2ஜி அலைக்கற்றை வழக்கு ஏன் முக்கியமானது?

ஆ.ராசா படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த ஊழல்களில் மிகப் பெரியதாக 2ஜி அலைக்கற்றை வழக்கு பேசப்படுகிறது.

சிபிஐ இரண்டு வழக்குகளையும், மத்திய அமலாக்கத்துறை ஒரு வழக்கையும், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளன.

முதலாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, வழக்கின் தீர்ப்பு வெளியாகிறது.

திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, அவரது மனைவி தயாளு அம்மாள், முன்னாள் தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா உள்ளிட்ட முக்கிய நபர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் ஆகிய தனியார் நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளன.

சிபிஐ குற்றப்பத்திரிகையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ரூ. 30,984 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தொலைத்தொடர்பு உரிமங்களை விண்ணப்பிக்க நிர்ணயித்த கடைசி தேதியை உள்நோக்கத்துடன் ஆ.ராசா மாற்றி முன்கூட்டியே இறுதி செய்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இதன் மூலம் சில தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அவர் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ஆதாயம் அடைந்த தனியார் நிறுவனங்கள் திமுக ஆதரவு கலைஞர் டி.விக்கு கடனாக அளித்ததாகக் கூறப்படும் ரூ. 200 கோடியை லஞ்சம் என்று மத்திய அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வழக்கால் 2009-இல் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. 2011-இல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவுக்கு எதிரான பிரசாரத்திலும் இந்த விவகாரம் முக்கியமானதாக பேசப்பட்டது.

தற்போதும் இந்த வழக்கு எதிர்க்கட்சியாக உள்ள திமுகவிலும் தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :