடனடி நிவாரணத் தொகையாக மத்திய அரசு இப்போது அறிவித்துள்ளது. முன்னதாக ஒகி புயல் பாதித்த சமயத்தில் தமிழகத்திற்கு 280 கோடி ரூபாயும் கேரளத்திற்கு 70 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

புயலால் பாதிக்கப்பட்ட 1400 வீடுகளை சீரமைக்க ஒரு வீட்டிற்கு 1.5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :