ஜெயலலிதா வீடியோவை வெளியிட நாளை மாலைவரை தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், Election commission of Inida

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அங்கு அவர் தங்கி சிகிச்சை பெறுவது போல ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் வெளியிட்ட வீடியோ காட்சியை ஊடகங்கள் ஒளிபரப்ப வேண்டாம் என்று அத்தொகுதி தேர்தல் அதிகாரி பிரவீண் நாயர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று காலை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தமது செல்லிடப்பேசியில் வைத்திருந்த வீடியோ காட்சியை ஊடக நிருபர்களுடன் பகிர்ந்தார். இதைத்தொடர்ந்து அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

இதேவேளை, இந்த வீடியோ காட்சி தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்டடன. பல்வேறு இணைய தளங்களிலும் அது வெளியாகியது.

இந்நிலையில் அனைத்து தொலைக்காட்சிகளின் ஆசிரியர்களுக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ள கடிதத்தில் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற விடியோவை வெளியிடுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 126(1) பிரிவின்படி தேர்தல் விதிமீறலாகும் என்று கூறியுள்ளார்.

இதன்படி, தேர்தல் விவகாரத்துடன் தொடர்புடைய எதுவொன்றையும், வாக்குப்பதிவு முடிவடையும் காலத்துக்கு முந்தைய 48 மணி நேரம் வரை காண்பிக்கக் கூடாது என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் வீடியோ காட்சி, நேரடியாகவோ மறைமுகமாகவோ தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லது தேர்தல் நடத்தை விதிகளை பாதிக்கக் கூடிய வகையில் ஒரு விவாதத்தை எழுப்பலாம் என்பதால் அதை வெளியிட வேண்டாம் என்று தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :